ஒரு மனிதனின் வாழ்வை நிர்ணயிக்கக் கூடியது அவன் செய்த பாவங்களும், தான தர்மங்களுமே ஆகும். உச்சத்தில் இருக்கும் ஒருவர் ஒரே அடியாக சறுக்குவதும், பரம்பரை பணக்காரர்கள் ஏழைகளாக மாறுவதும் அவரவர் பாவ புண்ணியத்திற்கு ஏற்றவாறே நடக்கிறது. சிலர் சில செயல்களை பாவம் என்று அறியாமலே செய்வதுண்டு. ஆனால் அதற்கான தண்டனையை அனுபவிக்கும் போது, நான் எந்த பாவமும் செய்யவில்லையே இறைவா, எனக்கெதற்கு இந்த தண்டனை என கேட்பதுண்டு. அப்படி நாம் நம்மை அறியாமல் செய்யும் சில கொடிய பாவங்களால் மீள முடியாத சில சறுக்கல்களை சந்திக்க நேரிடும். அப்படிப்பட்ட பாவங்கள் என்னென்ன என்பது குறித்தும், அதற்கான பரிகாரங்கள் குறித்தும் பார்ப்போம்.
மிகவும் வசதி படைத்த ஒருவர் திடீரென்று பரம ஏழையாக மாறுவதும் உண்டு. அதிக கல்வி அறிவு பெற்று பெரிய பதவியில் இருப்பவரும் திடீரென்று அப்பதவியில் இருந்து விலகி மோசமான நிலைக்கு வருவதும் உண்டு. இதற்குக் காரணம் தாங்கள் பெற்றிருக்கும் செல்வத்தையும், கல்வியையும் பெரியதாக எண்ணி மற்றவர்களை மதிக்காமல் நடப்பதே ஆகும்.
பிறருக்கு மரியாதை தராததும் ஒரு வகையில் பாவம்தான். யாராவது ஒருவர் நம்மிடம் வந்து பேசும்போது அவரை மதிக்காமல் சென்றோம் என்றால், அது பாவமாக கருதப்படுகிறது. தன்னிடம் இருக்கும் செல்வத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பிறரை மதிக்காமல் சென்றால் அந்த செல்வம் அவரை மதிக்காமல் சென்று விடும். அதேபோல் தான் கல்வியும். ஆணவத்தாலும், அகந்தையாலும் யாரையும் இழிவு செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் அது பாவமாக கருதப்படுகிறது.
நல்ல நிலையில் இருக்கும் ஒருவர் திடீரென்று மோசமான நிலைக்கு சென்றுவிட்டால், அதற்கு மேற்கூறிய பாவங்களே காரணமாக கருதப்படுகிறது. இந்த பாவத்தை போக்க மிகவும் எளிமையான பரிகாரம் இருக்கிறது. அந்தப் பரிகாரத்திற்கு நமக்கு தேவைப்படும் பொருள் பூக்கள். பூக்களைப் பார்க்கும் பொழுது சாதாரணமாக நம் மனம் ஒருவித மகிழ்ச்சி நிலையை அல்லது அமைதி நிலையை அடையும்.
அப்படிப்பட்ட பூக்களை நாம் பிறருக்கு தானமாக வழங்கும் போது மேற்கூறிய பாவத்திலிருந்து நாம் விடுபடலாம். இதற்கு அனைத்து நாட்களும் உகந்த நாட்களே என்றாலும், மிகவும் உகந்த நாட்களாக செவ்வாய் மற்றும் வெள்ளி திகழ்கிறது. இந்தக் கிழமைகளில் அருகில் இருக்கும் கோவிலுக்கு நம்மால் இயன்ற அளவு பூக்களை வாங்கிக் கொண்டு போக வேண்டும்.
அந்த பூக்களை கோவில் அர்ச்சகரியிடம் கொடுத்து, கோவிலுக்கு வருபவர்களிடம் கொடுக்குமாறு சொல்லி விட வேண்டும். அவர் பூக்களை சுவாமிக்கு வைத்துவிட்டு பிறகு கோவிலுக்கு வரும் அனைத்து பெண்களுக்கும் பிரசாதமாக இந்த பூக்களை தருவார். பெண்களும் மன மகிழ்ச்சியுடன் அந்த பூக்களை வாங்கி சூடிக் கொள்வர்.
இவ்வாறு நாம் செய்து வருவதன் மூலம் நமக்கு ஏற்பட்ட பாவம் விலகும். மன அமைதியும் நிம்மதியும் கிடைக்கும். தீவினைகள் அகன்று விடும். மேற்கூறிய வழிமுறை ஆண்களுக்கு உகந்ததாக இருக்கும். இதே பூக்களை தானம் கொடுப்பவர்கள் பெண்களாக இருந்தால், அவர்கள் தங்கள் கைகளாலேயே கோவிலுக்கு வரும் மற்ற பெண்களுக்கு வழங்கலாம். இதைவிட நம் வீட்டிற்கு வரும் பெண்களுக்கு நம் வீட்டில் இருக்கும் பூக்களை தருவதன் மூலமும் இந்த பாவத்திலிருந்து நாம் விடுபடலாம். மிகவும் எளிமையான இந்த தானத்தை செய்து மன நிம்மதியுடன், நாம் பெற்ற செல்வத்துடனும், கல்வியுடனும் நலமோடு வாழலாம்.