சில கடைகளில் முள்ளு முள்ளாக இருக்கும் முறுக்கு மிக மிக சுவையாக இருக்கும். அதை சில பெட்டிக்கடைகளில் நாம் வாங்கி சாப்பிடுவோம். அதே மாதிரி முறுக்கை நம்முடைய வீட்டில், நம் கையாலேயே செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும். உங்க வீட்டுல ஒரு கப் அரிசி மாவு இருந்தபோதும். ரொம்ப ரொம்ப சுலபமா இரண்டு நாளைக்கு தேவையான முறுக்கை செய்து டப்பாவில் போட்டு ஸ்டோர் செய்தும் சாப்பிடலாம். சரி, வாங்க அந்த முள்ளு முறுக்கு ரெசிபியை எப்படி செய்யலாம்னு தெரிஞ்சிக்கலாம்.

முதலில் 1 கப் அளவு அரிசி மாவை கடாயில் போட்டு இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரிசி மாவு நிறம் மாறி விடக்கூடாது. அரிசி மாவு கடாயில் சூடு ஆனால் மட்டும் போதும்.
அடுத்தபடியாக 3 அல்லது 4 பூண்டினை தோலுரித்து மிக்ஸியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும். (பூண்டு நன்றாக மைய வேண்டும். பூண்டு கட்டிகளாக தடைபட்டால் முறுக்கு பிழிய முடியாது.)

இப்போது முறுக்கு மாவை பிசைய தொடங்கலாம். ஒரு அகலமான பவுல் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வறுத்த அரிசி மாவை போட்டுக்கொள்ள வேண்டும். இந்த அரிசி மாவுடன் அரைத்த பொட்டுக்கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன், ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் பூண்டு விழுது, மிளகாய்தூள் – 1 ஸ்பூன், பெருங்காய தூள் – 1 சிட்டிகை, உப்பு தேவையான அளவு, எள்ளு – 1 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், சுட சுட காய்ந்த எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், சேர்த்து முதலில் இந்த மாவை நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்தபடியாக கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை தெளித்து, முறுக்கு மாவு பதத்திற்கு மாவைத் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். மாவு ரொம்பவும் தண்ணியாகவும் இருக்கக்கூடாது. ரொம்பவும் கட்டி ஆகவும் இருக்கக் கூடாது. முறுக்கு மாவு பிசையும் போது, அதனுடைய பதம் மிக மிக முக்கியம்.

இப்போது நம்மிடம் முறுக்கு மாவு தயார் ஆக உள்ளது. உங்களுடைய முறுக்குக் குழாயில், ஸ்டார் அச்சை போட்டுக் கொள்ள வேண்டும். குறுக்கு குழாய்க்கு உள்ளே எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும். தயாராக இருக்கும் முறுக்கு மாவில் இருந்து ஒரு பாகத்தை எடுத்து முறுக்கு அச்சில் நிரப்பி, உங்களுக்கு எப்படித் தேவையோ அப்படி முறுக்கை கரண்டியின் மேலே பிழிந்து, எண்ணெயில் விட்டு எடுத்துக் கொள்ளலாம்.
ஸ்டார் அச்சு உங்கள் வீட்டில் இல்லை என்றாலும், சாதாரண ஒரு முறுக்கு அச்சில் போட்டும் இந்த முறுக்கை சுட்டு எடுத்து கொள்ளலாம். அது அவரவர் விருப்பம்தான். எண்ணெயில் போட்டதும் மூன்றிலிருந்து நான்கு நிமிடத்திற்குள் முறுக்கு நன்றாக சிவந்து வந்துவிடும். முறுக்குகளை எண்ணெயில் இருந்து வடித்து எடுத்து ருசித்துப்பாருங்கள். நிச்சயமாக ரோட்டுக் கடையில் அதாவது பொட்டிக் கடையில் வாங்கி சாப்பிட்டும் முறுக்கு போலவே இருக்கும்.

இந்த முறுக்கை நன்றாக ஆறவைத்து டப்பாவில் சேகரித்து வைத்துக் கொண்டால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கூட வைத்து சாப்பிடலாம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்து இருந்தால் வரப்போகும் கிருஷ்ண ஜெயந்திக்கு செஞ்சு அசத்துங்க.