பாப்பா பாட்டு – பாரதியார் கவிதை

Oodi vilaiyaadu papa
- Advertisement -

ஓடி விளையாடு பாப்பா, – நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா, – ஒரு
குழந்தையை வையாதே பாப்பா.

Bharathiyar Kavithai
Bharathiyar Kavithai

சின்னஞ் சிறுகுருவி போலே – நீ
திரிந்து பறந்துவா பாப்பா,
வண்ணப் பறவைகளைக் கண்டு – நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.

- Advertisement -

கொத்தித் திரியுமந்தக் கோழி – அதைக்
கூட்டி விளையாடு பாப்பா,
எத்தித் திருடுமந்தக் காக்காய் – அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா.

பாலைப் பொழிந்துதரும் பாப்பா, – அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா;
வாலைக் குழைத்துவரும் நாய்தான் – அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா.

- Advertisement -

வண்டி இழுக்கும்நல்ல குதிரை – நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மைஆடு, – இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா.

Bharathiyar Kavithai
Bharathiyar Kavithai

காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு – என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.

- Advertisement -

பொய் சொல்லக் கூடாது பாப்பா – என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா,
தெய்வம் நமக்குத்துணை பாப்பா – ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா.

பாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா – அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.

Bharathiyar Kavithai
Bharathiyar Kavithai

துன்பம் நெருங்கிவந்த போதும் – நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா,
அன்பு மிகுந்ததெய்வ முண்டு – துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா, – தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா,
தேம்பி யழுங்குழந்தை நொண்டி, – நீ
திடங்கொண்டு போராடு பாப்பா.

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற – எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா,
அமிழ்தில் இனியதடி பாப்பா, – நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.

Bharathiyar Kavithai
Bharathiyar Kavithai

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, – அதைத்
தொழுது படித்திடடி பாப்பா;
செல்வம் நிறைந்த ஹிந்து ஸ்தானம் – அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா.

வடக்கில் இமயமலை பாப்பா – தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா,
கிடக்கும் பெரியகடல் கண்டாய் – இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா.

வேத முடையதிந்த நாடு, – நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு,
சேதமில் லாதஹிந்து ஸ்தானம் – இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா.

Bharathiyar Kavithai
Bharathiyar Kavithai

சாதிகள் இல்லையடி பாப்பா; – குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதி, கல்வி – அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.

உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்; – தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடைய நெஞ்சு வேணும்; – இது
வாழும் முறைமையடி பாப்பா.

Mahakavi Bharathiyar
Mahakavi Bharathiyar

ஓடி விளையாடு பாப்பா என்று தொடங்கும் இந்த பாடல் நிச்சயம் தமிழர்களின் அனைத்து இல்லங்களிலும் ஒளிக்கக்கூடிய ஒரு பாடலாகும். சிறு பிள்ளைகளுக்கு நல்லதொரு சிந்தனையை வளர்க்க கூடிய இந்த பாடலை பாரதியார் எத்தனை சிந்தனையோடு எழுதி இருப்பர் என்று நினைத்தாலே வியப்பாக உள்ளது. காலங்கள் கடந்து நிற்கும் இந்த பாடல் நிச்சயம் இந்த உலகில் தமிழ் உள்ளவரை நிலைத்து நிற்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதையும் படிக்கலாமே:
பரசிவ வெள்ளம் – பாரதியார் கவிதை

English overview:
Here we have Bharathiyar Kavithaigal with title Papa Pattu. Odi vilayadu pappa song lyrics in Tamil is very interesting. There are totally 16 songs in this title and all 16 are about the children. Bharathiayr is asking the children to play, study do other activitites to be healthy via this poem.

- Advertisement -