நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று கூறி கேள்விப்பட்டு இருக்கிறோம். எவ்வளவு பணத்தை சம்பாதித்தாலும் உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் அந்த பணத்தை நம்மால் அனுபவிக்க முடியும் என்றே கூறலாம். மேலும் உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நம்மால் பணத்தையே சம்பாதிக்க முடியும் என்ற நிலையும் இருக்கிறது. அதனால் பணத்தை சம்பாதிப்பதற்கும் சம்பாதித்த பணத்தை அனுபவிப்பதற்கும் உடல் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. அப்படிப்பட்ட உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய சிவபெருமான் வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தீராத நோய் தீர சிவ வழிபாடு
கடன், நோய் போன்ற பிரச்சினைகள் ஒருவருக்கு ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் அவர்களுடைய கர்ம வினைகளே. கர்ம வினைகளின் அடிப்படையில் தான் இந்த பிரச்சினைகள் அனைத்தும் உண்டாகிறது. அப்படிப்பட்ட கர்ம வினைகள் குறைந்தால் தான் இந்த பிரச்சினைகளில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். அந்த வகையில் நம்முடைய கர்ம வினைகளை தீர்க்கக்கூடிய தெய்வமாக திகழக்கூடியவர் சிவபெருமான் என்பதால் நோய் சம்பந்தமான பிரச்சனைகள் தீருவதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும். அந்த முறையை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
இந்த வழிபாட்டை வீட்டிலேயே செய்து கொள்ளலாம். இந்த வழிபாட்டிற்கு சுத்தமான பசுஞ்சாணத்தால் செய்யப்பட்ட விபூதி வேண்டும். வில்வ இலை வேண்டும். வெற்றிலை வேண்டும். சிவபெருமானுக்குரிய தினங்களாக கருதக்கூடிய திங்கள் கிழமை, பிரதோஷ நாள், மாத சிவராத்திரி போன்ற நாட்களில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும். சிவபெருமானின் படத்திற்கு முன்பாக ஒரு தாம்பாலத்தை வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு மேல் வில்வ இலைகளை பரப்ப வேண்டும். அந்த வில்வ இலைகளுக்கு மேல் ஒரு வெற்றிலையை வைத்துக் கொள்ளுங்கள்.
சுத்தமான பசுஞ்சாணத்தால் செய்யப்பட்ட விபூதியை வைத்து “ஓம் ருத்ராய நமஹ” என்னும் மந்திரத்தை 108 முறை கூறி அந்த வெற்றிலையின் மீது விபூதியால் அர்ச்சனை செய்ய வேண்டும். இப்படி தொடர்ச்சியாக 48 நாட்கள் நாம் அர்ச்சனை செய்ய வேண்டும். முதல் நாள் அர்ச்சனை செய்த விபூதியை எடுத்து தனியாக ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இப்படி ஒவ்வொரு நாளும் நாம் விபூதியால் அர்ச்சனை செய்து அந்த விபூதியை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த விபூதியை நெற்றியில் வைக்க வேண்டும். எந்த பாகத்தில் நோய்வாய் பட்டு கஷ்டப்படுகிறார்களோ அந்த பாகத்தில் விபூதியை தடவி விட வேண்டும். மேலும் அவர்கள் அருந்தும் தண்ணீரில் சிறிதளவு விபூதியை கலந்து அவர்களை பருகச் செய்ய வேண்டும். இதோடு உரிய மருத்துவரை ஆலோசித்து அந்த நோய்க்குரிய மருத்துவத்தையும் மேற்கொள்ள வேண்டும். இந்த வழிபாட்டால் விபூதி மந்திர உருவேற்றப்பட்டு நோய்களை தீர்க்கக் கூடிய அற்புதமான மருந்தாக மாறிவிடும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:யோகம் தரும் ஐப்பசி மாத வழிபாடு
இந்த எளிமையான விபூதி வழிபாட்டை முழுமனதோடு சிவபெருமானை நினைத்து செய்பவர்களுக்கு அவர்களின் உடல் ரீதியான அனைத்து பிரச்சினைகளும் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.