ரெஸ்டாரன்ட் ஸ்டைல் முட்டை கிரேவி எப்படி செய்வது என்பதை பற்றிய ரெசிபி தான் இது. இப்படி முட்டை கிரேவி செய்தால் நீங்கதான் முட்டை கிரேவி செய்வதில் சூப்பர் ஸ்பெஷலா மாறிடுவீங்க. நாண், சப்பாத்தி, பரோட்டா, புலாவ், சுட சுட சாதம் இவைகளுக்கு சைட் டிஷ்ஷாக இந்த முட்டை கிரேவியை அடிச்சுக்க வேறு ரெசிபி கிடையாது. சிம்பிளா ஏதாவது செய்யணும்னு நினைச்சா, அதேசமயம் அது ரொம்ப ரொம்ப ரிச்சா இருக்கணும்னு நினைச்சா இந்த ரெசிபியை ட்ரை பண்ணலாம். வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தால் கூட இதை செய்து கொடுத்து அசத்து விடலாம்.
முதலில் இரண்டு பெரிய வெங்காயங்களை எடுத்து நீளவாக்கில் மெல்லிசாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். பிரியாணிக்கு வெட்டுவது போல. அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் இந்த வெங்காயங்களை எல்லாம் போட்டு மிதமான தீயில் பொன்னிறம் வரும் வரை வறுத்து எண்ணெயை நன்றாக வடிகட்டி எடுத்து ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டுக்கொள்ள வேண்டும். இதோடு 10 முந்திரி பருப்பு போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி விழுது போல அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுது அப்படியே இருக்கட்டும்.
அடுத்தபடியாக அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன் ஊற்றி, அதில் பட்டை – 2, ஏலக்காய் – 2, கிராம்பு – 2, சீரகம் – 1/2 ஸ்பூன், பிரியாணி இலை – 1, பச்சை மிளகாய் – 2, கருவேப்பிலை – 1 கொத்து, போட்டு தாளித்து பொடியாக நறுக்கிய தக்காளி பழம் – 2, இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், சேர்த்து நன்றாக வதக்கி விட்டு அதன் பின்பு மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் விழுதை ஊற்றுங்கள்.
விழுதை நன்றாக கலந்து விட்டு 2 நிமிடம் மூடி போட்டு விடுங்கள். எண்ணெய் பிரிந்து வரும்போது, அடுப்பை சிம்மில் வைத்து விடுங்கள். உப்பு தேவையான அளவு, மல்லித்தூள் – 1 1/2 டேபிள் ஸ்பூன், மிளகாய்த்தூள் – 2 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், சீரகத்தொடி தூள் – 1/2 ஸ்பூன், போட்டு எல்லா மசாலா பொருட்களையும் கலந்து விட்டு கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி விடுங்கள். நிறைய தண்ணீர் ஊற்றக்கூடாது. கிரேவி கொஞ்சம் திக்காக நமக்கு கிடைக்க வேண்டும். பார்த்துக் கொள்ளுங்கள். அடிப்பை சிம்மில் வைத்து ஒரு 4 லிருந்து 5 நிமிடம் இந்த கிரேவியை கொதிக்க வையுங்கள்.
இதற்குள் மற்றொரு அடுப்பில் ஒரு அகலமான கடாயை வைத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மிகப் பொடியாக நறுக்கிய பூண்டு பல் – 2, மிகப் பொடியாக நறுக்கிய கருவாப்பிலை, கொத்தமல்லி தழை, சிறிதளவு, மிளகாய் தூள் – 1/4 ஸ்பூன், மஞ்சள் தூள் – 2 சிட்டிகை, உப்பு – 1/4 ஸ்பூன், இந்த பொருட்களை போட்டு கலந்து விட வேண்டும். இந்த எண்ணெயில் வேகவைத்த முட்டை 5 லிருந்து 6 நடுவே லேசாக கீறி, அந்த எண்ணெயில் போட்டு வதக்க வேண்டும். அந்த மசாலாவில் முட்டை நன்றாக ஃப்ரை ஆன பின்பு ஐந்திலிருந்து ஏழு நிமிடங்கள் ப்ரை ஆன பின்பு, இந்த முட்டையை கொதித்துக் கொண்டிருக்கும் கிரேவியில் போட்டு விடுங்கள்.
இறுதியாக கிரேவிக்கு மேலே கஸ்தூரி மேத்தியை நுணுக்கி தூவி, பிரஷ் கிரீம் இருந்தால் 2 டேபிள் ஸ்பூன் ஊற்றி, அப்படியே கலந்து, இறுதியாக உங்களுக்கு தேவைப்பட்டால் கரம் மசாலா அல்லது சிக்கன் மசாலா பொடி – 1/2 ஸ்பூன் போட்டு, ஒரு மூடி போட்டு இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு பிறகு, சுட சுட பரிமாறினால் வேற லெவல் எக் கிரேவி தயார். நிறைய பேர் வீட்ல கஸ்தூரி மேத்தி இருக்காது. பிரஷ் கிரீம் இருக்காது. கஸ்தூரி மேத்திக்கு பதில் கொத்தமல்லி தழை, பிரஷ் கிரீம்க்கு பதில் பால் ஆடை இவைகளை சேர்த்துக் கொண்டாலும், கொஞ்சம் கூடுதல் சுவை கிடைக்கும். ரெசிபி பிடிச்சவங்க ட்ரை பண்ணி பாருங்க.