ராகு – கேது கிரக தோஷங்கள் தீர இங்கே சென்றால் நிச்சய பலன் உண்டு

nagaraja-swami-temple

நல்லபாம்பு எனப்படும் நாகபாம்பிற்கு இருக்கும் ஒரு சிறப்பான குணம் அது தனது எதிரியை தன்னுடைய விஷம் நிறைந்த பற்கள் கொண்டு கடிக்கும் முன்பு, படம் விரித்து எச்சரிக்கை செய்து தன்னை தற்காத்து கொள்ளும். அது போலவே மனிதன் தன்னை அழிக்கும் எண்ணங்களிடமிருந்து தன்னை தற்காத்து கொள்ள இறைவழிபாடும், யோக நெறிகளையும் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே பாம்புகளை வழிபடும் வழக்கத்தை ஏற்படுத்தினர். அப்படி பாம்பு வழிபாட்டிற்கென்றே இருக்கும் நாகர்கோயில் “அருள்மிகு நாகராஜ சுவாமி திருக்கோயில்” சிறப்புக்கள் பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

naga-dhosham

அருள்மிகு நாகராஜா சுவாமி கோயில் வரலாறு

சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயிலாக நாகராஜ சுவாமி கோயில் இருக்கிறது. இக்கோயிலின் இறைவனாக நாகராஜர் இருக்கிறார். இக்கோயிலின் தல விருட்சமாக ஓடவல்லி கொடி தாவரம் இருக்கிறது. இக்கோயிலின் தீர்த்தம் நாக தீர்த்தம் எனப்படுகிறது. இக்கோயிலின் மூலவர் தெய்வமான நாகராஜர் சுயம்பு வடிவானவர் என்பது விஷேஷ அம்சமாகும்.

தல வரலாறு படி முற்காலத்தில் இப்பகுதியில் வயலில் ஒரு பெண் கதிரறுத்து கொண்டிருந்த போது, ஒரு நெற்கதிரிலிருந்து திடீரென்று ரத்தம் பெருக்கெடுத்தது. இதை கண்ட அந்த பெண் ஊர் மக்களிடம் சென்று இதை பற்றி கூறிய போது, அவர்கள் வந்து அந்த நெற்கதிரை ஆராய்ந்த போது அக்கதிருக்கு அடியில் ஒரு நாகராஜர் விக்கிரகம் இருந்ததை கண்டு, அதை சுற்றி ஒரு சிறிய அளவிலான கோயில் ஒன்றை அமைத்தனர். பிற்காலத்தில் தோல் வியாதியால் பாதிக்கப்பட்ட களக்காடு மன்னர் மார்த்தாண்ட வர்மா இக்கோயிலுக்கு வந்த போது தனது தோல் வியாதி குணமடைய பெற்றார். இதனால் மகிழ்ந்த மன்னன் நாகராஜர் சுவாமிக்கு மிகப்பெரிய ஆலயம் ஒன்றை கட்டினான்.

அருள்மிகு நாகராஜா சுவாமி கோயில் சிறப்புகள்

தமிழ்நாட்டில் பாம்பு வழிபாட்டிற்கு என இருக்கும் மிகப்பெரிய கோயில் இந்த நாகராஜர் சுவாமி கோயில் ஆகும். பாம்பானது எத்தகைய புழுதியில் சென்றாலும் அதன் உடலில் புழுதி ஓட்டுவதில்லை. அதே போன்று மனிதனும் செல்வம், சொந்தம் என்று வாழ்ந்தாலும் எதன் மீதும் பற்றுதலின்றி வாழ்ந்தால் பேரானந்தம் உண்டாகும் என்பதை நாக வழிபாடு உணர்த்துகிறது.

- Advertisement -

naga

பொதுவாக சிவன் கோயில்களில் சண்டி, முண்டி என்பவர்களும், பெருமாள் கோயில்களில் ஜெயன், விஜயன் என்பவர்களும் துவாரபாலகர்களாக இருப்பார்கள். ஆனால் இந்த நாகராஜர் கோயிலில் தர்னேந்திரன் என்கிற ஆண் நாகமும், பத்மாவதி என்கிற பெண் நாகமும் துவார பாலகர்களாக இருக்கிறார்கள். கோயில் மூலஸ்தானத்தில் பாரம்பரிய ஓலை கூரைக்கடியில் மூலவரான நாகராஜர் இருக்கிறார். இக்கோயிலை இன்றும் தெய்வீக நாகங்கள் பாதுகாப்பதாகவும், அதனாலேயே நாகங்களின் மூலஸ்தானத்தில் ஓலைக்கூரைகள் வேயப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் பழைய ஓலை கூரையை பிரித்து புது கூரையை வேய்கின்றனர்.

