1 கப் ரேஷன் அரிசி இருந்தா போதும் 10 நிமிஷத்துல பஞ்சு போல உப்பு உருண்டை இப்படி செய்து அசத்தலாமே!

- Advertisement -

அடிக்கடி குழந்தைகள் ஏதாவது செய்து கொடுக்குமாறு கேட்கும் பொழுது இது போல ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வகைகளை செய்து கொடுக்கலாம். ஒரு கப் ரேஷன் அரிசி இருந்தாலே உப்பு உருண்டையை ரொம்பவே பஞ்சு போல சாஃப்டாக இப்படி செய்து விடலாம்! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய இந்த சிற்றுண்டி வகை உப்பு உருண்டை எப்படி செய்வது? என்பதைத் தான் நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

உப்பு உருண்டை செய்ய தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி – ஒரு கப், சமையல் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்தம் பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், கடலை பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், துருவிய தேங்காய் – அரை மூடி, பச்சை மிளகாய் – ஒன்று, கறிவேப்பிலை – ஒரு கொத்து, பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன்.

- Advertisement -

உப்பு உருண்டை செய்முறை விளக்கம்:
முதலில் உப்பு உருண்டை செய்ய ரேஷன் புழுங்கல் அரிசி அல்லது பச்சரிசி எதுவாக இருந்தாலும் பரவாயில்லை எடுத்துக் கொள்ளுங்கள். 200ml டம்ளரில் அளந்து எடுத்தாலும் சரி. ரேஷன் அரிசியை நன்கு சுத்தம் செய்து தண்ணீரில் அலசி குறைந்தது 2 மணி நேரத்திற்கு ஊற விட்டு விடுங்கள். 2 மணி நேரம் கழித்து ஊற வைத்த அரிசியை மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது தாளிக்க வேண்டியவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பச்சை மிளகாயை பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாய் வைத்து அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும், கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் கடலை பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் அதனுடன் உளுந்தம் பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள். இவை இரண்டும் பொன்னிறமாக வறுபட்டதும் துருவி வைத்துள்ள தேங்காய் துருவலை சேர்த்து அடி பிடிக்காமல் வதக்க வேண்டும். பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் பெருங்காயத் தூள் ஆகியவற்றை சேர்த்து வறுங்கள். பின்னர் அரைத்து வைத்துள்ள மாவை ஊற்றி தேவையான அளவிற்கு உப்பு போட்டு இடை விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

மாவு இருகி கெட்டியான பதத்திற்கு உருண்டை உருண்டையாக வெந்து வந்த பின்பு அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். ஓரளவிற்கு கை பொறுக்கும் சூட்டில் ஆறியவுடன் சிறு சிறு உருண்டைகளாக கொழுக்கட்டை பிடிப்பது போல பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் இட்லி பாத்திரம் ஒன்றை வைத்து இட்லி தட்டில் காட்டன் துணியை விரித்து அதன் மீது உருண்டைகளை வைத்து 10 நிமிடம் அவித்து எடுத்தால் போதும் சுவையான உப்பு உருண்டை ரெடி! ரேஷன் அரிசியில் ரொம்பவே சுவையான இந்த உப்பு உருண்டையை நீங்களும் இதே முறையில் செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -