பச்சரிசி பன்னீர் கிரேவி செய்முறை

paneer gravy rice
- Advertisement -

பொதுவாக சப்பாத்தி, பூரி போன்றவற்றிற்கு பன்னீரை வைத்து கிரேவி தயார் செய்து கொடுப்போம். இப்படி கொடுப்பதன் மூலம் குழந்தைகள் அதை விரும்பி சாப்பிடுவார்கள். இன்னும் சில குழந்தைகளோ சப்பாத்தி பூரிக்கு எனக்கு பன்னீர் கிரேவி தான் வேண்டும் என்று அடம் பிடிக்கவும் செய்வார்கள். அவர்கள் சாப்பிட வேண்டும் என்பதற்காக தினமும் நம்மால் பன்னீர் கிரேவி செய்து தர முடியாது அல்லவா. பன்னீரைப் போலவே பன்னீரை விட அதிக சுவையுடன் பச்சரிசியை வைத்து பன்னீர் கிரேவி எப்படி செய்வது என்றுதான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக பன்னீர் தயார் செய்வதற்கு நமக்கு அதிக அளவில் பால் தேவைப்படும். அந்த பாலில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து பிறகு அதை பன்னீராக தயார் செய்வதற்கு சில வழிமுறைகளை நாம் பின்பற்றுவோம். இப்படி செய்ய விருப்பம் இல்லாதவர்கள் அல்லது செய்வதற்கு நேரம் இல்லாதவர்கள் கடையில் இருந்து பன்னீரை வாங்கி வந்து செய்வார்கள். இவை இரண்டையும் தவிர்த்து விட்டு பச்சரிசியையும் உருளைக்கிழங்கையும் வைத்து பன்னீர் தயார் செய்து அதில் நாம் கிரேவி வைத்து கொடுத்தோம் என்றால் குழந்தைகளால் எந்தவித வித்தியாசத்தையும் கண்டுபிடிக்க முடியாது .அது எப்படி என்று பார்ப்போமா.

- Advertisement -

தேவையான பொருட்கள்

பச்சரிசி – ஒரு கப்,
உருளைக்கிழங்கு – 2
சீரகம் – 1/2 டீஸ்பூன்
மிளகு – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
சோம்பு – 1/2 டீஸ்பூன்
பட்டை – 1
கிராம்பு – 4
வெங்காயம் – 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 டீஸ்பூன்
தக்காளி – 2,
மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் – ஒரு டீஸ்பூன்,
கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு
பால் – ஒரு கப்,
சோள மாவு – 1/2 கப்
தண்ணீர் – 5 1/2 கப்

செய்முறை

முதலில் பச்சரிசியை நன்றாக சுத்தமாக கழுவிக் கொள்ளுங்கள். இதற்கு நாம் ரேஷன் பச்சரிசி கூட உபயோகப்படுத்தலாம். கழுவிய பச்சரிசியை ஒரு அடுப்பில் மாற்றி வைத்து உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு அதையும் பொடியாக நறுக்கி பச்சரிசியுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் சீரகம், மிளகு இவற்றையும் சேர்த்து மூன்று கப் அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு பத்து நிமிடம் வேக வைத்து விடுங்கள்.

- Advertisement -

10 நிமிடம் கழித்து மூடியை திறந்து பார்க்கும் பொழுது அந்த தண்ணீர் எல்லாம் முழுமையாக வற்றி இருக்கும். இப்பொழுது அடுப்பை அணைத்து விட்டு இதை ஆற வைத்து விடுங்கள். ஆற வைத்த இந்த அரிசி உருளைக்கிழங்கை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு முறை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். பிறகு இதில் பால், சோள மாவு, அரை கப் தண்ணீர் ஊற்றி மறுபடியும் ஒரு முறை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

அரைத்த இந்த விழுதை தட்டில் எண்ணெய் தடவி அதில் பரவலாக ஊற்றி சரிசமப்படுத்தி ஒரு இட்லி சட்டியில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். 10 நிமிடம் கழித்து எடுத்த இந்த தட்டில் இருக்கும் பச்சரிசி மாவை கத்தியை கொண்டு பன்னீராக கட் பண்ணி எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது கிரேவி செய்வோமா?

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் எண்ணெயை ஊற்றி சோம்பு, பட்டை, கிராம்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் இவற்றை சேர்த்து நன்றாக பச்சை வாடை போகும் வரை வளர்க்க வேண்டும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்து மூடி போட்டு தக்காளி குழையும் வரை வேக விட வேண்டும். பிறகு மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா, தேவையான அளவு உப்பு இதனுடன் ரெண்டு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி மசாலா வாடை நன்றாக போகும் வரை கொதிக்க விட வேண்டும்.

மசாலா வாடை போன பிறகு நாம் தயார் செய்து வைத்திருக்கும் பச்சரிசி பன்னீரை இதில் சேர்த்து ஐந்து நிமிடம் நன்றாக கொதிக்க வைத்து கடைசியாக அடுப்பில் இருந்து இறக்கும்பொழுது கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி தூவி இறக்கி விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான பச்சரிசி பன்னீர் மசாலா தயாராகி விட்டது.

இதையும் படிக்கலாமே: வைகாசி விசாக ஸ்பெஷல் கந்தரப்பம் செய்முறை

பால் வாடையே பிடிக்காது என்பவர்களுக்கு கூட இந்த முறையில் நாம் பன்னீர் மசாலா செய்து கொடுத்தால் ஒன்று விடாமல் அனைத்தையும் விரும்பி சாப்பிடுவார்கள்

- Advertisement -