செய்த இட்லி மீதியாகிவிட்டதா? கவலைப்படாமல் இப்படி சுவையான காலை உணவை இந்த இட்லி வைத்து முடித்து விடலாமே!

upma
- Advertisement -

ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை வேளையில் இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல் போன்ற டிபன் வகைகளை தான் சாப்பிட்டு வருகின்றோம். ஆனால் ஒரு சில நேரங்களில் சப்பாத்தி, பூரி மற்றும் இட்லி செய்யும் பொழுது அவை கொஞ்சம் அளவுக்கு அதிகமாகி விடும். எனவே மறுநாள் இவற்றை கீழே தூக்கி எறிய வேண்டிய நிலைமை உண்டாகும். ஆனால் ஏதாவது ஒரு நாள் இப்படி நடந்தால் பரவாயில்லை, அடிக்கடி இதுபோல் நடந்தது என்றால் உணவை வீணாக்குவது என்பது நல்லதல்ல. எனவே மீதமாகும் இட்லியை இப்படி சுடச்சுட சுவையான உணவாக செய்து கொடுத்தால், அன்றைய காலை உணவு என்பது முடிந்துவிடும். இதனை இப்படி சுவையாக செய்து கொடுக்கும் பொழுது மீதியான இட்லியில் செய்தது என்று எவராலும் கண்டுபிடிக்க முடியாத சுவையில் இருக்கும். வாருங்கள் இந்த இட்லி உப்மாவை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
மீதமான இட்லி – 6, வெங்காயம் – 2, காய்ந்த மிளகாய் – 3, கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், உப்பு – அரை ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, எண்ணெய் – 3 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் மீதமான இட்லியை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றை கைகளால் பிசைந்து உதிரி உதிரியாக செய்து கொள்ள வேண்டும். பின்னர் இரண்டு வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைக்க வேண்டும்.

அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். கடாய் நன்றாக சூடானதும் அதில் மூன்று ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் அரை ஸ்பூன் கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். கடுகு பொரிந்ததும் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, ஒரு ஸ்பூன் கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். அதன் பின்னர் மூன்று வர மிளகாயை இரண்டாகக் கிள்ளிப் போட்டு வதக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வதங்கியதும் இவற்றுடன் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு இவற்றுடன் உதிர்த்து வைத்துள்ள இட்லி துண்டுகளை சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். பிறகு ஐந்து நிமிடத்திற்கு நன்றாக கலந்து கொண்டே இருக்க வேண்டும். அதன் பின்னர் உதிர்த்து வைத்த இட்லி துண்டுகள் நன்றாக சூடானதும் அடுப்பை அனைத்துவிட்டு, இந்த இட்லி உப்மாவை சுட சுட பரிமாறி கொடுத்தால் போதும். இதனுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சட்னி கூட தேவையில்லை. அப்படியே சாப்பிட்டாலும் அசத்தலான சுவையில் இருக்கும்.

- Advertisement -