இந்த மசாலா இட்லியை ஒரு முறை டேஸ்ட் பார்த்து விட்டால் போதும். மிச்சமாக வேண்டும் என்பதற்காகவே நிறைய இட்லி சுட்டு வைத்து, அந்த இட்லியில் இப்படி மசாலா இட்லி செய்து சாப்பிடுவீர்கள். அந்த அளவிற்கு சூப்பரான சுவையான ஒரு ரெசிபியை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். பொதுவாக காலையில் மிஞ்சிய இட்லியை இரவில் யாருக்கு கொடுத்தாலும் நிச்சயமாக சாப்பிட மாட்டார்கள். ஆனால் இப்படி இட்லி மசாலா செய்து கொடுத்து பாருங்கள். உனக்கா எனக்கா என்று அடித்துக் கொண்டு சாப்பிடுவார்கள். சரி, நேரத்தைக் கடத்த வேண்டாம் ரெசிபியை பார்க்கலாம்.
முதலில் 6 இட்லியை எடுத்துக்கொள்ளுங்கள். புதிதாக வேக வைத்த இட்லி யாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் அது நன்றாக ஆறிய இட்லி ஆக இருக்கவேண்டும். சுடச்சுட இட்லியில் இதை செய்யக்கூடாது. இட்லிகளை சிறிய துண்டுகளாக வெட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ள வேண்டும். அதில் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1 ஸ்பூன், சோம்பு – 1/2 ஸ்பூன், இடித்த பூண்டு – 6 பல், வறமிளகாய் – 2, பச்சை மிளகாய் – 3 உடைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும். கருவேப்பிலை – 2 கொத்து சேர்த்து பூண்டு லேசாக பொன்னிறம் வரும் வரை வதக்க வேண்டும். (மிளகாய்த்தூள் காரத்தை விட பச்சை மிளகாய் காரத்தை தேவையான அளவு சேர்த்துக் கொள்ளுங்கள்.)
அதன் பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 சேர்த்து, லேசாக கண்ணாடி பதம் வரும் வரை வதக்கி விட்டு, பொடியாக நறுக்கிய தக்காளி பழம் – 1 சேர்த்து அதையும் ஒரு நிமிடம் மட்டும் வதக்கி விட்டு தனியாத்தூள் – 3/4 ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன், மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன், உப்பு தேவையான அளவு சேர்த்து ஒரு நிமிடம் மட்டும் எல்லா மசாலாப் பொருட்களையும் கலந்து விட்டு, 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் ஊற்றி இந்த மசாலாக்களை இரண்டு நிமிடம் வேக வைத்துக் கொள்ளுங்கள் போதும்.
அதன்பின்பு டொமேட்டோ கெட்சப் – 3 டேபிள்ஸ்பூன் ஊற்றி மசாலா பொருட்களோடு கலந்து விட்டு உடனடியாக வெட்டி வைத்திருக்கும் இட்லிகளை கடாயில் உள்ள மசாலாவில் போட்டு அடுப்பை முழு தீயில் வைத்து 2 நிமிடம் பிரட்டி அப்படியே அடுப்பை அணைத்துவிடுங்கள். மேலே கொத்தமல்லி தழை தூவி சுடசுட இந்த இட்லியை சாப்பிட்டு பாருங்கள். அத்தனை ருசியாக இருக்கும்.
உங்கள் குழந்தைகளுக்கு ஈவினிங் டைமில் இதைச் சுட சுட ஸ்நாக்ஸாக கூட செய்து தரலாம். விருப்பமாக சாப்பிடுவார்கள். இட்லியைப் பிடிக்காதவங்க கூட இந்த மசாலா இட்லியை விருப்பமா சாப்பிடுவாங்க. உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா உங்க வீட்லயும் மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.