- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்இந்த மசாலாவை அரைத்து போட்டு பிரியாணி செய்தால், பாய் வீட்டு பிரியாணி தோத்தது போங்க. அப்படி...

இந்த மசாலாவை அரைத்து போட்டு பிரியாணி செய்தால், பாய் வீட்டு பிரியாணி தோத்தது போங்க. அப்படி ஒரு வாசம். அப்படி ஒரு ருசி.

- Advertisement -

சைவ பிரியாணி தாங்க இது. நீங்கள் இதே மெத்தடை பயன்படுத்தி அசைவ பிரியாணி கூட செய்யலாம். தவறு கிடையாது. ஆனால் இன்றைக்கு நாம் பார்க்கப் போவது பிளைன் குஸ்கா தான். இந்த மசாலாவை அரைத்து போட்டு மணக்க மணக்க இந்த பிரியாணியை செய்தால், பிரியாணி செய்யும்போது வரும் வாசம் அப்படியே பக்கத்து வீட்டு வரைக்கும் வீசும். நம்ப பசியை தூண்டும். வாங்க நேரத்தை கடத்தாமல் இந்த பிளைன் குஸ்கா ரெசிபியை பார்த்து விடலாம்.

இரண்டு கப் அளவு பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி விட்டு அதன் பின்பு நல்ல தண்ணீரை ஊற்றி 15 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த பிரியாணிக்கு ஸ்பெஷல் மசாலா அரவை ஒன்று அரைக்க வேண்டும். மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஏலக்காய் – 1, கிராம்பு – 2, பட்டை – 1 சிறிய துண்டு, அன்னாசி பூ – 1, பிரியாணி இலை – பாதி அளவு, சோம்பு – 1 ஸ்பூன், மிளகு – 1 ஸ்பூன், கசகசா – 1 ஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு தண்ணீர் எதுவும் ஊற்றாமல் முதலில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.

அதன் பின்பு அரைத்த இந்த மசாலா பொடியோடு, தோல் சீவி இஞ்சி – 2 இன்ச் நறுக்கியது, தோல் உரித்த பூண்டு பல் – 8, முந்திரி பருப்பு – 10, பழுத்த தக்காளி பழம் பெரியது – 1 சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் இதை விழுது போல அரைத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இதுதான் பிரியாணி சேர்க்கப் போகும் ஸ்பெஷல் மசாலா அரவை. இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்து அடுப்பில் ஒரு குக்கரை வைத்து 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் – 1 ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளலாம். இந்த எண்ணெய் காய்ந்ததும் சோம்பு – 1/2 ஸ்பூன், கிராம்பு – 1, பட்டை – 1, பிரியாணி இலை – 1, சேர்த்து இந்த மசாலா பொருள் பொரிந்து வந்தவுடன் நீலவாக்கில் மிகப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 4, சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் பிரவுன் கலர் வந்ததும் மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் மசாலா விழுதை ஊற்றி நன்றாக வதக்குங்கள்.

மசாலாவில் இருக்கும் பச்சை வாடை அனைத்தும் முழுமையாக நீங்கி எண்ணெய் பிரிந்து வரும் அளவிற்கு வதக்க வேண்டும். மொத்தமாக மூன்றிலிருந்து நான்கு நிமிடம் வரைக்கும் வதக்கி, புதினா 1/2 கைபிடி, கொத்தமல்லி தழை – 1/2 கைப்பிடி அளவு சேர்த்து, மீண்டும் ஒருமுறை வதக்கி, அரிசிக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்ற வேண்டும். 2 கப் அளவு பாசுமதி அரிசிக்கு 2 1/2 கப் அளவு தண்ணீர் சரியான அளவாக இருக்கும். அப்படி இல்லை என்றால் உங்கள் வீட்டு அரிசி எப்படி வேகுமோ அந்த அளவிற்கு தண்ணீரை ஊற்றி குக்கரில் மூடி போட்டு ஹை ஃப்ளேமில் மூன்று விசில் வைத்தால் சூப்பரான மணக்க மணக்க ஒரு குஸ்கா தயாராகி இருக்கும்.

இதை சுவைத்து பாருங்கள். இதனுடைய ருசி உங்கள் நாக்கிலேயே ஒட்டிக் கொள்ளும். உங்களுக்கு தேவைப்பட்டால் இந்த பிரியாணியை சாப்பாட்டு அரிசி, பச்சரிசி, சீரக சம்பா அரிசியில் கூட செய்யலாம். ஆனால் அதற்கு ஊற்றும் தண்ணீர் அளவை மட்டும் பார்த்து ஊற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. லஞ்ச் பாக்ஸில் கட்டி கொடுக்க அட்டகாசமான ரெசிபி இது.

சற்று முன்