மொட்டை மாடி தோட்டத்தில் புடலங்காய் செடியை இத்தனை சுலபமாக வளர்க்க முடியுமா? செழிப்பான புடலங்காயை அறுவடை செய்ய உங்களுக்கான சுலபமான டிப்ஸ்.

snake-gourd

ஒவ்வொரு நாளும் இந்த உலகம் ஒவ்வொரு விதத்தில் மாற்றமடைந்து வருகிறது. அதில் மக்களின் உணவுமுறையும் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கிறது. அதிலும் நம் இந்திய நாட்டில் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பல அற்புதமான காய், பழ வகைகள் இருந்தாலும் நவ நாகரிக வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கங்கள் காரணமாக அவை அதிக மக்களால்  உண்ணப்படாமல் சிறிது சிறிதாக அழிந்து வருகின்றன. அப்படி நமது நாட்டில் அழிந்து வரும் ஒரு காய் இனங்களில் ஒன்றாக “புடலங்காய்” இருக்கிறது. பல அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த புடலங்காயை நம் வீட்டிலேயே எப்படி வளர்க்கலாம் என்பது குறித்த அவசிய தகவல்களை இங்கே நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

pudalangai-kuttu

வீட்டு மாடியிலேயே புடலங்காய் வளர்க்க தேவையான பொருட்கள்
1) உயர் தரமான புடலங்காய் விதைகள் 20 – 30 வரை.
2) பழைய பிளாஸ்டிக் சாக்கு கோணி பைகள் அல்லது அடி உயரத்திற்கு மேலாக இருக்கும் மண்
தொட்டிகள்.
3) சிறிதளவு ஆற்றுமணல், தென்னை நார்க்கழிவு சிறிதளவு, செம்மண், மண்புழு உரம், பஞ்சகாவ்யா. இந்த பஞ்சகாவியா என்பது உரம் விற்கும் கடைகளில் கிடைக்கும்.
4) நீர் தெளிக்க உதவுகின்ற சிறிய அளவிலான ஸ்பிரேயர் அல்லது பூவாளி தெளிப்பான்கள் மற்றும் புடலங்காய் பந்தல் அமைப்பதற்கான உபகரணங்கள்.

புடலங்காய் விதைகளை விதைப்பதற்கு முன்பாக சாக்கு பை அல்லது மண்சட்டியில் இரண்டு பங்கு அளவு தேங்காய் நார், நல்ல நாட்டு மாடு சாணம் ஒரு பங்கு, உங்கள் வீட்டின் சமையலறைக் கழிவுகள் ஆகியவற்றை சேர்த்து, நன்கு கலந்து சாக்கு பை அல்லது தொட்டியில் இட்டு, ஒரு 12 நாட்களுக்கு நன்கு மட்கி போக விட வேண்டும். இதன் பிறகு நீங்கள் ஏற்கனவே வாங்கி வைத்த புடலங்காய் விதைகளை இந்த கலவையில் விதைக்கலாம்.

புடலங்காய் உயரமாக வளரும் ஒரு கொடிவகையைச் சார்ந்த தாவரம் என்பதால் குறைந்த பட்சம் 3 அடி உயரமாக இருக்கும் சாக்கு பை அல்லது தொட்டிகளில் மண் நிரப்பி, புடலங்காய் விதைகளை நடவேண்டும். புடலங்காய் விதைகளை விதைக்க விரும்புபவர்கள் ஒரு தொட்டியில் அதிகபட்சமாக 4 முதல் 5 புடலங்காய் விதைகளை புதைத்து வைக்கலாம். புடலங்காய் விதைகளை விதைத்த பிறகு சிறிய அளவிலான நீர் தெளிப்பான் கொண்டு நீர் விட வேண்டும். அதன் பிறகு தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறிதளவு நீர் தெளித்து வரவேண்டும்.

