கீழாநெல்லி இலை இருந்தால் போதும். உங்கள் தலைமுடி தலையோடு இருக்கும். கீழே உதிரவே உதிராது. நாம் எல்லோருக்கும் இந்த கீழாநெல்லி இலையை பற்றி தெரிந்திருக்கும். நிறைய மருத்துவ குணங்களை கொண்ட இந்த இலைக்கு தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்தி, தலை முடியை வலுவாக வளர வைக்கக்கூடிய சக்தி இருக்கிறது. தானாகவே செடி கொடிகளுக்கு இடையே முளைக்கக்கூடிய இந்த கீழாநெல்லியை குப்பையாக நாம் கருதுவோம். ஆனால் இதில் ஏராளமான மகத்துவங்கள் அடங்கியிருக்கிறது.
மகத்துவம் நிறைந்த இந்த கீழாநெல்லி இலையை தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்த எப்படி பயன்படுத்தலாம் என்பதை பற்றிய ஒரு சின்ன குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முதலில் கீழாநெல்லி செடியை எங்கு இருக்கிறது, அதை பார்த்து எடுத்து கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். கீழாநெல்லி செடியின் வேர், காய், இலை, தண்டு பகுதி, என்று ஒரு செடி முழுவதையும் நாம் குறிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஓரளவுக்கு சின்ன செடியாக எடுத்து அதை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். ஒரு கல்லில் வேரை நசுக்கி துண்டு துண்டுகளாக்கி எடுத்து கொள்ளுங்கள். அப்படியே மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்தால் சிக்கிக் கொள்ளும். (ஒன்றும் இரண்டுமாக இடித்து வைத்துக் கொண்டால் கூட போதும்.) சுத்தம் செய்த கீழாநெல்லி வேர் இலை தண்டு இவைகளை மிக்ஸி ஜாரில் போட்டு இரண்டு ஓட்டு ஓட்டிக்கொள்ள வேண்டும். இந்த விழுதை எண்ணெயில் போட்டு காய்ச்ச வேண்டும்.
அடுப்பில் ஒரு இரும்பு கடாயை வைத்து தேங்காய் எண்ணெய் 500ml, என்றால் நல்லெண்ணெய் 250ml, சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் தயாராக நசுக்கி வைத்திருக்கும் கீழாநெல்லி விழுதை போட்டு, எண்ணெயை நன்றாக சூடு செய்யுங்கள். (இரண்டு கைப்பிடி அளவு விழுது இந்த எண்ணெய்க்கு சரியாக இருக்கும்.) இந்த விழுது எண்ணெயில் கொதித்து சிடசிடப்பு அடங்கி, பிரவுன் நிறத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். ஒரு நாள் அப்படியே அந்த எண்ணெய் இருக்கட்டும்.
எண்ணெய் நன்றாக ஆறிய பின்பு நீங்கள் வசிக்கும் இடத்தில் நன்றாக வெயில் அடிக்கும் என்றால், அந்த வெயிலில் எண்ணெயை காய வைக்க வேண்டும். ஒரு நாள் கழித்து எண்ணெயை ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் ஒரு வருடம் இந்த எண்ணெய் கெட்டுப் போகாது. ஆனால் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த எண்ணெயை மாதத்திற்கு ஒரு முறையோ, மாதத்திற்கு இரண்டு முறையாவது நல்ல வெயிலில் வைத்து காய வைத்து கொள்ளுங்கள்.
இந்த எண்ணெயை மயிர்க்கால்களில் படும்படி நன்றாக வைத்து மசாஜ் செய்து விட வேண்டும். (எண்ணெயை தலையில் வைப்பதற்கு முன்பு ஒரு முறை வெதுவெதுப்பாக சூடு செய்து, அதன் பின்பு தலையில் வைப்பது நல்லது.) ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு குளித்துக் கொள்ளலாம். உங்களுக்கு சளி பிடிக்காது, தலை பாரம் வராது என்றால், ஒரு நாள் முழுவதும் இந்த எண்ணெயை உங்களுடைய தலையில் வைத்துக் கொண்டாலும் சரிதான். இந்த எண்ணெயை வாரத்தில் இரண்டு நாட்கள் பயன்படுத்துங்கள். தலைமுடி உதிர்வு படிப்படியாக குறைய தொடங்கிவிடும். தலைமுடி வளர்ச்சி இருக்கும். அதே சமயம் வலிமையாக முடி வளரும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இந்த எண்ணெயை தடவி தலைக்கு குளிக்கும் போது முடி உதிர்வில் வித்தியாசம் தெரியும். குறிப்பு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.