அட! ரோட்டுக்கடை டிஃபன் சாம்பாரின் ரகசியம் இதுதானா? இத்தனை நாட்களாக இது தெரியாமல் போய் விட்டதே!

sambar

என்ன தான் வீட்டில் இட்லி தோசைக்கு சாம்பார் செய்தாலும் அது ரோட்டுக் கடையில் வாங்கக்கூடிய சாம்பாரின் சுவைக்கு ஈடு இணையாக இருக்காது. அந்த ரோட்டு கடை சாம்பாரின் வாசம், நம் வீட்டு சாம்பாரில் வீசாது. ரோட்டுக் கடையில் வைக்கக்கூடிய அதே மாதிரி டிபன் சாம்பாரை இன்று நம்முடைய வீட்டிலும் வைப்போமா? நம் வீட்டில் இருப்பவர்கள் இந்த சாம்பாரை வீட்டில் வைத்ததா அல்லது கடையில் வாங்கியதா என்று கேள்வி கேட்கும் அளவிற்கு அருமையான சுவையில் சாம்பார் ரெசிபி உங்களுக்காக.

thuvaram-paruppu

முதலில் துவரம் பருப்பு – 50 கிராம், மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், தண்ணீர் 1 கப், இந்த அளவுகளில் குக்கரில் பருப்பை போட்டு 3 விசில் வைத்து வேக வைத்து கொள்ளுங்கள். வேகவைத்த இந்த பருப்பு அப்படியே இருக்கட்டும்.

அடுத்தபடியாக 10 லிருந்து 15 சின்ன வெங்காயத்தை தோல் உரித்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டு முறை பல்ஸ் பட்டன் கொடுத்தால் போதும். வெங்காயம் கொரகொரப்பாக கிடைத்துவிடும். இதையும் அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.

tomato-chutney1

அடுத்தபடியாக 4 பழுத்த தக்காளிகளை மிக்ஸியில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

ஒரு கடாயில் வரமல்லி – 1 ஸ்பூன், வரமிளகாய் – 4, கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், வெந்தயம் – 1/4 ஸ்பூன் இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும். தண்ணீர் ஊற்றாமல் பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது சாம்பார் செய்ய போகலாம். அடுப்பில் ஒரு அகலமான கடாயை வைத்து கொண்டு, 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் கடுகு – 1 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, குறுக்கே வெட்டிய – 4 பச்சை மிளகாய், இந்த பொருட்களை எல்லாம் போட்டு நன்றாக வதக்கி விட்டு முதலில் கொரகொரப்பாக அரைத்து வைத்த வெங்காயத்தை கடாயில் சேர்த்து வதக்க வேண்டும்.

sambar-podi1

வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் அரைத்து வைத்த தக்காளி விழுதையும் சேர்த்து, அடுத்தபடியாக மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், பெருங்காயம் – 1/4 ஸ்பூன் சேர்த்து தக்காளியின் பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கி விடுங்கள். தக்காளியின் பச்சை வாடை நீங்கிய பின்பு, மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் சாம்பார் பொடியை கடாயில் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.

kadalai-maavu2

அடுத்தபடியாக ஒரு சிறிய கிண்ணத்தில் 1 டேபிள்ஸ்பூன் அளவு கடலை மாவை 1/2 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி, கலந்து கடாயில் ஊற்றி நன்றாக கலந்துவிட வேண்டும். இப்போது கரைத்து ஊற்றிய கடலை மாவும், மசாலா பொருட்களும் சேர்ந்து நன்றாக 5 நிமிடங்கள் வரை கொதிக்க வேண்டும். கடலை மாவின் பச்சை வாடை முழுமையாக நீங்கிவிடும்.

கடலைமாவை கரைத்து ஊற்றுவதன் மூலம் சாம்பார் கட்டி பதத்திற்கு இருக்கும். தேவையான அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். கடலை மாவின் பச்சை வாடை போனபின்பு இறுதியாக வேகவைத்த பருப்பை ஊற்றி, கலந்து உப்பு சரி பார்த்து கொள்ளவும். பருப்பை ஊற்றி சாம்பார் 5 நிமிடங்கள் நன்றாகக் கொதித்ததும், இறுதியாக கொத்தமல்லி தழையை தூவி பரிமாறிக் கொள்ளலாம். சூப்பரான சுவையான ரோட்டு கடை சாம்பார் தயார். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம்.