- Advertisement -

புடலங்காய் நன்றாக வளர்வதற்கு பந்தல் அமைப்பது மிகவும் முக்கியமானது. உங்கள் வீட்டு மாடியில் நான்கு புறம் நான்கு மண் தொட்டிகளில் மணல் மற்றும் மண்ணை கலந்து நன்றாக நிரப்பி, அதில் மிதமான தடிமன் கொண்ட ஒரே உயர அளவிலான நான்கு மூங்கில் கம்புகளை நட்டு வைக்க வேண்டும். இதன்பிறகு பிளாஸ்டிக் கயிறு அல்லது கம்பியை கொண்டு அந்த நான்கு பக்கம் இருக்கும் கொம்புகளை இணைத்து, பிறகு குறுக்கும் நெடுக்குமாக பந்தல் போன்று கட்டிவிட வேண்டும். இதன் பிறகு நாம் புடலங்காய் விதை போட்டு வளர்ந்து இருக்கும் இளம் புடலங்காய் பயிர்கள் இருக்கின்ற தொட்டி அல்லது பைகளை அந்த நான்கு மூலைகளிலும் தரையிலிருந்து உயரமாக இருக்கும் வகையில் கற்களை வைத்து, அதன் மீது புடலங்காய் தொட்டி அல்லது சாக்கு பைகளை வைத்து, அந்த மூங்கில் கொம்புகளில் புடலங்காய் கொடிகள் படர்ந்து போகுமாறு செய்து விடவேண்டும்.

புடலங்காய் செடி வளருகின்ற காலத்தில் பலவகையான பூச்சிகள் அந்த கொடியினை தாக்குவதற்கு வாய்ப்புகள் அதிகமாகிறது. இத்தகைய பூச்சி தாக்குதல்களை சமாளிக்க இயற்கையான பூச்சிக் கொல்லி மருந்தான வேப்ப எண்ணையை வாங்கி மாதத்திற்கு ஒரு முறை புடலங்காய் செடிகளின் மீது சிறிதளவு தெளித்து வரவேண்டும். மேலும் வேப்ப இலைகளை பறித்து வந்து, நன்கு காயவைத்து அவற்றை தூளாக்கி புடலங்காய் செடியின் வேர் பகுதிகளில் போட்டு வைத்தால், அவை அந்த செடிகளுக்கு இயற்கை உரமாக மாறுவதோடு பூச்சிகளின் தாக்குதல் ஏற்படாமல் காக்கும் அரணாக செயல்படுகிறது.

snake-gourd

புடலங்காய் வளருகின்ற காலத்தில் அந்த செடியின் நுனிக்கிளைகளை அவ்வப்போது வெட்டி விடுவதால் அதிகளவு புடலை கொடிகள் பரவுவதற்கு வாய்ப்பை உண்டாக்குகின்றது. மேலும் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை புடலங்காய் செடி இருக்கின்ற மண்தொட்டியில் உள்ள மண்ணை நன்கு கிளறி விடுவதால் அந்த மண் ஊட்டம் பெற்று, புடலங்காய் செடி விரைவாக வளர் உதவிபுரியும். மேலும் இயற்கை உரமான பஞ்சகவ்யா திரவத்தை வாங்கி ஒரு லிட்டர் தண்ணீரில் 50 மில்லி அளவு கலந்து, புடலங்காய் செடியின் வேர் பகுதிகளில் ஊற்றி வந்தால் புடலங்காய் செடியில் பூக்கள் அதிகமாக பூக்கும்.

மாடியில் புடலங்காய் செடியை நாம் வளர்க்கும் போது அந்த புடலங்காய் செடி அதிகபட்சம் மூன்று மாதங்கள் வரை மட்டுமே பலன் தர கூடியதாக இருக்கும். அதன் பிறகு அந்த செடியில் காய்ந்து போன இலைகள் மற்றும் கிளைகளை வெட்டி, அது வளருகின்ற தொட்டியின் வேர்ப்பகுதிகளிலேயே இயற்கை உரமாக போட்டு பயன்படுத்தலாம். புடலங்காய்கள் நன்கு வளர்கின்றன சமயத்தில், காய்களை முற்ற விடாமல் சரியான பருவத்தில் காய்களை அறுவடை செய்து பயன்படுத்த வேண்டும்.