இன்றைய அவசர காலகட்டத்தில் ஆரோக்கியமான உணவு உண்பதையே நாம் மறந்து விட்டோம். பசிக்கும் வேலையில் எதோ சாப்பிட்டோம் என்று தான் காலத்தை ஓட்டி வருகிறோம். இருந்தாலும் நம் உடல் ஆரோக்கியத்திலும் சிறிது கவனமாக இருந்தால் நல்லது. இப்போது எல்லாம் எலும்பு தேய்மானம் என்பது சிறு பிள்ளைகளுக்கு கூட இருக்கிறது.
இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு பிரண்டை ஒரு வரப்பிரசாதம். அனால் இன்று பல பேருக்கு பிரண்டை என்றால் என்னவென்று கூட தெரியாது. இதை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தாலே போதும். உடல் ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்லது. சுவையான பிரண்டை துவையல் செய்வது எப்படி தெரிந்து கொள்வோம் வாருங்கள்
தேவையான பொருட்கள்: பிரண்டை – 1/4 கப், நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், வர மிளகாய் – 5, கருவேப்பிலை – 1/4 கப், கொத்தமல்லி – 1/4 கப், புதினா – 1/4 கப், துருவிய தேங்காய் – 1/4 கப், பூண்டு – 2 பல், இஞ்சி – 1 துண்டு, ஒரு சிறிய கொட்டைப்பாக்கு அளவு – புளி, உப்பு – 1/2 டீஸ்பூன்.
செய்முறை விளக்கம்: முதலில் பிரண்டையை எடுத்து கொள்ளுங்கள். அதில் நான்கு புறமும் மெலிதாக நார் போன்று இருக்கும். அதை உரித்து எடுத்துக்கொண்டு தண்ணீரில் அலசி விடுங்கள். (பிரண்டையை சுத்தம் செய்யும் போது கைகளில் சிறிது எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள். சற்று விறுவிறு என்று இருக்கும்.) பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, இந்த பிரண்டையை அதில் சேர்த்து நன்றாக பச்சை நிறம் போகும் வரும் வரை வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
பிறகு அதே கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெயை ஊற்றி உளுத்தம் பருப்பை போட்டு சற்று நிறம் மாறியவுடன் காய்ந்த மிளகாய், பூண்டு, ஒரு துண்டு இஞ்சி, போட்டு, கால் கப் அளவிற்கு துருவிய தேங்காய், புளி சேர்த்து லேசாக எண்ணெயில் வறுத்து எடுத்து வைத்து விடுங்கள்.
பிறகு அதே கடாயில் எண்ணெய் ஊற்ற வேண்டாம். அந்த கடாயில் இருக்கும் எண்ணெயே போதும். இதில் கருவேப்பிலை, புதினா, கொத்துமல்லி போட்டு அதன் பச்சை வாடை போகும் வரை லேசாக பிரட்டி எடுத்து விடுங்கள். முதலில், மிக்ஸி ஜாரில் தேங்காய், உளுத்தம் பருப்பு வறுத்த கலவை போட்டு ஒரு ஓட்டு ஓட்டிய, பிறகு பிரண்டையை போட்டு ஒரு பாதி அளவு அரைபட்டதும், இத்துடன் வதக்கி வைத்துள்ள கருவேப்பிலை, கொத்துமல்லி, புதினா, தழைகளையும் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு – 1/2 டீஸ்பூன் போட்டு அரைத்து விடுங்கள். புதினா கொத்துமல்லி கறிவேப்பிலை எல்லாம் சேர்த்த, சுவையான, உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான த்ரீ லீவ்ஸ் பிரண்டைத் துவையல் ரெடி.