மாங்காயும்! தேங்காயும்! இருந்தால் 10 நிமிடத்தில் வித்தியாசமான சூப்பரான குழம்பு செய்து விடலாமே!

mango-kuzhambu1
- Advertisement -

நாம் பொதுவாக மாங்காய் வைத்து மாங்காய் சாம்பார் செய்வது வழக்கம். ஆனால் மாங்காய் வைத்து இப்படி கூட ஒரு சூப்பரான குழம்பு செய்யும் முடியுமா? என்று ஆச்சரியப்படும் வகையில் அமையப் போகிறது இந்த குழம்பு. அவசரமான சமயத்தில் கடகடவென இந்த குழம்பை செய்து முடித்து விடலாம்! மாங்காய் என்றாலே அனைவருக்கும் மிகவும் விருப்பமான ஒரு காயாக இருக்கும். அதில் குழம்பு வைத்துக் கொடுத்தால் வேண்டாம் என்றா கூறப் போகிறார்கள்? சரி, வித்தியாசமான சுவையுடன் கூடிய மாங்காய் குழம்பு செய்வது எப்படி? என்பதை நாமும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

mango-mangaai

‘மாங்காய் குழம்பு’ செய்ய தேவையான பொருட்கள்:
நீளமாக இருக்கும் மாங்காய் – ஒன்று, துருவிய தேங்காய் – அரை மூடி, சின்ன வெங்காயம் – ஐந்து, சீரகம் – ஒரு டீஸ்பூன், வரமிளகாய் – 6, மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவிற்கு.

- Advertisement -

‘மாங்காய் குழம்பு’ செய்முறை விளக்கம்:
முதலில் பெரிய முற்றிய நீளம் மாங்காய் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அது நன்கு புளிப்பும், இனிப்பாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதனை நன்கு கழுவி சுத்தம் செய்து பின்னர் தோலுடன் விரல் நீள அளவிற்கு தனித்தனி துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அரை மூடி தேங்காயை நன்கு துருவி வைத்துக் கொள்ளுங்கள் அல்லது சில்லுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் சேர்த்து காம்பு நீக்கிய காய்ந்த மிளகாய்கள், ஒரு டீஸ்பூன் சீரகம், சின்ன வெங்காயம் மற்றும் மஞ்சள்தூள் இவை அத்தனையும் சேர்த்து பேஸ்ட் போல் நன்கு நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

mangai

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் அடி கனமான வாணலி ஒன்றை வையுங்கள். தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். இந்த குழம்பு செய்ய தேங்காய் எண்ணெய் ஊற்றினால் இன்னும் நன்றாக இருக்கும் ஆனால் சிலருக்கு தேங்காய் எண்ணெயின் வாசம் பிடிக்காது எனவே உங்களுக்குப் பிடித்தமான எண்ணெயை ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் அரைத்து வைத்துள்ள மசாலா கலவை மற்றும் நறுக்கி வைத்துள்ள மாங்காய் துண்டுகளை சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள்.

mango-kuzhambu

குழம்பு கொதித்து சுண்டி வந்ததும் ஒருபுறம் தாளிப்பு கரண்டியை வைத்து சூடாக்குங்கள். அதில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்து குழம்பில் சேர்த்து அடுப்பை அணையுங்கள். மிகவும் சுலபமாக செய்யக்கூடிய மாங்காய் குழம்பு அட்டகாசமான சுவையில் இப்போது தயாராகி இருக்கும். சுவையும், வாசனையுமான இந்த மாங்காய் குழம்பை நீங்களும் உங்கள் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் செய்து கொடுத்து அசத்தி விடுங்கள்.

- Advertisement -