சில நேரங்களில் வீட்டிற்குள் எறும்பு, வண்டு, பூரான், எட்டுக்கால் பூச்சி போன்ற சிறு பூச்சிகள் உள்ளே நுழைந்து விடும். இந்தப் பூச்சிகள் நம்மை கடித்து விட்டால் உடலில் வலியும், அலர்ஜியும் ஏற்படும். அதனால் அவற்றை நாம் அடித்து, கொன்று வெளியே எறிந்து விடுவோம். ஆனால் பல்லியை மட்டும் பெரும்பாலும் எந்த தொந்தரவும் செய்யமாட்டோம். அதற்க்கு காரணம், நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து பல்லியை நாம் தெய்வமாக வணங்கிவருவது தான். அத்தகைய பல்லிகளின் பலன்கள் குறித்து இங்கு பார்ப்போம் வாருங்கள்.

வீடுகளில் நம் குடும்பத்தினருடன் உரையாடிக் கொண்டிருக்கும் போதும், சில முக்கியமான விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போதும் உதாரணமாக, ஏன் இப்படி உடல் நலக்குறைவு ஏற்படுகிறது? இந்த பிரச்சனை வருவதற்கு என்ன காரணம்? திருமணம் சீக்கிரம் முடிவாகுமா? இது போன்ற சில விஷயங்களை நாம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஏதேனும் ஒரு மூலையிலிருந்து பல்லியின் சத்தம் கேட்கும். அந்த சத்தம் கேட்கும் பொழுது நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் பல்லி நமக்கு பதில் சொல்வதாக சொல்வார்கள்.
பொதுவாக வீட்டில் உள்ள பல்லிகள் நமக்கு வரவிருக்கும் நல்லது, கெட்டதுகளை முன்கூட்டியே அறியும் வல்லமை பெற்றவை. எனவேதான் அவை நாம் பேசும் விஷயங்களுக்கு முடியும், முடியாது என்பது போல் பதிலளிக்கின்றன. பல்லிகள் தெய்வ சுபிட்சம் பெற்றவை. எனவே தான் கோவில்களில் பல்லிகளின் திருவுருவங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை நாம் தொட்டு வணங்கும் பொழுது நமது பாவங்கள் எல்லாம் நம்மை விட்டு விலகிச் செல்கின்றன. இவ்வாறு நமது பாவங்களை போக்குகின்ற அருள் பெற்ற பல்லிகளை நாம் அடித்துக் கொன்றோம் என்றால் அதனை விட பெரிய பாவம் வேறு ஒன்றும் இல்லை. பல்லியை பிடிக்கவில்லை என்றால், அதை எவ்வகையிலும் துன்புறுத்தாமல் விரட்டலாமே தவிர எக்காரணம் கொண்டும் கொல்லக்கூடாது. ஒருவேளை இதற்க்கு முன்பு நீங்கள் தெரியாமல் பல்லியை கொன்றிருந்தால் அந்த பாவத்தை போக்க, காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில் சந்திர, சூரியர்களாக காட்சி தரும் பல்லி உருவங்களை தொட்டு வணங்கி அந்த பாவத்தை போக்கிக்கொள்ளலாம்.

பல்லிகள் சத்தமிடும் ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. அந்த சத்தம் வரும் திசையை பொருத்து நமக்கு நடக்கவிருக்கும் சம்பவம் நல்லதா? கெட்டதா? என்று தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார்போல் நம் மனதை பக்குவப்படுத்திக் கொண்டோ அல்லது அதற்கு முன்னெச்சரிக்கையாக நம்மை தயார் செய்து கொண்டோ இருக்கலாம்.
பல்லி சொல்லும் பலன்:
பல்லிகள் எழுப்பும் சத்தத்திற்கான அர்த்தங்கள் நமது பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. வீட்டின் கிழக்கு திசையில் இருந்து பல்லி சத்தமிட்டால் அந்த வீட்டின் குடும்பத் தலைவருக்கு அல்லது தலைவிக்கு ஏதேனும் மனக்குழப்பமும், மனக் கவலையும் வரப் போவதாக அர்த்தம். வீட்டின் தென்கிழக்கு திசையில் இருந்து பல்லிகளின் சத்தம் அதிகமாக வந்தால் நம்மை சுற்றியுள்ள உறவினர்களின் மூலம் நம் வீட்டில் ஏதேனும் பிரச்சினை உண்டாகப் போகிறது என்று அர்த்தம். இல்லாவிடில் ஏதேனும் ஒரு கஷ்டம் தரக்கூடிய செய்தி நமக்கு வரப்போகிறது என்று அர்த்தம்.

நம் வீட்டின் தென்மேற்கு திசையிலிருந்து பல்லிகள் சத்தமிட்டால் நம் உறவினர்கள் மூலமாக ஏதேனும் நன்மையோ அல்லது நல்ல விஷயங்களோ நடக்கப் போகிறது என்று அர்த்தம். நம் வீட்டின் தெற்குப் பகுதியில் இருந்து பல்லிகள் சத்தமிட்டால் நமது வீட்டில் ஏதேனும் சுப நிகழ்ச்சியோ அல்லது ஏதேனும் நன்மை தரக்கூடிய விஷயங்களோ வரப்போவதற்கான அர்த்தமாகும். தெற்கு மற்றும் வடக்கு திசையில் இருந்து இரண்டு பள்ளிகள் மாறி மாறி சத்தமிட்டுக் கொண்டே இருந்தால் வீட்டில் உள்ள ஆண்களுக்கு உடல் நலக்குறைவு அல்லது தொழிலில் நஷ்டம், பணம் விரையம் இவ்வாறான விஷயங்கள் நடக்க இருப்பதாக அர்த்தம்.