நம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை நீண்ட நாட்களாக இருந்து கொண்டே இருக்கும். என்ன செய்தாலும் அந்த பிரச்சனை நம்மை விட்டு போகாமல் நம் உடனேயே இருந்து நம்மை கஷ்டப்படுத்திக் கொண்டு இருக்கும். அது உடல் ரீதியான பிரச்சினையாக இருந்தாலும் சரி, மனரீதியான பிரச்சினையாக இருந்தாலும் சரி, பணரீதியாக பிரச்சினையாக இருந்தாலும் சரி, அந்த நீண்ட நாள் பிரச்சனையை தீர்க்கக் கூடிய ஒரு அற்புதமான நாளாக தான் ஆடி கிருத்திகை நாள் திகழ்கிறது. அந்த நாளில் நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாடு நம்முடைய நீண்ட நாள் பிரச்சனையை தீர்த்து வைக்கும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பிரச்சனை தீர ஆடி கிருத்திகை வழிபாடு
ஆடி மாதம் என்பது அம்மனுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த மாதம் என்றும் அம்மனை வழிபாடு செய்வதற்குரிய மாதம் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் தான் ஆடி கிருத்திகையும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. என்னதான் ஆடி கிருத்திகை என்பது முருகனுக்கு உகந்த நாளாக இருந்தாலும் கார்த்திகை பெண்களின் நினைவாக தான் இந்த விரதத்தையே நாம் மேற்கொள்கிறோம் என்பதால் இதுவும் ஒருவகையான அம்மன் வழிப்பாடாகவே கருதப்படுகிறது. அப்படிப்பட்ட நாளில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும், நீண்ட நாட்களாக உடல் உபாதையில் பாதிக்கப்பட்டு இருப்பவர்களும், விரைவிலேயே பிரச்சினைகள் தீர வேண்டும் என்று நினைப்பவர்களும் செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாடு முறையை பார்ப்போம்.
ஆடி கிருத்திகை நாள் என்பது ஜூலை மாதம் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அன்றைய தினத்தில் எப்பொழுதும் போல் தாங்கள் எந்த முறையில் முருகப் பெருமானை வழிபாடு செய்வீர்களோ அதே முறையை பின்பற்றி வழிபாடு செய்து கொள்ளுங்கள். முருகப் பெருமானின் வேல், சிலை இருக்கும் பட்சத்தில் அதற்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யக்கூடிய அபிஷேகத்தில் தான் ஒரு சூட்சமம் இருக்கிறது. இரண்டு வெற்றிலையை எடுத்துக் கொள்ளுங்கள். சுத்தமான தண்ணீரை ஒரு பாத்திரத்தில் பிடித்து அதில் இந்த வெற்றிலைகளை சிறு சிறு துண்டுகளாக கிழித்துப் போட்டு கைகளால் நன்றாக கசக்கி வெற்றிலை சாராக தயார் செய்து கொள்ளுங்கள். கைகளை தான் பயன்படுத்த வேண்டும்.
பிறகு இதில் சிறிது பச்சை கற்பூரத்தையும் நுணுக்கி சேர்த்து சிறிதளவு போட்டு நன்றாக கலந்து வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது வெற்றிலை தீர்த்தம் தயாராகிவிட்டது. இந்த வெற்றிலை தீர்த்தத்தை வைத்து உங்களுடைய நீண்ட நாள் பிரச்சனை தீர வேண்டும் என்று முழுமனதோடு வேண்டிக் கொண்டு முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு வேல் மாறலை படிக்க வேண்டும்.
வீட்டில் முருகப்பெருமானின் சிலை, வேல் இல்லை என்பவர்கள் இந்த தீர்த்தத்தை முருகப்பெருமானின் படத்திற்கு முன்பாக வைத்துவிட்டு வேல் மாறலை படிக்கலாம். வழிபாட்டை நிறைவு செய்த பிறகு இந்த தீர்த்தத்தை எடுத்து வீட்டில் இருக்கக் கூடிய அனைவரும் பருக வேண்டும். நீண்ட நாட்களாக உடல் உபாதையில் படுத்த படுக்கையாக இருப்பவர்களை சுற்றி இந்த தீர்த்தத்தை தெளிப்பதன் மூலம் விரைவிலேயே அவர்களுடைய உடல் நிலை சரியாகும் வாய்ப்பு உண்டாகும்.
இதையும் படிக்கலாமே: கால பைரவர் வாகனம்
முருகப்பெருமானை முழு மனதுடன் நம்பி இந்த ஒரு வழிபாட்டை செய்பவர்களுக்கு அவர்களின் நீண்ட நாள் பிரச்சனைகளும் உடல் உபாதைகளும் முற்றிலும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.