மாசி மகம் என்றாலே நம் நினைவுக்கு வருவது புனித நீராடுதல். தெப்பக்குளம் இருக்கும் கோவில்களில் எல்லாம் தீர்த்த வாரி நடைபெறும். அப்படி என்றால், எல்லா தெய்வங்களும் வந்து நாளைய தினம் புண்ணிய நதிகளில் நீராடுவதாக ஒரு நம்பிக்கை. இந்த நாளில் கும்பகோணம் மகா மகத்தில் புனித நீராடினால், நம்முடைய பாவங்கள் விலகும் என்பதும் நம்பிக்கை.
கும்பகோணம் மட்டும் அல்லாமல் இன்னும் நம்முடைய ஊரில் இருக்கும் ஆத்தங்கரை, ஏரிக்கரை, கடற்கரையில், கோவில்களில் இருக்கும் தெப்பக்குளங்களில் புனித நீராடி மக்கள் இந்த மாசி மகத்திருநாளை கொண்டாடுவார்கள். மாசி மகத்தன்று நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பதும் வழக்கம். அந்த வகையில், எல்லோராலும் ஒரு பிரசித்தி பெற்ற ஸ்தலத்திற்குச் சென்று புனித நீராட முடியாத சூழ்நிலை இருக்கும்.
வீட்டிலிருந்தபடியே நம்முடைய பாவங்கள் நீங்க, நாளைய தினம் குளிக்கின்ற தண்ணீரில் எந்தெந்த பொருட்களை சேர்க்கலாம், எந்த ஒரு வார்த்தையை சொல்லி நாளைய தினம் வீட்டிலிருந்தபடியே நீராடினால், நமக்கு இருக்கும் பாவங்கள் நீங்கும் என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த ஒரு தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
மாசி மகம் 2025
நாளைய தினம் சிவபெருமானுக்கு, பெருமாளுக்கு, சக்தி தேவைக்கு, முருகனுக்கு இப்படி எல்லா தெய்வங்களுக்கும் உகந்த நாளாக இருக்கிறது. நாளைய தினம் எந்த தெய்வத்தை வழிபாடு செய்தாலும், நமக்கு புண்ணியம் வந்து சேரும்.
மாசி மகம் தீர்த்த பரிகாரம்
நாளை பரிகாரம் செய்வதற்கு, இன்று இரவு ஒரு சின்ன பித்தளை சொம்பு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான குடிக்கின்ற தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். அந்த தண்ணீரில் வில்வ இலை, துளசி இலை, கொஞ்சமாக சந்தனம், வேப்ப இலை, மஞ்சள் தூள், இந்த 5 பொருட்களையும் போட்டு கலந்து குலதெய்வத்தை வேண்டி பூஜை அறையிலேயே ஒரு தட்டு போட்டு மூடி வைத்து விடுங்கள்.
மறுநாள் காலை எழுந்து இந்த தண்ணீரை அப்படியே குளிக்கின்ற தண்ணீரோடு கலந்து விட வேண்டும். வலது கை ஆள்காட்டி விரலால் அந்த தண்ணீரில் “ஹரி ஓம்” என்ற வார்த்தையை எழுதி விடுங்கள். பிறகு கிழக்கு பார்த்தவாறு நின்று இந்த தீர்த்தத்தை கொண்டு தலைக்கு குளித்து விட வேண்டும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நாளைய தினம் குளிக்கலாம். நாளை சூரிய உதயத்தின் போது காலை 6 மணிக்கு இந்த குளியலை மேற்கொள்ள வேண்டும்.
தீர்த்தத்தை தலையில் எடுத்து ஊற்றும்போது “ஹரி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம்” என்று மூன்று முறை சொல்லிவிட்டு, “ஆதிகும்பேஸ்வரா போற்றி போற்றி! அம்மா பராசக்தி போற்றி போற்றி” என்று சொல்லி புனித நீராடி விடுங்கள். அவ்வளவுதான் செய்த பாவத்திற்கான மன்னிப்பும் உங்களுக்கு கிடைக்கும். புனித நீராடிய புண்ணியமும் உங்களை வந்து சேரும். கும்பகோணத்தில் இந்த மாசி மக திருவிழா பிரசித்தியாக நடைபெறுகிறது அல்லவா. அந்த கும்பகோண கோவிலில் இருக்கும் ஈசன், இந்த ஆதி கும்பேஸ்வரர் தான்.
குளித்து முடித்துவிட்டு, பூஜை அறையில் வந்து விளக்கு ஏற்றி, குலதெய்வத்தை நினைத்து வழிபாடு செய்வது சிறப்பான பலனைத் தரும். உங்கள் வீட்டு பக்கத்தில் பழமையான சிவன் கோவில், முருகன் கோவில், அம்பாள் கோவில், பெருமாள் கோவில் எது இருந்தாலும், அந்த கோவிலுக்கு சென்று அந்த தெய்வத்திற்கு உகந்த பொருட்களை வாங்கி கொடுத்து, கோவிலில் விளக்கு போட்டு வழிபாட்டை மேற்கொண்டால் குடும்பத்தில் இருக்கும் தீராத துன்பங்கள் தீரும் என்பதும் நம்பிக்கை.
இதையும் படிக்கலாமே: திருஷ்டி நீங்க மரத்தடி மண்
நாளைய தினம் இந்த எளிமையான வழிபாடு அனைவருக்கும் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இன்றைய ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.