நாளை பங்குனி உத்திரம்! வீட்டில் இருந்தபடியே இதை செய்தால் எல்லா பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்

பங்குனி உத்திர தினத்தில் திருமணம் ஆகாத ஆண்கள், பெண்கள் விரதமிருந்து முருகப் பெருமானை வேண்டிக் கொண்டால் நல்ல வாழ்க்கைத் துணை அமையும் என்று சொல்கிறது சாஸ்திரம். ஏனென்றால் நாம் வழிப்படும் பெரும்பான்மையான தெய்வங்களுக்கு இந்த நாளில் தான் திருமணம் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிவன் பார்வதி, முருகன் தெய்வயானை, நாராயணன் மகாலட்சுமி, பிரம்மா சரஸ்வதி, மீனாட்சி சுந்தரேஸ்வரர், ராமர் சீதை, போன்ற பல தெய்வங்களுக்கு திருமணம் நடந்த நாள்தான் இந்த பங்குனி உத்திர திருநாள். இப்படியிருக்க இந்த நாளை ‘கல்யாண விரத’ நாள் என்றும் சிலர் கூறுவார்கள். திருமணமாகாதவர்கள் இந்த விரதத்தை எப்படி கடைபிடிப்பது? உலகம் இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில், பிணிகளைத் தீர்க்கும் முருகப் பெருமானை மனதார, முறைப்படி எப்படி வேண்டிக் கொள்வது? என்பதை தெரிந்து கொள்ளவே இந்தப் பதிவு.

Lord Murugan Vel

வழக்கம்போல் பண்டிகை என்றால் முந்தைய நாளே நம் வீடு, பூஜை அறை அனைத்தையும் சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்த நாள் காலை எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு, முடிந்தால் முருகப்பெருமானுக்கு என்ன பூ கிடைக்கிறதோ அதை சூட்டி, ஒரு நெய் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, திருமணமாகாத ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் நல்ல வரன் அமைய வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு, உங்களுடைய உடல் சூழ்நிலைக்கு ஏற்ப விரதம் இருக்க வேண்டும். திருமணமாகாத இளம் வயதில் இருக்கும் ஆண், பெண்கள் முடிந்தவரை மாலை நேரம் வரை எந்த உணவும் உண்ணாமல் விரதமிருப்பது நல்ல பலனைக் கொடுக்கும்.

பங்குனி உத்திர தினத்தன்று மாலை 6 மணிக்கு முருகப்பெருமானுக்கு சக்கரை பொங்கலோ அல்லது கோதுமை அப்பமோ அல்லது உங்களால் முடிந்த ஏதாவது ஒரு இனிப்பு வகை பலகாரத்தை நைவேதனமாகப் படைத்து, தீப தூப ஆராதனை செய்து அந்த பிரசாதத்தை நீங்களும் உண்டு, உங்களது விரதத்தை முடித்துக் கொள்ளலாம். இந்த முறை திருமணம் ஆகாத ஆண்களுக்கும் பெண்களுக்கும்.

Lord Murugan

இன்றைக்கு நம்முடைய உலகமே வைரஸ் பிரச்சனையில் மாட்டிக்கொண்டு, எப்படி மீள்வது என்று தெரியாமல் இக்கட்டான சூழ்நிலையில் தவித்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் வந்திருக்கும் இந்த பங்குனி உத்திர திருநாளில், முருகப்பெருமானை நம் முன்னோர்கள் கூறிய சிறப்பான ஒரு முறையில் வழிபட்டால் பிரச்சனைகள் விரைவாக தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது கொரானா வைரசுக்காக சொல்லப்பட்ட பரிகாரம் அல்ல. ‘கண்ணுக்குத் தெரியாத கஷ்டங்களிலிருந்து கூட, முருகப்பெருமான் நம்மை காத்திடுவார். கண்ணுக்கு தெரியாத இந்த கிருமியிடம் இருந்து நம்மை காக்க வேண்டும் என்பதற்காக செய்யப்படும் பிரத்தியேகமான வேண்டுதல் தான் இது.’

- Advertisement -

முதலில் உங்கள் வீட்டு பூஜை அறையில் முருகனுக்கே உரியதான ‘ஓம் சரவணபவ நட்சத்திர கோலத்தை’ பச்சரிசி மாவால் போட்டுக் கொள்ளுங்கள். அதன்பின்பு, 6 மண் அகல் தீபத்தில் நெய் ஊற்றி, அந்த தீபங்களை, நட்சத்திரத்தை சுற்றி இருக்கும் 6 கட்டங்களிலும் வைத்துவிடுங்கள். கோளத்தின் நடுப்பகுதியில் இருக்கும் ‘ஓம்’ என்னும் மந்திரத்தின் மேல் சிறிதளவு பச்சரிசி பரப்பி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கைப்பிடியளவு பச்சரிசி வைத்தால் போதும். அதன் மேல் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து விடுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தை பார்த்து கோலம் போட்டுக் கொள்ளவும்.

Star kolam

அந்த காலங்களில் எல்லாம் தீராத நோய்கள் வந்தால் ஒரு ரூபாய் நாணயத்தை முடிந்து வைத்து, தெய்வத்தை வேண்டிக் கொண்டால் பிரச்சனைகள் விரைவாக தீர்ந்துவிடும் என்று சொல்லுவார்கள். அதன்படி தான் இன்று நம் உலகிற்கே வந்திருக்கும் இந்த வைரஸ் பிரச்சினை தீர வேண்டும் என்று, மனதார வேண்டிக்கொண்டு அந்த ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து முருகப் பெருமானை வழிபட போகின்றோம்.

அதன்பின்பு முருகப்பெருமானுக்கு உங்களால் முடிந்த நைய்வேதியம் வைத்து, தீப, தூப ஆராதனை செய்து உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம். இந்தப் பூஜையை வீட்டிலிருக்கும் யார் வேண்டுமென்றாலும் செய்து வேண்டிக் கொள்ளலாம். பூஜை முடிந்தவுடன் கோலத்தில் வைத்திருக்கும் பச்சரிசியை எடுத்து, அரைத்து தினம்தோறும் வாசலில் கோலம் போட பயன்படுத்திக் கொள்ளலாம். பச்சரிசியின்மேல் வைத்த ஒரு ரூபாய் நாணயத்தை, மஞ்சள் துணியில் முடிந்து, உங்களது பூஜை அறையிலேயே வைத்து விடுங்கள்.

நமக்கு இருக்கும் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து எப்போது கோயிலுக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கின்றதோ, அந்தநாளில் அந்த ஒரு ரூபாயை எடுத்து முருகன் கோவில் உண்டியலில் சேர்த்து விடுங்கள். நம்முடைய ஒவ்வொருவரின் வீட்டிலும் இந்த பங்குனி உத்திரத்தை முருகப்பெருமானை வீட்டிலிருந்தே இந்த முறைப்படி வழிபடுவோம். எல்லோருக்கும் விடிவுகாலம் நிச்சயம் பிறக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.