ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமான வழிபாட்டிற்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. அந்த வகையில் ஆனி மாதம் என்பது பெருமாள் வழிபாட்டிற்கு உகந்த மாதமாக திகழ்கிறது. பெருமாளை வழிபாடு செய்பவர்கள் முதலில் பெருமாளை வழிபாடு செய்யக்கூடாது. அவருக்கு முன்பாக இருக்கக்கூடிய கருடாழ்வாரை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி கருடாழ்வரை வழிபாடு செய்தால் தான் பெருமாளிடம் நாம் வைக்கும் கோரிக்கை நிறைவேறும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் ஆனி மாதத்தில் கருடாழ்வாரை எந்த முறையில் வழிபாடு செய்தால் நாம் நினைத்தது நடக்கும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
நினைத்தது நடக்க கருடாழ்வார் வழிபாடு
இந்த உலகத்தையும் காக்கக்கூடிய தெய்வமாக திகழ்ந்தவர் தான் பெருமாள் என்று நம் அனைவருக்குமே தெரியும். பெருமாளை வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்றும் அவர்களுடைய வாழ்வாதாரம் மேம்படுவதற்கு பெருமானின் அருள் உதவும் என்றும் கூறப்படுகிறது. அப்படி பெருமாளின் அருளை பெற வேண்டும் என்றால் நாம் கருடாழ்வாரை முதலில் வழிபாடு செய்ய வேண்டும். அதேபோல் மகாலட்சுமியின் அருளைப் பெற வேண்டும் என்றால் பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும். இப்படி ஒருவரை நாம் வழிபாடு செய்வதன் மூலம் மற்றொருவரின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
நாம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வேண்டுதல் இருக்கும் ஒவ்வொரு காரியம் நடைபெற வேண்டும் என்று ஆசைப்படுவோம். திருமணம் நடக்க வேண்டும் என்றோ, வேலை கிடைக்க வேண்டும் என்றோ, வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்றோ, பலவிதமான வேண்டுதல்கள் இருக்கும். இந்த வேண்டுதல்கள் அனைத்தையும் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு அற்புதமான கடவுளாக தான் கருடாழ்வார் தெரிகிறார். கருடாழ்வாரை நாம் வழிபாடு செய்யும்பொழுது ஏதாவது ஒரு கோரிக்கையை முன்வைத்து இந்த வழிபாட்டை நாம் மேற்கொள்ள வேண்டும்.
இந்த வழிபாட்டை ஆனி மாதத்தில் வரக்கூடிய திருவாதிரை, சுவாதி, சதய நட்சத்திர நாட்களில் செய்யலாம். அதேபோல் ஆனி மாதத்தில் வரக்கூடிய புதன்கிழமையும் செய்யலாம். ஏதாவது ஒரு நாளை தேர்வு செய்து கொள்ளுங்கள். அன்றைய தினம் அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு சென்று கருடாழ்வாருக்கு துளசி மாலையை சாற்றி இரண்டு நெய் தீபம் அல்லது கடுகு எண்ணெய் தீபத்தை ஏற்றி வைத்து அவரை மட்டும் 15 முறை வலம் வர வேண்டும்.
இவ்வாறு பதினைந்து முறை வலம் வரும் பொழுதும் நம்முடைய வேண்டுதல் என்னவோ கோரிக்கை என்னவோ அதை முழு மனதோடு கருடாழ்வாரிடம் கூறிக்கொண்டே வலம் வர வேண்டும். ஏதாவது ஒரு கோரிக்கையை மட்டும் முன்வைக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு பெருமாளுக்கு நம்முடைய பெயரில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்வதன் மூலம் பெருமாள் மனம் மகிழ்ந்து நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றுவார்.
இதையும் படிக்கலாமே: பண வசியம் ஏற்பட்டு கடன் தீர முருகன் வழிபாடு
முழு நம்பிக்கையோடு கருடாழ்வாரிடம் இந்த முறையில் வழிபாடு செய்து வேண்டுதலை வைப்பவர்களுக்கு அவர்கள் வேண்டுதலை பெருமாள் நிறைவேற்றுவார் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.