பங்குனி உத்திரம்(28/3/2021) அன்று யாரெல்லாம் விரதம் இருக்கலாம்? தடைப்பட்ட சுபகாரியங்கள் கைக்கூட செய்ய வேண்டியவை என்ன? பங்குனி உத்திர சிறப்புகள்!

murugan-mangalyam

பங்குனி மாதத்தில் வரும் முக்கியம் விசேஷ நாட்களில் பங்குனி உத்திரம் மிகவும் முக்கியமானது. இறை வழிபாடுகள் செய்வதற்கு உரிய மாதமாக பங்குனி மாதமும் திகழ்கின்றது. இம்மாதத்தில் தான் பெரும்பாலான தெய்வங்களுக்கு திருமணங்கள் நடை பெற்றதாக புராணங்கள் நமக்கு எடுத்துரைக்கிறது. பங்குனி உத்திர விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள் என்ன? யாரெல்லாம் பங்குனி உத்திர விரதத்தை கடைபிடிக்கலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

ramar1

பங்குனி விரதம் அனுஷ்டிப்பவர்கள் அன்றைய நாள் முழுவதும் விரதமிருந்து இஷ்ட தெய்வத்தையும், குலதெய்வத்தையும் வணங்கி வழிபடலாம். சக்தியையும், சிவனையும் வழிபடுவது தம்பதியர் ஒற்றுமைக்கு வழிவகுக்கும். எல்லையில்லாத நிம்மதியை அடைய பங்குனி உத்திர விரதத்தை அனைவரும் கடைபிடிக்கலாம்.

வயதாகியும் பலருக்கும் திருமணம் என்பது தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும். இப்படி திருமணத்தடை இருப்பவர்கள் பங்குனி உத்திர நாள் அன்று விரதம் இருந்து இறைவனை வழிபட்டால் உடனே திருமணம் கைகூடி வரும். மனதிற்கு பிடித்தவரை மணந்து கொள்வதற்கு பங்குனி உத்திர விரதம் இருப்பது சிறப்பான பலனாக அமையும். எவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் சில முக்கிய விஷயங்கள் நம்முடைய வாழ்க்கையில் நடப்பதற்கு இறைவனுடைய அருளும் வேண்டும்.

marraige-couple

வசதி படைத்தவர்களுக்கு கூட திருமண யோகம் வரவில்லை என்றால் அவர்களுடைய கர்மவினை அவர்களை ஆட்டிப் படைக்கிறது என்பது தான் அர்த்தம். கர்ம வினைகள், நாம் செய்த பாவங்கள் நீங்க பங்குனி உத்திர விரதத்தை முறையாக கடைபிடிக்கலாம். கன்னிப் பெண்களுக்கு நினைத்த வரன் அமைய பங்குனி உத்திர விரதத்தை கடைபிடிப்பது யோகத்தை கொடுக்கும். இன்னாளில் திருமணமாகாதவர்கள் கல்யாணசுந்தர விரதம் இருப்பார்கள். திருமண வரம் கொடுக்கின்ற திருக் கோயில்களுக்குச் சென்று பரிகாரங்களை செய்வது உண்டு. இதனால் அடுத்த சில மாதங்களிலேயே திருமணம் முடிந்து விடும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது.

பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும், தம்பதிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கவும் தம்பதிகளாக சென்று சிவன் கோவில்களில் பங்குனி உத்திர நாளில் விரதம் இருந்து வழிபடலாம். புராணங்களில் பல முக்கிய தெய்வங்களுக்கு பங்குனி உத்திர நாளன்று திருமணம் ஆனதாக குறிப்புகள் உண்டு. அந்த வகையில் மீனாட்சி-சொக்கநாதர் திருமணமும் இந்நாளில் தான் நடைபெற்றது. மேலும் ராமர்-சீதைக்கும் பங்குனி உத்திர நாளன்று திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து முருகன்-தெய்வானை, இந்திரன்-இந்திராணி, ஆண்டாள்-ரங்கமன்னார், நந்தியம்பெருமான்-சுயசை ஆகிய தெய்வங்களுக்கும் பங்குனி உத்திர நன்னாளில் திருமண சுப வைபவம் கை கூடியதாக புராண வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன.

dhanalakshmi

அதனால் தான் பங்குனி உத்திர நாள் அன்று விரதம் இருந்து இறை வழிபாடு செய்பவர்களுக்கு சகல யோகங்களும் கைகூடி வரும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக திருமண யோகம் கைகூடி வர பங்குனி உத்திர விரதத்தை கடைபிடிப்பது உண்டு. பங்குனி மாத பௌர்ணமி அன்று வரும் உத்திர நட்சத்திரம் நாளில் செல்வத்தின் அதிபதியாக விளங்கும் மகாலட்சுமி தேவி பிறந்ததாக கூறப்படுகிறது. மகாபாரத அர்ஜுனன், தர்மசாஸ்தா ஆகியோரும் இன்னாளில் அவதரித்தனர். செல்வ வளம் சிறக்க மகாலட்சுமியை பங்குனி உத்திர நன்னாளில் விரதம் இருந்து வழிபட்டால் சகல செல்வ வளங்களும் நமக்கு வாய்க்கும். எனவே இந்த நாளை தவறவிடாமல் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.