உயிருடன் இருந்த புலி, பாபாவின் காலை பற்றிய உண்மை சம்பவம்

sai-baba-with-tiger-1
- Advertisement -

எல்லாம் வல்ல இறைவன் எப்படி பேதங்களைக் கடந்தவரோ, அது போலவே அவரின் அம்சமாக இந்த பூமியில் அவ்வப்போது தோன்றும் ஞானிகள், மகான்களும் மனிதர், விலங்கு என பேதமில்லாமல் அனைத்தின் மீதும் அன்பு கொண்டிருந்தனர். அந்த வகையில் “ஷீர்டி” மகானாகிய “ஸ்ரீ சாய் பாபா” ஒரு விலங்குக்கு மோட்சமளித்த ஒரு உண்மை சம்பவத்தைப் பற்றிய தொகுப்பு தான் இது.

Sai baba

அக்காலத்திய பம்பாய் மாகாணத்தில் புகழ் பெற்ற சர்க்கஸ் நிறுவனம் ஒன்று இருந்தது. காலப்போக்கில் அந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியதால், அதன் வசமிருந்த விலங்குகளையெல்லாம் ஒரு மிருகக்காட்சி சாலைக்கு கொடுத்து விட்டது. ஆனால் அவர்களிடம் பல ஆண்டுகளாக இருந்த புலி ஒன்று முதுமையடைந்து தனது இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருந்தது. அதன் மீது பிரியம் கொண்டிருந்த அந்த நிறுவனத்தினர், அதை மட்டும் விலங்குகள் காட்சி சாலைக்கு கொடுக்காமல் தங்களுடனேயே வைத்துக்கொண்டனர். ஆனால் அந்த புலி படும் வேதனைக்கு என்ன தீர்வு என யோசித்த போது, யாரோ ஒருவர் ஷீர்டியில் வசிக்கும் சாய் பாபாவிடம் இந்த புலியைக் கொண்டு சென்றால், அவர் ஏதேனும் ஒரு வகையில் இந்த விலங்குக்கு உதவக்கூடும் என்று ஒரு யோசனையைக் கூறினார்.

- Advertisement -

இந்த யோசனையை அங்கிருந்த எல்லோரும் ஆமோதித்து, அந்தப் புலியை ஒரு இரும்பு கூண்டிலடைத்து, ஒரு வண்டியில் ஏற்றி நேரே ஷீர்டியில் ஸ்ரீ சாய் பாபா வாழ்ந்த மசூதிக்கு முன்பு கொண்டு சென்று நிறுத்தினர். உடனே அந்த சர்க்கஸ் ஊழியர்களில் ஒருவர் அந்த மசூதியின் உள்ளே சென்று “ஸ்ரீ சாய் பாபாவிடம்” இந்த விவரங்களைக் கூறினார். இதை கேட்டு மசூதிக்கு வெளியே வந்த சாய் பாபா, கூண்டிலிருந்த அந்த வயதான புலியை கருணையுடன் நோக்கினார். பிறகு அந்த சர்க்கஸ் ஊழியர்களிடம் அந்த கூண்டின் கதவை திறந்து அந்த புலியை வெளியே விடுமாறு கூறினார். என்னதான் அந்த விலங்கு வயதானதாக இருந்தாலும் அது ஒரு புலி என்பதை மனதில் கொண்டு அங்கிருந்த அனைவருமே பாபா கூறியதைக் கேட்டு அஞ்சினர்.

Sai baba

அப்போது பாபா தன் மீது நம்பிக்கை வைத்து தான் கூறியபடி செய்யுமாறு மீண்டும் வலியுறுத்தினார். அவர் கூறியபடியே அந்த ஊழியர்களும் அந்த புலியை கூண்டின் கதவை திறந்து விட்டனர். அப்போது அந்த கூண்டிலிருந்து அந்த புலி மிக மெதுவாக நடந்து ஸ்ரீ சாய் பாபாவின் அருகே சென்று நின்றது. பின்பு சிறிது நேரத்திலேயே பாபாவின் காலடிக்கருகில் படுத்து அந்த புலி தனது உயிரை விட்டது. இக்காட்சியை சுற்றியிருந்த மக்கள் எல்லோரும் அதிசயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த சமயம் சாய் பாபா, “இந்தப் புலி இறைவனின் புண்ணிய பூமியான இந்த ஷீர்டியில் உயிர் நீத்ததால், அது மோட்சம் அடைந்து விட்டதாக” கூறினார். விலங்குக்கும் பரிவுகாட்டும் பாபாவின் கருணையை ஷீர்டி மக்கள் அனைவரும் அன்று போற்றினர்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
35 ரூபாயில் வாழ்க்கையை மாற்றிய சாய் பாபா – உண்மை சம்பவம்

மேலும் பல சாய் பாபா கதைகள், அற்புதங்கள் , சாய் பாபா மந்திரங்கள், பாடல்கள் என பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -