இந்த உலகத்திற்கே தாயாக இருந்து, காத்து ரட்சிப்பவள் அன்னை மீனாட்சி. சித்திரை திருவிழா மதுரை மாநகரில் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சித்திரை திருவிழாவில் மிக மிக முக்கியமான நாளாக சொல்லப்படும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளைய தினம் நடைபெறவிருக்கிறது.
மே மாதம் 8ம் தேதி நடைபெறவிருக்கும் இந்த திருக்கல்யாண வைப்பவ நாளில், நாம் பின்பற்ற வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னென்ன, நாளைய தினம் பெண்கள் தாலிக்கயிறு மாற்றிக் கொள்ள வேண்டிய நேரம் என்ன, நாளைய தினம் பூஜை அறையில் மீனாட்சி வழிபாட்டை சுலபமான முறையில் எப்படி மேற்கொள்வது என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த சில தகவல்களை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
நாளைய தினம் வியாழக்கிழமை இது பெருமாளுக்கு உரிய நாளாக சொல்லப்பட்டுள்ளது. மீனாட்சியின் சகோதரர் பெருமாளுக்கு உரிய வியாழக்கிழமை அன்று இந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடப்பது சிறப்பு. அதுமட்டுமல்லாமல் மகாலட்சுமிக்கு உரிய உத்திர நட்சத்திரத்தன்று இந்த தினம் வந்திருப்பது இரட்டிப்பு பலனை கொடுக்கும்.
நாளைய தினம் தேவை உள்ளவர்கள் மட்டும் திருமாங்கல்ய கயிறு மாற்றிக் கொண்டால் போதும். அனைவரும் கட்டாயம் நாளைய தினம் திருமாங்கல்யத்தை மாற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே தாலிக்கய கயிறு புதுப்பிக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.
நாளை மே 8ம் தேதி காலை 8:35 மணி முதல் 8:59 மணிக்குள் மதுரை மாநகரில் மீனாட்சிக்கும் சுந்தரேஸ்வரருக்கும் கல்யாண வைபவம் நடைபெறவிருக்கிறது. இந்த இடைப்பட்ட நேரத்தில் தான் வீட்டில் இருக்கும் பெண்களும் தாலி கயிறு மாற்றிக் கொள்ள வேண்டும். காலை 8 மணி அடிக்கும்போதே வீட்டில் பூஜை வேலைகளை எல்லாம் முடித்து விடுங்கள். மீனாட்சி திருவுருவப்படத்திற்கு அலங்காரம் செய்து உங்களால் முடிந்த ஒரு இனிப்பு நெய்வேதியம் தயார் செய்து கொள்ள வேண்டும்.
நாளை எல்லா தொலைக்காட்சிகளிலும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை நேரடியாக ஒளிபரப்பு செய்கிறார்கள். ஆகவே தொலைக்காட்சி பெட்டியின் மூலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை பார்த்துவிட்டு மீனாட்சி கழுத்தில் மாங்கல்யம் ஏறிய பிறகு நீங்களும் உங்களுடைய கழுத்தில் திருமாங்கல்யத்தை எடுத்து போட்டுக் கொள்ளலாம்.
கணவர் பக்கத்தில் இருந்தால், கணவர் கையில் மாங்கல்யத்தை போட்டுக் கொள்ளுங்கள். கணவர் பக்கத்தில் இல்லாத பட்சத்தில், வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அது கையால் இந்த திருமாங்கல்யத்தை கழுத்தில் போட்டுக் கொள்ளலாம். யாருமே இல்லை என்றால் நீங்களே உங்களுடைய கழுத்தில் இந்த திருமாங்கல்யத்தை மாற்றிக் கொள்ளுங்கள். அவசரம் அவசரமாக இந்த முகூர்த்த நேரத்திலேயே தாலி கயிறு புதுப்பித்து கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
இந்த முகூர்த்த நேரத்திற்கு முன்கூட்டியே புது மஞ்சள் கயிறில் சரடுகளை கோர்த்து மீனாட்சியின் திரு உருவ படத்திற்கு முன்பாக, உங்கள் மாங்கல்யத்தை வைத்து விடுங்கள். நாளை மதுரையில் மீனாட்சி கழுத்தில் மாங்கல்யம் ஏறிய பிறகு, நீங்களும் இந்த மாங்கல்யத்தை எடுத்து உங்கள் கழுத்தில் அணிந்து கொள்ளலாம். அதன் பிறகு செய்து வைத்த நெய்வேதியத்தை மீனாட்சியின் திருவுருவப்படத்திற்கு முன்பாக வைத்து, குடும்ப நலனுக்காக பிரார்த்தனை செய்து, தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு கற்பூர ஆராதி காண்பது பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.
திருக்கல்யாணம் முடிந்தவுடன் விருந்து வைப்பது நம்முடைய வழக்கம். உங்களது கையால் இரண்டு பேருக்காவது நாளைய தினம் சாப்பாடு வாங்கிக் கொடுக்கலாம், அல்லது உங்கள் கையாலேயே சமைத்தும் சாப்பாடு போடலாம். அது உங்களுடைய விருப்பம். நாளைய தினம் மீனாட்சி திருக்கல்யாணத்தை பார்ப்பதற்கு நமக்கு இருக்கும் இரண்டு கண்கள் போதாது. நாளைய தினம் மீனாட்சி திருக்கல்யாணத்தை பார்ப்பவர்கள் வீட்டில் சந்தோஷம் நிலைத்திருக்கும்.
செல்வ வளம் அதிகரிக்கும். வறுமை நீங்கும். கணவன் மனைவி சண்டை சரியாகி குடும்பத்திற்குள் ஒற்றுமை நிலவும். திருமணமாகாத கன்னிப்பெண்கள் இந்த கல்யாண வைபவத்தை கண்டால் சீக்கிரம் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. இதையெல்லாம் கேட்கும்போது அந்த மதுரை மாநகரில் நாம் பிறக்கவில்லையே என்ற ஏக்கம் நமக்குள் வரும். மதுரையில் பிறந்தால் மட்டும்தான் மீனாட்சிக்கு குழந்தையாக இருக்க முடியுமா.
இந்த பூமியில், எந்த இடத்தில் பிறந்திருந்தாலும் அந்த மீனாட்சிக்கு நாம் குழந்தையாக தான் இருப்போம். நாளைய தினம் திருக்கல்யாண வைபவத்தை யாரும் தவற விடாதீங்க. நேரில் சென்று மீனாட்சியை தரிசனம் செய்ய முடியாதவர்கள் கூட தொலைக்காட்சியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை பார்த்து வேண்டிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அடுத்த வருடம் உங்களுக்கு அந்த திருக்கல்யாணத்தை நேரில் பார்க்கக் கூடிய பாக்கியம் கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே: தீர்க்க சுமங்கலி யோகம் தரும் மீனாட்சி திருக்கல்யாணம்
ஒருமுறை மீனாட்சியம்மனை தரிசனம் செய்து வேண்டுதல் வைத்துவிட்டு வந்தால், மீண்டும் அவளை பார்ப்பதற்கு முன்பாக அந்த வேண்டுதலை மீனாட்சி அம்மன் நிறைவேற்றி வைப்பாள் என்பது பக்தர்களுக்குள் இருக்கும் நம்பிக்கை. அந்த நம்பிக்கை பலித்தும் இருக்கிறது. மீனாட்சி அம்மனின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.