ஆவணி மாதத்தில் இக்கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. ஆவணி மாதம் என்பது மழைக்காலத்தின் தொடக்க காலமாக இருப்பதால், விவசாய பணிகளின் போது பாம்புகளால் தங்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடாது என்பதற்காக இக்கோயிலில் ஏராளமானவர்கள் வந்து வழிபடுகின்றனர். மலையாள மொழி பேசும் மக்களின் விழாவான ஓணம் பண்டிகை இந்த மாதத்தில் வருவதால் கேரள பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர்.

பொதுவாக பெருமாள் சந்நிதியில் இருக்கும் கொடிமரங்களில் கருடனை அமைப்பார்கள். ஆனால் இக்கோயிலில் இருக்கும் அனந்தகிருஷ்ணர் சந்நிதியின் கொடிமரத்தின் உச்சியில் ஆமையை அமைத்திருக்கின்றனர். கருடனும், பாம்பும் விரோதிகள் என்பதால் இங்கிருக்கும் கொடிமரத்தில் ஆமையை வடித்துள்ளனர். தேவர்கள் பாற்கடலை கடைந்த போது பெருமாள் கூர்மம் எனப்படும் ஆமை வடிவம் எடுத்ததால் இந்த ஆமை சிலையை வைத்ததாக கூறப்படுகிறது. பிரகாரத்தில் நாகமணி பூதத்தான், சாஸ்தா, பாலமுருகன் ஆகிய தெய்வங்களுக்கும் சந்நிதி இருக்கிறது.

இக்கோயில் கிழக்கு நோக்கிய வாயில் கொண்டதாக இருந்தாலும், தெற்கு வாசலே பிரதான நுழைவாயிலாக இருக்கிறது. இந்த வாயில் மிக பிரம்மாண்டமாக இருப்பதால் இதற்கு மகாமேரு மாளிகை என்கிற பெயர் உண்டாயிற்று. இக்கோயிலில் அம்மச்சி துர்க்கை சிலை இருக்கிறது. இச்சிலை நாகர் தீர்த்தத்தில் கண்டெடுக்கப்பட்டு இங்கு பிரதிஷ்டை செய்யபட்டுள்ளது. செவ்வாய்க்கிழமைகளில் ராகு – கேது தோஷம் உள்ளவர்கள், தோஷங்கள் நீங்க நாகராஜரையும், அம்மச்சி துர்க்கையையும் வழிபடுகின்றனர். மலையாள மொழியில் வயதில் மூத்த பெண்களை அம்மச்சி என்று அழைப்பது வழக்கம். அதனாலேயே இந்த துர்க்கைக்கு அம்மச்சி என்கிற பெயர் உண்டாயிற்று.

naga-worship

பாற்கடலில் மகாவிஷ்ணுவின் படுக்கையாக இருக்கும் நகராஜனான ஆதிசேஷன் ஜென்ம நட்சத்திரம் ஆயில்யம் நட்சத்திரம் ஆகும். ஒவ்வொரு மாதமும் ஆயில்ய நட்சத்திர தினத்தில் இக்கோயிலின் மூலவரான நாகராஜருக்கு விஷேஷ பூஜைகள் செய்து, பால் அபிஷேகங்கள் செய்யப்படுகிறது. ராகு கேது தோஷம் உள்ளவர்கள் நாகராஜருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுவதால் தங்களின் தோஷங்களில் இருந்து நிவர்த்தி பெறலாம்.

கோயில் அமைவிடம்

அருள்மிகு நாகராஜா சுவாமி திருக்கோயில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் நாகர்கோயில் நகரத்தில் அமைந்துள்ளது.

கோயில் நடை திறப்பு

அதிகாலை 4 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும்.

கோயில் முகவரி

அருள்மிகு நாகராஜா சுவாமி திருக்கோயில்
நாகர்கோயில்
கன்னியாகுமரி மாவட்டம் – 629001

தொலைபேசி எண்

4652 – 232420

இதையும் படிக்கலாமே:
பதவி உயர்வு கிடைக்க இக்கோயிலில் வழிபடுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Nagercoil nagaraja temple details in Tamil. It is also called as Nagaraja swamy kovil in Tamil or Rahu ketu dosham in Tamil or Kanyakumari temples in Tamil or Nagercoil nagaraja kovil in Tamil.