நம் வீட்டை எவ்வளவு செலவு செய்து அழகுபடுத்தியிருந்தாலும் அங்கு நல்ல வாசனை இல்லையென்றால் நாம் செய்த செலவுகள் அனைத்தும் வீணாகிவிடும். நல்ல வீட்டு உபயோக பொருட்கள், ஹைடெக்கான அலங்காரங்கள் என நம் வீட்டை எவ்வளவு அழகான வடிவங்களில் அமைத்திருந்தாலும் நம் வீட்டில் நிலவும் நல்ல வாசனைதான் பிறரை கவர்ந்து ஈர்க்கும்.

வீட்டை வாசனையுடன் வைத்துக் கொள்வதற்காக, நாம் கடைகளில் விற்கும் ரூம் ஸ்பிரேயர்களை வாங்கி பயன்படுத்துவோம். கெமிக்கல்கள் நிறைந்த இந்த ரூம் பிரஷ்னர்களைத் தவிர்த்து மற்ற சில எளிமையான வழிமுறைகளிலும் நம் வீட்டை வாசனையுடன் வைத்துக்கொள்ளலாம். இயற்கையான முறையிலேயே இந்த வழிமுறைகள் இருப்பதால் இதனால் நமக்கு எந்த வித பாதிப்பும் இருக்காது. அதில் சில வழிமுறைகளைப் பற்றி கீழே தொகுத்துள்ளோம்.
நறுமணத்தை ஏற்படுத்தும் பொருட்களை உலர வைத்து ஒரு பவுலில் போட்டு வைப்பதால் அதன் நறுமணம் நம் வீட்டில் எப்போதுமே நிலைத்திருக்கும். நறுமணத்தை ஏற்படுத்துவதில் ரோஜாப் பூவிற்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. இதன் இதழ்களை நிழலில் உலர்த்தி அதனுடன் லாவண்டர் எசன்ஸ் கலந்து வீட்டில் வைத்தால் வீடு முழுவதும் அதன் வாசனை கமகமக்கும்.

நம் வீட்டில் இருக்கும் மின் விளக்குகளின் மூலமாக கூட வீடு முழவதும் நம்மால் வாசனையை பரப்ப முடியும். அணைத்து வைக்கப்பட்ட நிலையில் இருக்கும் மின் விளக்கின் மேல் லாவண்டர் எசன்ஸை தேய்த்துவிட்டு, நன்றாக காய்ந்த பிறகு விளக்கை ஆன் செய்ய வேண்டும். விளக்குகள் சூடேற சூடேற அதில் தடவப்பட்டிருக்கும் லாவண்டரின் வாசனை வீடு முழுவதும் பரவும். வசதி படைத்தவர்களின் வீடுகளில் இதுபோல்தான் செய்கிறார்கள்.
வீட்டின் நறுமனத்திற்காக லாவண்டர் எசன்ஸை மட்டுமல்லாமல், சிட்ரஸ் அமிலம் நிறைந்த பழங்களான எலுமிச்சை மற்றும. ஆரஞ்சு பழங்களின் தோல்களையும் நாம் பயன்படுத்தலாம். இந்த இரண்டு பழங்களின் தோல்களையும் ஒன்றாக கலந்து ஒரு பவுலில் போட்டு வீட்டு ஐன்னலின் அருகில் வைத்து விட்டால், வீட்டிற்குள் வரும் காற்றில் இந்த பழங்களின் வாசனையும் சேர்ந்தே வீசும்.

கோவிலில் வரும் நறுமணத்தை போல வீட்டிலும் நறுமணம் வீச வேண்டும் என்று நினைப்பவர்கள், பண்ணீர் மற்றும் சந்தன பொடியை கொண்டு ரூம் ஸ்பிரே தயாரிக்கலாம். அதற்காக முக்கால் டம்ளர் அளவு பண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் ஒன்றரை டீ ஸ்பூன் அளவு சந்தன பௌடரை கலக்கவேண்டும். பிறகு அதில் முக்கால் டம்ளர் அளவு தண்ணீரை சேர்க்க வேண்டும். பிறகு இதை ஸ்பிரே செய்யும் பாட்டிலில் ஊற்றில் கலக்கிவிட்டு அதை வீட்டில் அடித்தால் நல்ல வாசனை வரும். இதை சில நாட்கள் வரை பயன்படுத்தலாம்.