இயற்கை விவசாயத்திற்கு உதவி செய்யும் மண்புழு உற்பத்தியை தொட்டியில் அதிகப்படுத்துவது எப்படி? வீட்டுத்தோட்ட வளர்ப்பில் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்!

malli-manpuzhu-uram

வீடுகளில், மாடிகளில் நீங்கள் வளர்க்கும் சிறிய அளவிலான தோட்டங்கள் செழிப்பாக வளர இயற்கை உரங்களை பயன்படுத்துவது நல்லது. இயற்கையாக கிடைக்கும் பொருட்களை கொண்டு உரத்தை போட்டு செடிகளை வளர்க்கும் பொழுது தான் நமக்கு ஆரோக்கியம் செழிக்கும். அப்படி இயற்கை விவசாயத்திற்கு உதவி செய்யும் மண்புழு உரம் பற்றிய தகவல்களையும், செடி வளர்ப்புக்கு தேவையான முக்கிய குறிப்புகளையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

manpuzhu-uram

தொட்டியில் மண்புழு உற்பத்தியை பாதிக்கக் கூடிய சில விஷயங்கள் என்ன? மண்புழுவை அதிகரிக்க என்ன செய்யலாம்? புதிதாக செடியை வைப்பவர்கள் செய்ய வேண்டிய முக்கிய விஷயம் என்ன? இப்படி முக்கிய தகவல்களை தெரிந்து வைத்திருப்பது மிகவும் நல்லது. புதிதாக ஒரு செடியை வளர்க்க விரும்புபவர்கள் மண்ணின் தரத்தை சரி பார்ப்பது நல்லது. வீட்டில் தேவையில்லாமல் தூக்கி எரியும் காய்கறி கழிவுகள், பழக்கழிவுகள் அல்லது சாதம் வடிக்கும் தண்ணீர், காய்கறி வேக வைக்கும் தண்ணீர் போன்றவற்றை வீணாக்காமல் செடிகளுக்கு எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.

எந்த ஒரு கழிவுகளையும் அப்படியே போடுவதை காட்டிலும் அதனை வெயிலில் நன்கு உலர்த்தி தனித்தனியாக பவுடராக்கி வைத்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு வெங்காய தோல், பூண்டு தோல், வாழைப்பழ தோல், முட்டை ஓடு, தேங்காய் நார், எல்லாவற்றிலும் ஒரு ஒரு ஸ்பூன் சேர்த்து வைத்து அதிலிருந்து ஒரு ஸ்பூன் செடிகளுக்கு கொடுத்தால் கூட போதும். செடிகள் கொத்து கொத்தாக பூக்களையும், காய்களையும் நமக்கு வாரி வழங்கும். அப்படியே போடுவதால் மட்குவதில் காலதாமதம் ஏற்படும். இப்படி போட்டால் எளிதாக மட்கும்.

plant-honey

புதிய செடிக்கு ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து அதனை மண்ணில் தெளித்து விட்டால் போதும். செடிகள் நன்கு செழிப்புடன் துளிர் விட ஆரம்பிக்கும். மண்புழு உரம் போடுபவர்கள் அதற்கு வேப்ப எண்ணெய் அல்லது வேப்பம் புண்ணாக்கு போன்றவற்றை சேர்த்து போட வேண்டும். அப்போது தான் மண்புழுவை பாதிக்க செய்யும் எறும்புகள் தொல்லை தீரும். எந்த வகையான செடியாக இருந்தாலும் அதற்கு தேவையான உரத்தை ஒரு ஸ்பூன் அளவுக்கு கொடுத்தால் போதும். அதே போல எதையும் வேர் பகுதியை சுற்றிலும் போட்டுவிட்டு வேப்பம் புண்ணாக்கை தூவி விடுங்கள். இதனால் பூச்சிகளும், எறும்புகளும் வராமலிருக்கும். மேலும் மண்ணில் இருக்கும் மண்புழுவும் தனது உற்பத்தியை அதிகரிக்கும்.

மண்புழு இயற்கை விவசாயியின் உற்ற நண்பனாக பார்க்கப்படுகிறது. மண்ணில் இருக்கும் புழு நெளிந்து நெளிந்து மண்ணிற்கு ஆக்ஸிஜனை கொடுக்கிறது. மேலும் அது இடும் எச்சங்களில் இருக்கும் சத்துக்கள் செடிகளுக்கு செழிப்பைக் கொடுக்கின்றன. இதனால் மண்புழுவை பெருக செய்ய வேண்டும். மல்லிகை, முல்லை போன்ற பூச்செடிகள் கொத்துக் கொத்தாக பூக்கள் பூக்க அதனை கவாத்து செய்ய வேண்டும். அதாவது அடிக்கடி வெட்டிவிட வேண்டும். நீங்கள் ஒருமுறை பூக்களை பறித்து பின்பு அதன் இலைகளை வெட்டி விடும் பொழுது மீண்டும் புதிதாக முளைக்கும் இலைகளில் இருந்து நிறைய பூக்கள் கொத்துக் கொத்தாக வரும்.

jasmine

நீங்கள் இலைகளை வெட்டினால் பூக்கள் பூக்காது என்று நினைத்துக் கொள்வது தவறு. செடிகள் செழிக்க இதுபோல இயற்கை உரங்களைப் பயன்படுத்தும் பொழுது நிறைய மகசூல் கிடைக்கும். இதனால் எறும்புகள், பூச்சித் தொந்தரவுகளும் ஏற்படாமல் பாதுகாக்கலாம். மண்புழு அதிகரிக்க செடிகள் செழித்து வளர வேப்பம் புண்ணாக்கு தூவி அதன் மேல் தென்னங்கீற்று, மக்கிப் போன இலைகள் அல்லது கரும்புச் சக்கைகள் போன்றவற்றை லேசாக மண்ணை சுற்றிலும் வெயிலில் நன்கு காய வைத்து தூவி விட வேண்டும். இப்படி செய்யும் பொழுது இலைகள், தண்டுகள் என்று அத்தனையும் பசுமையுடன் வளர ஆரம்பிக்கும்.