மந்திர வாளும் இளவரசிக்கான போரும் – விக்ரமாதித்தன் கதை

vikramathithan-kathai-1
- Advertisement -

நள்ளிரவு வேளையில் அடர்ந்த காட்டில் ஓநாய்களும், பேய்களும் எழுப்பும் சத்தங்களைக் கேட்டு சிறிதும் அஞ்சாமல், வேதாளத்தை சுமந்து நடந்து கொண்டிருந்த விக்கரமாதித்யனிடம் அந்த வேதாளம் ஒரு கதை சொல்ல ஆரம்பித்தது.

vikramathitan

ஒரு முறை “சந்திரசேனன்” என்ற மன்னன் “நாகபுரி” என்கிற நாட்டை ஆண்டு வந்தான். அவனுக்கு “ரூபவதி” என்ற மகளிருந்தாள். இளவரசியான ரூபவதி திருமண வயதை எட்டியதும் அவளுக்கேற்ற ஒரு இளவரசனை அவளுக்கு திருமணம் செய்து வைக்க தேடிக்கொண்டிருந்தார் அவளது தந்தை சந்திரசேனன். இதையறிந்த ரூபவதி தன் தந்தை சந்திரசேனன் தேர்ந்தெடுக்கும் இளவரசனை தான் திருமணம் செய்து கொள்ள முடியாதென்றும், மாறாக எந்த இளவரசன் அவனது திறமையை தன்னிடம் நிரூபிக்கின்றானோ, அந்த இளவரசனையே தாம் திருமணம் செய்து கொள்ளப்போவதாக திட்டவட்டமாக கூறிவிட்டாள். அவளின் முடிவை ஏற்ற அவளின் தந்தையும் மற்ற நாட்டு இளவரசர்களுக்கு தன் மகளின் சுயம்வரத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார்.

- Advertisement -

அந்த சுயம்வாரத்தில் “உபேந்திரன், யோகேந்திரன், தனஞ்செயன்” என்ற மூன்று வேறு வேறு நாடுகளைச் சேர்ந்த இளவரசர்கள் கலந்து கொண்டார்கள். அதில் முதலில் உபேந்திரன் ரூபாவதியிடம் சென்று தனக்கு எந்த ஒரு விஷயத்திலும் அதன் கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலத்தை அறியக்கூடிய திறன் இருப்பதாக கூறினான். இரண்டாவதாக வந்த யோகேந்திரன் தன்னிடம் தான் தயாரித்த அற்புதமான ரதம் ஒன்று இருப்பதாகவும், அது நிலம், நீர், ஆகாயம் என மூன்று வழிகளிலும் பயணம் செய்யக்கூடியது என்று கூறினான். மூன்றாவதாக வந்த தனஞ்செயன் தான் உருவாக்கிய “அற்புத வாள்” ஒன்று தன்னிடம் இருப்பதாகவும், அதை கொண்டு சண்டையிடும் போது எதிராளிக்கு மரணம் நிச்சயம் என கூறினான்.

King

இதையெல்லாம் கேட்ட ரூபவதி அந்த மூவரில் தான் திருமணம் செய்து கொள்ள விரும்புவது யார்? என்பதை மறுநாள் கூறுவதாக கூறி தன் அந்தப்புரம் சென்றாள். மறுநாள் அந்த மூன்று இளவரசர்களும் மற்றும் எல்லோரும் அரசவையில் ரூபவதி வருகைக்காக காத்திருந்தனர். ஆனால் ரூபவதி அரண்மனையில் எங்கு தேடியும் இல்லை என்ற செய்தி வந்தது. அப்போது இளவரசன் உபேந்திரன் தன் முக்கால ஞானத் திறனைக் கொண்டு ரூபவதி சில அரக்கர்களால் கடத்தப்பட்டு, யாருமே எளிதில் செல்ல முடியாத ஒரு மலையுச்சியில் சிறை வைக்கப்பட்டிருப்பதாக கூறி, அங்கு செல்வதற்கான வரைபடத்தையும் வரைந்து கொடுத்தான்.

- Advertisement -

இதைக் கேட்ட யோகேந்திரன் தன்னுடைய அதிசய ரதத்தின் மூலம் யாருமே செல்ல முடியாத அந்த மலைக்கோட்டைக்கு செல்ல முடியும் என்று கூறினான். அப்போது உபேந்திரனும், தனஞ்செயனும் யோகேந்திரனின் அந்த ரதத்தில் ஏறிக்கொண்டனர். உடனே அந்த ரதம் பறந்து அந்த மலை உச்சியை அடைந்தது. அப்போது அங்கிருந்த அரக்கர்கள் இந்த மூன்று இளவரசர்களையும் தாக்க முற்பட்டனர்.

sward

அப்போது இளவரசன் தனஞ்ஜெயன், தன்னிடம் இருந்த அற்புத வாளைக்கொண்டு அந்த அரக்கர்களுடன் சண்டையிட்டு, அவர்களைக் கொன்று அங்கு சிறை வைக்கப்பட்ட ரூபவதியை மீட்டான். பின்பு அந்த நால்வரும் அந்த ரத த்தில் நாகபுரிக்கு திரும்பினர். இப்போது அம்மூன்று இளவரசர்களும் ஆளாளுக்கு தங்களுடைய திறனால் தான் இளவரசி ரூபவதி மீட்கப்பட்டதாக கூறி, அவர்கள் மூவரும் தங்களுக்கு தான் ரூபவதியை திருமணம் செய்யும் உரிமையுள்ளது என ஒரே நேரத்தில் உரிமை கோரினர். “விக்ரமாதித்தியா இந்த மூவரில் யாருக்கு உண்மையில் ரூபவதியை திருமணம் செய்ய உரிமை உள்ளது? என அந்த வேதாளம் கேட்டது.

- Advertisement -

vikramathithan kathai

“உபேந்திரன் அந்த மலையில் இளவரசி சிறை வைக்கப்பட்டிருப்பதையும், அங்கு செல்வதற்கான வழியை மட்டுமே கூறினான். யோகேந்திரன் மற்ற இரண்டு இளவரசர்களுடன் சேர்ந்து, அந்த மலைக்கு தன் அற்புத ரதத்தைக் கொண்டு அங்கு செல்வதற்கு மட்டுமே உதவினான். ஆனால் தனஞ்ஜெயன் தன் அற்புத வாளைக்கொண்டு, வீரத்தோடு அத்தனை அரக்கர்களுடனும் சண்டையிட்டு அவர்களைக் கொன்று, இளவரசி ரூபவதியை மீட்டான். தன்னை நம்பியவர்களை தன் உயிரை பணயம் வைத்து காப்பவன் தான் சிறந்த மனிதன். எனவே இளவரசன் தனஞ்ஜெயனே ரூபவதியை திருமணம் செய்து கொள்ளும் தகுதி உடையவன்” என்ற விக்ரமாதித்தியனின் பதிலைக் கேட்டதும் வேதாளம் அவனது பிடியிலிருந்து தப்பி, பறந்து சென்றது.

இதையும் படிக்கலாமே:
சிங்கத்திற்கே உயிர் கொடுத்த மூவர் – விக்ரமாதித்தன் கதை

இது போன்ற மேலும் பல விக்ரமாதித்தன் கதைகள் மற்றும் சிறுவர்களுக்கான தமிழ் கதைகள் பலவற்றை அறிய தெய்வீகம் பக்கத்தோடு இணைந்திருங்கள்.

- Advertisement -