சுவையான பருப்பு துவையல் 10 நிமிடத்தில் பட்டென இப்படி வைத்துக் கொடுத்தால் எவ்வளவு சாதம் இருந்தாலும் போதவே போதாது!

paruppu-thuvaiyal1
- Advertisement -

சூடான சாதத்துடன் பருப்புத் துவையல் இருந்தால் நமக்கு ஒரு குண்டான் சாதம் இருந்தால் கூட பத்தாது. துவரம்பருப்பு, கடலைப்பருப்பு எல்லாம் சேர்த்து செய்யப்படும் இந்த சுவையான பருப்பு துவையல் பாரம்பரியமான முறையில் இதே மாதிரி நீங்களும் ஒரு முறை செய்து பாருங்கள், திரும்பத் திரும்ப செய்யும் அளவிற்கு ஆர்வம் உண்டாகும். அந்த அளவிற்கு சுவை மிகுந்த இந்த பருப்பு துவையல் எளிதாக எப்படி செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

thuvaram-paruppu

பருப்பு துவையல் செய்ய தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – இரண்டு டீஸ்பூன், துவரம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், கடலைப் பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், மல்லி விதைகள் – ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத் தூள் – அரை டீஸ்பூன், வர மிளகாய் – 1, தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன், புளி – சிறு நெல்லிக்காய் அளவு, உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

பருப்பு துவையல் செய்முறை விளக்கம்:
முதலில் பருப்பு துவையல் செய்ய தேவையான பருப்பு வகைகளை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்து வந்ததும் அடுப்பை மீடியமாக வைத்துக் கொண்டு முதலில் துவரம் பருப்பை சேர்த்து கொள்ளுங்கள்.

ellu-thuvaiyal1

லேசாக வறுத்ததும் மல்லி விதைகள், சீரகம், கடலைப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும். இந்த பருப்பு வகைகள் நன்கு பொன்னிறமாக வறுபட்டதும் வரமிளகாய் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவலை பூ போல எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள். பெருங்காயத் தூள் அரை டீஸ்பூன் போட்டு லேசாக வறுக்கவும். அடிபிடிக்காமல் வறுத்து எடுத்துக் கொண்ட பின்பு அதனுடன் ஒரு சிறு நெல்லிக்காய் அளவிற்கு புளி சேர்த்துக் கொள்ளுங்கள். புளி சேர்த்து லேசாக வறுத்து தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து அடுப்பை அணைத்து ஆற விட்டு விட வேண்டியது தான்.

- Advertisement -

இவை நன்கு ஆறிய பின்பு ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இவற்றை சேர்த்து முதலில் சிறிதளவிற்கு தண்ணீர் விட்டு அரைத்து விட்ட பின்பு கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து மீண்டும் கொரகொரப்பாக வருமாறு அரைத்து எடுத்துக் கொள்ளலாம். அதிகம் தண்ணீர் சேர்த்தால் சட்னி ஆகி விடும் எனவே துவையல் போல கெட்டியாக அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் நீங்கள் தாளிக்க விரும்பினால் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை ஆகியவற்றை தாளிதம் செய்து கொள்ளலாம்.

paruppu-thuvaiyal

ரொம்பவே அற்புதமான சுவை நிறைந்த இந்த பருப்பு துவையலை சாதத்துடன் சூடாக நெய் விட்டு அல்லது தேங்காய் எண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு அற்புதமாக இருக்கும். மேலும் சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் போன்றவற்றிற்கு சிறந்த காம்பினேஷன் ஆக இருக்கும் இந்த பருப்பு துவையலில் ஆரோக்கியமும் மிகுந்து காணப்படுகிறது எனவே அடிக்கடி செய்து கொடுங்கள், ஆரோக்கியம் சிறக்கும். இதே முறையில் இதை அளவுகளில் நீங்களும் வீட்டில் செய்து பார்த்து வீட்டில் இருக்கும் அனைவரின் மனதிலும் இடம் பிடித்து விடலாமே!

- Advertisement -