புனர்பூசம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

Astrology

புனர்பூசம் நட்சத்திரத்தை புனர்வஸு என்றும் சொல்வார்கள். ‘புனர்’ என்றால் ‘மீண்டும்’ என்று பொருள். ‘வஸு’ என்பது ‘சிறப்பு’ அல்லது ‘நல்லது’ என்பதைக் குறிக்கும். ‘மீண்டும் சிறப்பு’ என்பதே இந்த நட்சத்திரத்தின் பொருள். பகவான் ஸ்ரீவிஷ்ணு ராமனாக அவதரித்தது இந்த நட்சத்திரத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

punarpusam

பொதுவான குணங்கள்:

தெளிவான அறிவு, பற்று, பாசம், நேர்மை, நியாய உணர்வு, தயாள குணம், பொறுமை போன்ற உயரிய குணங்கள் இவர்களுக்கு உரியது. நல்லதையே நினைத்து நல்லதையே செய்பவர்கள். பிறர் நலம் நாடுபவர்கள். ஆன்மிகத் துறையிலும், பொதுச் சேவையிலும் ஈடுபாடு கொண்டவர்கள் பலர் இந்த நட்சத்திரக்காரர்களாக இருப்பார்கள்.
astrology wheel

புனர்பூசம் நட்சத்திரம் சிறப்பியல்புகள்:

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகுந்த நேர்மையான குணமும், ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை வாழ்பவராகவும் இருப்பவர்கள். இதற்கு உதாரணமாக இருப்பவர் புராணங்களில் ஏகபத்தினி விரதன் எனப் புகழப்படும் அயோத்தி சக்கரவர்த்தி ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ஆவார். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த ஒரு செயலையும் அடக்குமுறையால் சாதிப்பதை விட, தங்களின் அன்பான விட்டுக் கொடுத்து செல்லும் தன்மையால் சாதிப்பதையே விரும்புவர். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்போதும் பொய் பேசுவதை விரும்பமாட்டார்கள். உண்மை பேசுவதால் தங்களுக்கு லாபம் இல்லை என்றாலும் உண்மையையே பேசுவார்கள். இவர்களின் பேச்சில் சாதுரியம் நிறைந்திருக்கும். எதிலும் சிக்கனத்தை கடைபிடிக்கும் குணம் இவர்களிடம் இருக்கும். இவர்களில் பெரும்பாலானவர்கள் பித்த சாரீரம் கொண்டவர்களாக இருப்பார்கள். எனவே அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு குணமாவார்கள். பால், நெய், தயிர் போன்ற பால் தொடர்புடைய உணவுகளை அதிகம் விரும்பி உண்ணத் கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

- Advertisement -

Midhunam

புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் அழுத்தந்திருத்தமாக பேசக் கூடியவர்களாக இருப்பார்கள். நெடுந்தூரம் நடந்து செல்லவேண்டும் என்றாலும் அலுத்துக் கொள்ளாமல் நடக்கும் ஆர்வம் கொண்டவர்கள். குரு பகவானின் சாரமும் இந்த நட்சத்திரக்காரர்களுக்கு இருப்பதால் இவர்களில் பெரும்பாலானவர்கள் சட்டதிட்டத்திற்கு உட்பட்டு நடக்கும் நல்ல குடிமகன்களாக இருப்பார்கள். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். ஒரு சிலர் பிறருக்கு ஞான வழிகாட்டும் ஞான குருவாகவும் உயர்வார்கள். சுலபத்தில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். கோபம், அன்பு போன்றவற்றை மறைத்து வைக்காமல் உடனடியாக வெளிக்காட்டுபவர்களாக இருப்பார்கள். புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் ஒரு கொள்கையை ஏற்றுக் கொண்ட பிறகு உலகமே எதிர்த்தாலும் எக்காரணம் கொண்டும் தாங்கள் கொண்ட கொள்கையில் இருந்து பின்வாங்க மாட்டார்கள். தன்மானம், சுய மரியாதைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பவர்கள். புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் இந்த இரண்டிற்கும் பங்கம் வரும்போது சீரம் சிங்கமாக மாறுவார்கள்.

