இப்போதெல்லாம் தோசை வார்க்க, தோசைக்கல் வாங்க வேண்டும் என்றால் முதலில் நாம் தேர்ந்தெடுப்பது நான் ஸ்டிக் தவா தான். ஆனால் அது நமக்கு நீண்ட நாள் உழைத்து வருவது கிடையாது. அது மட்டும் அல்லாமல் அதற்கு செலவு செய்யக்கூடிய காசும் அதிகம். தோசைக்கல் வாங்க வேண்டும் என்றால் இரும்பில் தடிமனான தோசை கல் வாங்கலாம். சில பேருக்கு இரும்பு பயன்படுத்துவது அவ்வளவு சுலபமாக இருக்காது. அப்படிப்பட்டவர்கள் இந்தோனியம் தோசை கல்லை வாங்குவது நல்லது. உங்க வீட்ல புதுசாக இந்தோனிய தோசைக்கல் வாங்கினால் அதை ஐந்தே நிமிடத்தில் எப்படி பழகுவது என்பதை பற்றிய குறிப்புதான் இன்று நாம் பார்க்க போகின்றோம்.
புதுசாக வாங்கிய இந்தோனியம் தோசை கல்லை முதலில் தண்ணீரில் சோப்பு போட்டு கழுவி விடுங்கள். பிறகு அதை அடுப்பில் வைத்து நன்றாக சூடு செய்து அதன் மேலே ஸ்டிக்கர் இருந்தால் அதை எடுத்து விடுங்கள். அந்த தோசை கல்லை அப்படியே அடுப்பில் வைத்து, 2 ஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்றி, 1 டேபிள் ஸ்பூன் கல் உப்பு போட்டு, அந்த கல்லுப்பை தோசை முழுவதும் பரப்பி, 5 நிமிடங்கள் நன்றாக வறுத்து எடுத்து விடுங்கள்.
பிறகு ஒரு வெங்காயத்தை எடுத்து இரண்டாக நறுக்கி அதை ஒரு கத்தியில் குத்தி, இந்த தோசை கல் முழுவதும் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, தேய்த்து விட வேண்டும். வெங்காயம் பிரவுன் கலர் வரட்டும் அந்த அளவுக்கு தோசை கல்லை வெங்காயத்தை வைத்து நன்றாக தேய்த்து விடுங்கள். கட்டாயம் இப்படி வெங்காயம் தேய்க்கும் போது தோசை கல்லில் இரண்டு ஸ்பூன் சமையல் எண்ணெய் இருக்க வேண்டும்.
மீண்டும் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, 1 டேபிள் ஸ்பூன் கல் உப்பு போட்டு அந்த கல்லுப்பை எண்ணெயில் வறுக்க வேண்டும். அந்த தோசைக்கல் முழுவதும் பரப்பி விட்டு இந்த கல்லுப்பை வறுத்து தோசை கல்லை சுத்தம் செய்து விடுங்கள். அவ்வளவுதான் இதை கொண்டுபோய் வெறும் தண்ணீரில் கழுவிக் கொண்டு வந்து விடுங்கள். இப்போ சோப்பு போட்டு கழுவ கூடாது. எண்ணெய் பசை அந்த கல்லில் அப்படியே ஒட்டி இருக்க வேண்டும். ஒரு சிறிய துண்டு புளியை எண்ணெயில் தொட்டு தோசை கல் முழுவதும் தேய்த்து விட்டு, இதில் முதலில் கல் தோசை வார்க்க வேண்டும். உங்களுடைய வீட்டில் அசைவம் சாப்பிடுவீர்கள் என்றால் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி இந்த தோசை கல்லில் ஆம்லெட் கூட போட்டுக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம்.
பிறகு அந்த தோசைக்கல் சூடாக இருக்கும் அல்லவா. தண்ணீர் தெளித்து அதனுடைய சூட்டை தணித்து விடுங்கள். புளியில் எண்ணெய் தொட்டு இந்த தோசை கல் முழுவதும் தேய்த்து விட்டு, அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு மெல்லிசாக ஒரு தோசையை வார்த்து தேவையான அளவு எண்ணெய் விட்டுப் பாருங்கள். தோசையை கரண்டியை வைத்து நீங்கள் எடுக்க வேண்டாம்.
தோசை, கல்லில் இருந்து தானாகவே மேலே வரும். ஈசியாக கரண்டியை வைத்து திருப்பி போட்டு விடலாம். ஒட்டவே ஒட்டாது. போகப் போக உங்களுடைய இந்த தோசை தவா நான் ஸ்டிக் தவா போலவே மாறிவிடும். சூப்பரா, சுலபமா தோசைக்கல் முழுவதும், பெரிய பெரிய தோசையை கூட இதில் வார்த்து எடுக்கலாம். உங்க வீட்ல பயன்படுத்தாத இந்தோனிய தோசைக்கல் இருந்தாலும், புதியதாக நீங்கள் இந்தோனியம் தோசைக்கல் வாங்கினாலும், இந்த குறிப்பு உங்களுக்கு நிச்சயம் பயன்படும்.