நாம் ஒவ்வொருவரும் பிறப்பு எடுப்பதற்கு முக்கியமான காரணம் முன் ஜென்மத்தில் நாம் செய்த பாவங்களின் விளைவால் தான். அதை தான் நாம் கர்ம வினைகள் என்று கூறுகிறோம். அப்படிப்பட்ட கர்ம வினைகள் நீங்க வேண்டும் என்றாலும் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் தீர வேண்டும் என்றாலும் நாம் செய்யக்கூடிய முக்கியமான வழிபாடாக திகழ்வதுதான் ஏகாதசி வழிபாடு. ஏகாதசி என்று கூறினாலேயே பாவங்கள் நீங்கும் என்று புராணங்களில் ஒரு கதை கூட கூறி இருக்கிறார்கள். அவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக தான் இந்த ஏகாதசி திதி என்பது திகழ்கிறது. அதிலும் வைகாசி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை ஏகாதசியை நிர்ஜலா ஏகாதசி என்று கூறுவோம்.
ஒவ்வொரு ஏகாதசிக்கும் விரதம் இருக்க வேண்டும் என்று நமக்கு தெரியும். அதோடு மட்டுமல்லாமல் எந்த முறையில் விரதம் இருக்க வேண்டும் என்பதும் ஒவ்வொரு ஏகாதசிக்கும் மாறுபடும். அந்த வகையில் இந்த நிர்ஜலா ஏகாதசி அன்று ஜலம் கூட அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். ஜலம் என்றால் தண்ணீர். தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருந்து வழிபாடு செய்யக்கூடிய ஏகாதசி தான் நிர்ஜலா ஏகாதசி. அப்படிப்பட்ட நாளில் காலையில் எழுந்ததும் எந்த ஒரு நாமத்தை கூறி பெருமாளை வழிபாடு செய்த அனைத்து விதமான பாவங்களும் நீங்கும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
சகல பாவங்களை நீக்கும் மந்திரம்
புராணங்களில் கூறியது போல விரதம் இருப்பது என்பது இன்றைய காலத்தில் மிகவும் கடினமான ஒன்றாகவே கருதப்படுகிறது. தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருக்க முடியும் என்று நினைப்பவர்கள் தாராளமாக விரதம் இருந்து கொள்ளலாம். தங்களுடைய உடல் சூழ்நிலைக்கு அவ்வாறு இருக்க முடியாது என்று நினைப்பவர்கள் உடல் சூழ்நிலையை பொருத்தவாறு விரத முறைகளை மாற்றிக் கொள்ளுங்கள். விரதமே இருக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. எந்தவித உணவையும் எடுத்துக் கொள்வதற்கு முன்பாக இந்த மந்திரத்தை ஒன்பது முறை நாம் முழுமனதோடு பெருமாளை நினைத்து கூறினாலே நம்முடைய பாவங்கள் தீரும்.
இந்த மந்திரத்தை கூறுவதற்கு எந்தவித பூஜை முறைகளும் கிடையாது. எந்தவித கட்டுப்பாடுகளும் கிடையாது. காலையில் எழுந்ததும் வடக்கு பார்த்தவாரோ அல்லது கிழக்கு பார்த்தவாரோ அமர்ந்து கொண்டு இந்த மந்திரத்தை கூறினால் கூட போதும். அல்லது சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் பெருமாளுக்கு முன்பாக தீபம் ஏற்றி வைத்த பிறகு கூட இந்த மந்திரத்தை கூறலாம். ஆனால் எந்தவித உணவும் எடுத்துக் கொள்ளாமல் முடிந்த அளவிற்கு தண்ணீர் அருந்துவதற்கு முன்பாக இந்த மந்திரத்தை கூறினோம் என்றால் அதற்குரிய பலனை அதிக அளவில் நம்மால் பெற முடியும்.
மந்திரம்
“ஓம் நமோ பகவதே வாசுதேவாய”
இதையும் படிக்கலாமே:ஏகாதசி விரதம் 2025
மிகவும் எளிமையான இந்த அதிசக்தி வாய்ந்த மந்திரத்தை முழுமனதோடு காலையில் 9 முறை யார் ஒருவர் பெருமாளை நினைத்து கூறுகிறார்களோ அவர்கள் இதுவரை செய்த அனைத்து விதமான பாவங்களும் கர்ம வினைகளும் படிப்படியாக விலக ஆரம்பிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.