தங்களுக்கு அடுத்த வேளை உணவு கிடைக்காது என்ற போதிலும் பிறரை ஏமாற்றி பிழைப்பது, சத்தியத்திலிருந்து விலகிய வாழ்க்கை வாழ்வது போன்றவற்றை புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் எப்போதும் செய்வது கிடையாது. பிறரிடம் இருந்து இலவசமாக எதையும் பெற்றுக் கொள்ள மிகவும் தயக்கம் காட்டுவார்கள். ஆனால் தங்களால் முடிந்த எத்தகைய உதவிகளையும் பிறருக்கு செய்த வண்ணமே இருப்பார்கள். புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் குறிப்பாக மனிதர்களின் பசியைப் போக்கும் அன்னதானம் செய்வதில் மிகவும் விருப்பம் கொண்டவர்கள். ஒரு போதும் தாங்கள் செய்கின்ற உதவிகளை பிரபலப்படுத்த மாட்டார்கள். தங்களின் திறமையான பேச்சினால் தங்களுக்குத் தேவையான பல காரியங்களை சாதித்துக் கொள்வார்கள். பிற நபர்களுடன் பழகுவதற்கு முன்பாக அவர்களை தங்கள் பார்வையாலேயே அலசி அவர்களின் குணம் எப்படிப்பட்டது என்பதை ஓரளவு யூகித்துவிடும் திறமை பெற்றவர்களாக புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் இருக்கிறார்கள்.

Nakshatra

தங்களிடம் அதிக நேர்மை, ஒழுக்க குணங்கள் இருப்பதால் யாருக்கும் அஞ்சாமல் கம்பீரமாக வாழ்வார்கள். பொதுவாக சிக்கனமானவர்கள் என்றாலும் தேவை ஏற்படும் போது எத்தகைய செலவுகளும் செய்ய தயங்க மாட்டார்கள். தங்கள் குடும்பத்தினரின் மன உணர்வுகளை அவர்கள் கூறாமலேயே நன்கு புரிந்து கொள்வார்கள். குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்காக எத்தகைய தியாகங்களையும் செய்ய தயங்க மாட்டார்கள். தங்களை சுற்றி உறவுகள், நண்பர்கள் கூட்டம் இருந்தாலும் அவர்களின் மனம் மட்டும் ஏதோ ஒன்றை பற்றி தொடர்ந்து சிந்தித்தவாறு இருக்கும். பிறருடன் இனிமையாக பழகும் குணம் கொண்டவர்கள் என்றாலும் இவர்களாகவே யாரிடமும் வழியே சென்று பேசி பழக மாட்டார்கள். காதல் போன்ற விடயங்களில் அதிகம் ஈடுபாடு இல்லாதவர்களாக இருப்பார்கள். அப்படி காதலில் ஈடுபட்டிருக்கும் புனர்பூச நட்சத்திரத்தினர் தங்களின் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களுக்காக தங்களின் காதலை தியாகம் செய்யவும் தயங்க மாட்டார்கள்.

புனர்பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு மிகச் சிறப்பான திருமண வாழ்க்கை அமையும். பெண் குழந்தைகள் மீது அதிக பிரியம் உள்ளவர்களாக இருப்பார்கள். பெண் தெய்வங்களையே அதிகம் விரும்பி வழிபடுபவர்கள். புனர்பூச நட்சத்திரக்காரர்கள் வாழ்க்கையில் தாங்கள் கற்ற கல்வியை விட அனுபவ அறிவைக் கொண்டே பல சாதனைகள் செய்வார்கள். இந்த நட்சத்திரக்காரர்கள் பெரும்பாலானவர்கள் அரசுப் பணிகளை விட தனியார் துறைகளில் அதிகம் வேலை செய்பவர்களாக இருக்கின்றனர். இந்த புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் 37 வயதிற்கு மேற்பட்ட காலங்களில் வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கப் பெற்று நீண்ட காலம் வாழ்வார்கள்.

