புளியை கரைத்து வைப்பது தான் ரசம். புளியே சேர்க்காமல் செய்யும் இந்த ரசம் எப்படி இருக்கும்? என்று நினைக்க வேண்டாம். தக்காளி அதிகம் சேர்த்து செய்வதால் தக்காளியின் புளிப்பு சுவையே ரசத்திற்கு அலாதியான சுவையைக் கொடுக்கும். சில பேருக்கு புளி சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் கூறி இருப்பார்கள். இப்படி புளியை தவிர்க்க நினைப்பவர்கள், அவசரத்திற்கு ரசம் வைக்க புளி இல்லாதவர்கள் கடைக்கு ஓட வேண்டிய அவசியமில்லை. 4 தக்காளி இருந்தால் போதும் சட்டென ரெண்டே நிமிடத்தில் சப்புக் கொட்டும் சுவையில் தக்காளி ரசத்தை வைத்து அசத்தலாம். இந்த ரசத்தை வைப்பது எப்படி? என்பதை நாமும் தெரிந்து கொள்ள தொடர்ந்து பதிவை நோக்கி பயணிப்போம்.

புளி இல்லாத தக்காளி ரசம் வைக்க தேவையான பொருட்கள்:
தக்காளி – நான்கு, வர மிளகாய் – 2, கருவேப்பிலை – ஒரு கொத்து, பூண்டு பல் – 5, சீரகம் – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன், தனியா – அரை டீஸ்பூன், சமையல் எண்ணெய் – 2 டீஸ்பூன், தாளிக்க: கடுகு – ஒரு டீஸ்பூன், பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன், வர மிளகாய் – ஒன்று, கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி தழை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.
புளி இல்லாத தக்காளி ரசம் செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பழுத்த தக்காளி பழங்களை நன்கு கழுவி சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும். பின்னர் இரண்டு வர மிளகாயை காம்புடன் சேர்த்து கொள்ளுங்கள். 1 கொத்து கருவேப்பிலையை பச்சையாக சேருங்கள். ஐந்து பூண்டுப் பற்களை தோல் உரிக்காமல் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மிளகு ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் ஒரு டேபிள்ஸ்பூன், தனியா அரை டீஸ்பூன் ஆகியவற்றை பச்சையாக சேர்த்து தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி மிக்ஸியை இயக்கி நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள்.
கடுகு பொரிந்து வந்ததும் அதில் பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும், பின்னர் ஒரு கொத்து கறிவேப்பிலையை கழுவி உருவி சேர்த்து கொள்ளவும். கறிவேப்பிலை பொரிந்ததும், வர மிளகாய் ஒன்றை கிள்ளி சேர்த்து லேசாக வதக்கி நீங்கள் மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றிக் கொள்ளுங்கள். இப்பொழுது ரசத்திற்கு தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

ரசம் நன்கு கொதித்து வரும் சமயத்தில் மல்லி தழை தூவி அடுப்பை அணைத்து ஆற விட வேண்டியது தான். புளி இல்லாத சமயங்களில் இது போல் அவசரத்திற்கு ரசம் வைத்து பாருங்கள், ரொம்பவே சுவையாக இருக்கும். இதில் தக்காளி அதிகம் சேர்ப்பதால் நமக்கு புளி தேவைப்படுவது இல்லை. தக்காளியில் இருக்கும் புளிப்பு சுவை தான் இந்த ரகத்தின் சுவைக்கு காரணம். இதே முறையில் நீங்களும் ஒரு முறை முயற்சி செய்து பார்த்து உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடுங்கள்.