சுவையான பூண்டு புலாவ் இப்படி 10 நிமிடத்தில் ஈசியா செஞ்சு பாருங்க டிபன் பாக்ஸில் ஒரு பருக்கை கூட மிஞ்சாது அவ்வளவு ருசியாக இருக்கும்!

garlic-poondu-pulav
- Advertisement -

டிபன் பாக்ஸ் ரெசிபிகளில் வித்தியாசமான இந்த பூண்டு புலாவ் ஒரு முறை செஞ்சு கொடுத்து அனுப்பி பாருங்க குழந்தைகள் மட்டுமல்ல, வேலைக்கு செல்லும் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க. டிபன் பாக்ஸில் ஒரு பருக்கை கூட மிஞ்சாது. அவ்வளவு ரசித்து ருசித்து சாப்பிடக் கூடிய இந்த சுவையான பூண்டு புலாவ் எப்படி எளிதாக நம் வீட்டிலேயே செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பூண்டு புலாவ் செய்ய தேவையான பொருட்கள்:
அரிசி – இரண்டு ஆழாக்கு, பூண்டு – ஒரு கைப்பிடி, நெய் – ரெண்டு டேபிள் ஸ்பூன், பட்டை – 3, கிராம்பு – 5, ஏலக்காய் – 5, காய்ந்த மிளகாய் – 7, புதினா – ஒரு கைப்பிடி, உப்பு – தேவையான அளவு, எலுமிச்சை – அரை மூடி, நறுக்கிய மல்லி தழை – சிறிதளவு.

- Advertisement -

பூண்டு புலாவ் செய்முறை விளக்கம்:
பூண்டு புலாவ் செய்வதற்கு முதலில் ரெண்டு ஆழாக்கு அளவிற்கு அரிசியை களைந்து சுத்தம் செய்து உதிரி உதிரியாக வடித்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு கலவை சாதத்திற்கும் சாதம் குழைந்து போகாமலும், சரியாக வேகாமலும் இருக்கக் கூடாது. சரியான பதத்தில் உதிரி உதிரியாக வடிக்கும் போது தான் அந்த கலவை சாதம் ருசி பெறுகிறது. உதிரியாக சாதத்தை வடித்த பின்பு அது ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்க ஒரு ஸ்பூன் எண்ணெயை விட்டு கரண்டியால் கலந்து கொடுங்கள். ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு நன்கு ஆற விட்டு விடுங்கள்.

பிறகு தேவையான எல்லா பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக பூண்டு பற்களை ஒரு ஆழாக்கு அரிசிக்கு அரை கைப்பிடி சேர்க்க வேண்டும். இதில் இரண்டு ஆழாக்கு சேர்த்துள்ளதால் ஒரு கைப்பிடி அளவிற்கு பூண்டை உரித்து வைத்துக் கொள்ளுங்கள். உரித்து வைத்துள்ள பூண்டை உரலில் இட்டு முக்கால்வாசி நன்கு இடித்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள்.

- Advertisement -

எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் லேசாக வதக்கி விட்ட பின்பு இடித்து வைத்த பூண்டு பற்களை சேர்க்க வேண்டும். இதனுடன் உங்கள் காரத்திற்கு ஏற்ப வர மிளகாய்களை காம்பு நீக்கி இரண்டாக கிள்ளி சேருங்கள். இப்போது பச்சை வாசம் போக நன்கு வதக்கி விட வேண்டும். இவற்றின் பச்சை வாசம் போக வதக்கிய பின்பு ஒரு கைப்பிடி அளவிற்கு ஃப்ரஷ் ஆன புதினா இலைகளை சுத்தம் செய்து தண்ணீரை உதரி சேர்த்துக் கொள்ளுங்கள். புதினா இலைகள் சேர்ப்பதால் புலாவ் சூப்பரான டேஸ்டில் இருக்கும். இப்போது தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

புதினா சுருள வதங்கி வர வேண்டும். இந்த சமயத்தில் நீங்கள் ஆற வைத்துள்ள உதிரி உதிரியான சாதத்தை சேர்த்து எல்லா இடங்களிலும் படும்படி நன்கு கலந்து விட வேண்டும். அரைமுடி எலுமிச்சை சாற்றை விதைகள் இல்லாமல் பிழிந்து விடுங்கள். அப்படியே பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி தழைகளையும் தூவி எல்லா இடங்களிலும் பிறகு பிரட்டி சாதத்தை கரண்டியால் அமிழ்த்து பரப்பி வையுங்கள். அரை மணி நேரம் கழித்து சாப்பிட்டு பாருங்கள், அவ்வளவு அருமையாக இருக்கும். இந்த பூண்டு புலாவ் இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க.

- Advertisement -