புனர்பூசம் நட்சத்திரம் 1 – ஆம் பாதம்

புனர்பூசம் நட்சத்திரத்தின் முதலாவது பாதத்தை அங்காரகன் எனப்படும் செவ்வாய் பகவான் ஆள்கிறார். இந்த பாதத்தில் பிறந்தவர்கள் தங்களின் தாய் மீது மிகுந்த பாசம் கொண்டவர்களாக இருப்பார்கள். உற்றார், உறவினர்களோடு சேர்ந்திருக்கும் வாழ்க்கையை வாழ விரும்புவார்கள். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். ஆன்மீக சொற்பொழிவுகள் ஆற்றுவதில் ஆர்வமும், திறமையும் கொண்டிருப்பார்கள். பிற மனிதர்களின் மீது ஆதிக்கம், அதிகாரம் செலுத்த விரும்புவார்களே தவிர, மற்றவர்கள் இவர்களின் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க மாட்டார்கள். இவர்களுக்கு தந்தை வழி உறவினர்களிடம் மதிப்பும் அவர்களால் தக்க சமயங்களில் உதவிகளும் கிடைக்கும். எப்பொழுதும் உண்மைக்காக பாடுபடுபவர்களாக இருப்பார்கள். தங்களின் முன்னோர்களின் சொத்துக்களை எப்பாடுபட்டேனும் காப்பாற்றுவதில் உறுதியுடன் செயல்படுவார்கள். சகோதர, சகோதரிகளுடன் இணக்கமாக செல்வார்கள். மருத்துவம், சட்டம் போன்ற துறைகளில் மிகப்பெரிய சாதனைகள் புரிந்து பிரபலமானவர்களாக இருப்பார்கள்.

புனர்பூசம் நட்சத்திரம் 2 – ஆம் பாதம்

புனர்பூச நட்சத்திரத்தின் இரண்டாவது பாதத்தை ஆளும் கிரகமாக சுக்கிர பகவான் இருக்கிறார். அனைத்து தரப்பு மனிதர்களுடனும் சமமாகவும், அன்பாக பழகக் கூடிய மனம் கொண்டவர்கள். எப்போதும் இன்முகத்துடன் இருக்கக் கூடியவர்களாக இந்த பாதத்தில் பிறந்தவர்கள் இருக்கின்றனர். ருசி மிகுந்த உணவுகளை அதிகம் விரும்பி உண்பார்களாக இருப்பார்கள். அனைத்து விடயங்களிலும் பரந்த மனப்பான்மை கொண்டவர்களாக இவர்கள் இருக்கின்றனர்.எதிரிகளிடமும் கண்ணியமாக நடந்து கொள்ளும் குணம் கொண்டவர்கள். சொகுசு வாகனங்கள் வாங்குவதையும், அதில் பயணிப்பதையும் மிகவும் விரும்புவார்கள். பல ரகமான வாசனை திரவியங்களை பூசிக் கொள்வதில் விருப்பம் உடையவர்கள். ஆய கலைகளில் அதிக விருப்பமும், அதில் ஒரு சில கலைகளை நன்கு கற்று தேர்ச்சியும் பெற்றிருப்பார்கள். பிற மத மனிதர்களால் மிகுந்த ஆதாயம் பெறுபவர்களாக இந்தப் பாதத்தில் பிறந்தவர்கள் இருக்கின்றனர். தங்களின் பூர்வீக சொத்துக்களை காப்பாற்ற நீதிமன்றங்கள் செல்லவும் தயங்க மாட்டார்கள். அவ்வப்போது ஏதேனும் ஒரு தீவிர சிந்தனையில் ஈடுபடுவார்கள். தங்களின் பெற்றோர் மனைவி மற்றும் குழந்தைகளை மிகவும் நேசிப்பார்கள். அவர்களுக்கு எல்லா வசதிகளும் இருக்குமாறு பார்த்துக் கொள்வார்கள். இந்த பாதத்தில் பிறந்த பெரும்பாலானவர்களுக்கு கணவனால் மனைவிக்கும், மனைவியால் கணவனுக்கும் வாழ்வில் அதிர்ஷ்டகரமான திருப்புமுனைகள் ஏற்படுகின்றன.

