பாசிப்பருப்பு பண் தோசை செய்முறை

bun dosai
- Advertisement -

காலையிலும் இரவிலும் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பொங்கல், உப்புமா, கிச்சடி என்று பலவகையான உணவுகளை நாம் டிபன் ஐட்டமாக எடுத்துக் கொள்வோம். இவை அனைத்தையும் சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து இருக்கும். அரிசி சேர்க்காமல் ஆரோக்கியமான முறையில் ஒரு பண் தோசையை நம்மால் செய்ய முடியும். அதுதான் பாசிப்பருப்பு பண் தோசை. இதில் நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு காய்கறிகளை சேர்ப்பதன் மூலம் ஆரோக்கியம் அதிகரிக்கும். அப்படிப்பட்ட ஆரோக்கியமான பாசிப்பருப்பு பண் தோசையை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

பாசிப்பருப்பில் புரோட்டின், பொட்டாசியம், இரும்புச்சத்து, விட்டமின் பி6, ஆகியவை இருக்கிறது. பாசிப்பருப்பை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் எடை குறையும். வாயு பிரச்சனை நீங்கும். மன அழுத்தம், மன இறுக்கம் குறையும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஜீரண மண்டலம் வலிமை அடையும். நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • பாசிப்பருப்பு – ஒரு டம்ளர்
  • தண்ணீர் – 1/2 டம்ளர்
  • கேரட் துருவியது – 1/4 கப்
  • குடைமிளகாய் துருவியது – 1/4 கப்
  • வெங்காயம் நறுக்கியது – 1/2 கப்
  • தக்காளி நறுக்கியது – 1/4 கப்
  • இஞ்சி பொடியாக நறுக்கியது – 1 1/2 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 4
  • கருவேப்பிலை – ஒரு கொத்து
  • கொத்தமல்லி பொடியாக நறுக்கியது – ஒரு கைப்பிடி
  • உப்பு – தேவையான அளவு
  • சீரகம் – ஒரு டீஸ்பூன்
  • ஈனோ உப்பு – ஒரு டீஸ்பூன்

செய்முறை

முதலில் பாசிப்பருப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்து தண்ணீர் ஊற்றி சுத்தமாக கழுவிக்கொள்ளுங்கள். பிறகு ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மணி நேரம் கழித்து பாசிப்பருப்பை தண்ணீர் இல்லாமல் வடித்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரை டம்ளர் அளவு மட்டும் தண்ணீர் ஊற்றி நைஸ் ஆக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதில் கேரட், குடைமிளகாய், வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, சீரகம் இவற்றை சேர்த்து நன்றாக கலந்து ஐந்து நிமிடம் ஊற வைத்து விடுங்கள். ஐந்து நிமிடம் கழித்து ஈனோ உப்பை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது அடுப்பில் தோசை கல்லை வைத்து கல் சூடானதும் அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி நாம் தயார் செய்து வைத்திருக்கும் இந்த பாசிப்பருப்பு மாவை பண் தோசை ஊற்றுவது போல் ஊற்றி மாவை தடவாமல் சுற்றி எண்ணெய் ஊற்றி மூடி போட்டு மூடி வைத்து விட வேண்டும்.

- Advertisement -

நன்றாக வெந்த பிறகு அதை திருப்பி போட்டு மேலே இரண்டு மூன்று சிறு ஓட்டைகளாக பல் குத்தும் குச்சியை வைத்து போட வேண்டும். பிறகு மறுபடியும் சுற்றி எண்ணெய் ஊற்றி மூடி போட்டு வேக வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் உள்ளுக்குள் இருக்கும் மாவும் நன்றாக வெந்துவிடும். இரண்டு புறமும் நன்றாக வெந்த பிறகு இதை அப்படியே எடுத்து தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு தேங்காய் சட்னி மிகவும் அருமையாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: முட்டைகோஸ் மஞ்சூரியன் செய்முறை

பல அற்புத சத்துக்கள் கொண்ட பாசிப்பருப்பை வைத்து அரிசியை சேர்க்காமல் ஆரோக்கியமான பண் தோசையை ஒரு முறை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.

- Advertisement -