astrology-wheel

புனர்பூசம் நட்சத்திரம் 3 – ஆம் பாதம்

புனர்பூச நட்சத்திரத்தின் மூன்றாவது பாதத்தை ஆளும் கிரகமாக புதன் பகவான் இருக்கிறார். இந்தப் பாதத்தில் பிறந்தவர்கள் அமைதியான தோற்றம் கொண்டிருந்தாலும் செயல்படுவதில் சூரர்களாக இருப்பார்கள். சிறந்த அறிவாற்றல் இருக்கும். வாழ்நாள் முழுவதும் ஏதேனும் ஒரு உயரிய விடயத்திற்கான தேடலில் இருப்பார்கள். கதை, கவிதை எழுதுதல் போன்ற எழுத்துத் துறைகளில் அதிக திறமை இருக்கும். பல வகையான பத்திரிகைகள், புத்தகங்கள் வாசிப்பதில் அதிகம் இருக்கும். எந்த ஒரு விடயத்திலும் தங்களின் ஆராய்ச்சி அறிவுக்கு உட்படுத்தி உண்மையை அறிந்து கொண்ட பின்பு ஏற்றுக் கொள்வார்கள். அனுபவ அறிவைக் கொண்டு தங்களின் வாழ்வை மேம்படுத்திக் கொள்வார்கள். பிறருக்கு ஏற்படும் எத்தகைய சிக்கல்களுக்கும் சிறந்த தீர்வுகள், ஆலோசனைகள் வழங்குபவர்களாக இருக்கின்றனர். மற்றவர்களுக்கு தாமாக முன் வந்து உதவி செய்பவர்களாக இருப்பார்கள். பணி நிமித்தம் காரணமாக சிலர் தங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கக் கூடும். சுயநலத்துடன் செயல்படுபவர்களை இவர்களுக்கு அறவே பிடிக்காது. வாழ்வில் எந்த ஒரு விடயத்திலும் இது போதும் என திருப்தி அடைந்து விடாமல் மேலும் மேலும் முன்னேற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள். இயற்கையின் மீது அதிகம் நேசம் கொண்டவர்களாக இருப்பார்கள். இயற்கை அழகு நிரம்பிய இடங்களுக்கு பயணங்களை மேற் கொள்வதில் ஆர்வம் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

புனர்பூசம் நட்சத்திரம் 4 – ஆம் பாதம்

புனர்பூசம் நட்சத்திரத்தின் நான்காவது பாதம் கடக ராசியில் வருவதால் இந்த பாதத்தை ஆளும் நவகிரக நாயகர் மனோகரனான சந்திர பகவானாவார். சுரந்து எழுத்தாற்றல் நிறைந்தவர்களாகவும், கற்பனை வளம் அதிகம் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். தெய்வீக வழிபாட்டில் அதிக ஆர்வமும், பல புண்ணிய தலங்களுக்கு அடிக்கடி சென்று வழிபடும் வழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். குழந்தைகளை போன்ற உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள். குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிப்பதை விரும்புவார்கள். அனைவரையும் எளிதில் நம்பும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். கலாரசனை அதிகமிருக்கும். பார்ப்பவர்களை வசீகரிக்கும் படியான முகத்தோற்றமும், உடலமைப்பையும் பெற்றிருப்பார்கள். தான, தர்ம காரியங்களில் அதிக விருப்பம் இருக்கும். தங்களின் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக அதி தீவிரமாக உழைத்து செல்வங்களை சேர்ப்பார்கள். இவர்கள் மதியாதார் வாசல் மிதியாதே என்கிற பழமொழிக்கு ஏற்ப வாழ்வார்கள். அதே நேரம் தங்களை மதிப்பவர்களுக்கு மிகுந்த பதில் மரியாதை தருபவர்களாக இருப்பார்கள். இந்த நான்காம் பாதத்தில் பிறந்த பலர் வெளிநாடுகளுக்குச் சென்று மிகுந்த செல்வம் சேர்த்து தங்களின் குடும்பத்திற்கு அனுப்புவார்கள்.

guru bagwan

புனர்பூசம் நட்சத்திர பரிகாரம்

புனர்பூசம் நட்சத்திரத்தின் அதிபதியாக குரு பகவான் இருப்பதால் வியாழக்கிழமைகளில் குரு பகவான் சந்நிதிக்கு சென்று மஞ்சள் நிற பூக்களை குரு பகவானுக்கு சமர்ப்பித்து, 27 வெள்ளை கொண்டைக்கடலை கோர்த்த மாலையை சாற்றி, இரண்டு நெய்தீபங்கள் ஏற்றி குரு பகவானுக்குரிய மந்திரத்தை கூறி வழிபட வேண்டும். வருடமொருமுறை ஆலங்குடி குரு பகவான் ஆலயம் சென்று குரு பகவானை வழிபட வேண்டும். இந்த பூஜை வழிபாட்டு முறையை புனர்பூச நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களில் பிறந்தவர்களும் மேற்கொள்ளலாம். மேலும் வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற உடைகளை அணிந்து கொள்வது குரு பகவானின் அருளை உங்களுக்கு கிடைக்கச் செய்யும்.

pachai_payaru

புனர்பூச நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதங்கள் மிதுனம் ராசியிலும், நான்காம் பாதம் கடக ராசியிலும் வருகிறது. முதல் மூன்று பாதங்களில் பிறந்தவர்கள் புதன் கிழமைகளில் விநாயகரை விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். மேலும் ஒரு பிராமண பெண்ணுக்கு ஒரு புதன் கிழமையன்று பச்சை பயறு மற்றும் பச்சை நிற புது புடவை தானமளிப்பது உங்களின் நட்சத்திர பாத தோஷங்களை போக்கும். புனர்பூச நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் பெண் பூனைகள் அருந்துவதற்கு பால் கொடுத்து வருவதும் சிறந்த பரிகாரம் ஆகும்.

budhan

புனர்பூச நட்சத்திரக்கார்கள் தங்களின் வாழ்நாள் முழுவதும் நன்மையான பலன்களையும், அதிர்ஷ்டங்கள், யோகங்கள் போன்றவற்றை பெறுவதற்கு மிதுன ராசியின் நாயகனான புதன் பகவானை புதன் கிழமைகள் தோறும் நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். பிறகு புதன் பகவானின் அம்சம் நிறைந்த பெருமாளையும் வணங்கி வர வேண்டும். வருடத்தில் ஒரு முறையாவது புதன் பகவானின் ஆதிக்கம் நிறைந்த மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்.

மற்ற நட்சத்திரங்களின் குணங்களை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

English overview:
Punarpoosam natchathiram characteristics in Tamil or Punarpoosam nakshatra characteristics in Tamil is given here. Punarpoosam nakshatra people are usually straight forward and they will have helping tendency a lot. Punarpoosam natchathiram Kadaga rasi palangal in Tamil is discussed above clearly. We can say it as Punarpoosam natchathiram palangal or Punarpoosam natchathiram pothu palan or, Punarpoosam natchathiram kunangal for male and female in Tamil.