சின்ன வெங்காயம், பூண்டு தோல் உரிக்க இதை விட சுலபமான வழி இருக்கவே முடியாது! கரண்ட் இல்லாத நேரத்தில் தேங்காய் பால் எடுப்பது எப்படி?

oniongarlic-coconutmilk-brinji-ilai
- Advertisement -

நாம் சமையல் செய்யும் பொழுது நமக்கு சில விஷயங்கள் செய்வதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். அந்த வகையில் பூண்டு உரிப்பது என்பதும் கூட கடினமான ஒரு காரியம் தான். பூண்டு உரிக்க கைகளில் நகம் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள், இல்லை என்றால் நக இடுக்குகளில் சென்று அது வலியை உண்டாக்கி விடும். ஆனால் இந்த முறையில் பூண்டு உரித்தால் உங்களுக்கு நகம் இருக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. பூண்டு மட்டுமல்ல சின்ன வெங்காயம் உரிக்கவும் பெரும் சிரமப்பட வேண்டியிருக்கும். அது போல திடீரென தேங்காய் பால் அரைக்கும் பொழுது கரண்ட் போய் விட்டால் என்ன செய்வீர்கள்? இப்படி நமக்கு கிச்சனில் தெரிய வேண்டிய சில முக்கிய விஷயங்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

onion-garlic

பூண்டு அல்லது சின்ன வெங்காயம் எதுவாக இருந்தாலும் நீங்கள் அதனுடைய தோலை உரிக்க அவ்வளவு சிரமப்பட வேண்டிய அவசியம் இல்லை. பத்து நிமிடம் தண்ணீரில் ஊற வைத்தால் போதும். அதன் பிறகு ஒவ்வொன்றாக எடுத்து கத்தி வைத்து அதன் தலைப் பகுதியை இலேசாக நீக்கினால் போதும், சுலபமாக உரித்து விடலாம். இதே முறையில் தான் சின்ன வெங்காயத்தையும் செய்ய வேண்டும். இப்படி செய்தால் பூண்டு, வெங்காயம் கிலோ கிலோவாக கொடுத்தால் கூட பத்து நிமிடத்தில் எந்த சிரமமில்லாமல் மொத்தத்தையும் உரித்து விடலாம்.

- Advertisement -

கரண்ட் இல்லாத நேரத்தில் தேங்காய் பால் எடுக்க சுலபமான வழி ஒன்று உள்ளது. தேங்காயை நன்கு துருவி எடுத்துக் கொள்ளுங்கள். துருவிய தேங்காயை அப்படியே வைத்து விட்டு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சுட வையுங்கள். தண்ணீர் லேசான சூடானதும் அதில் துருவிய தேங்காயை சேர்த்து இரண்டு நிமிடத்தில் அடுப்பை அணைத்து விடுங்கள். அதற்குள் தேங்காயில் இருக்கும் பால் முழுவதும் தண்ணீரில் இறங்கி இருக்கும். பிறகு மெல்லிய காட்டன் துணியில் அப்படியே வடிகட்டி முழுவதுமாக பிழிந்து எடுத்தால் திக்கான தேங்காய்ப்பால் சூப்பராக கிடைத்துவிடும். இதற்காக மிக்ஸி ஜாரை பயன்படுத்த வேண்டிய அவசியமே இல்லை.

grapes

நாம் வாங்கும் பன்னீர் திராட்சை அல்லது கருப்பு திராட்சை போன்றவை பூச்சி தொந்தரவுகளால் பாதிக்கப்படாமல் இருக்க அதிக அளவில் மருந்துகள் தெளிக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. எனவே அதனை வாங்கி வந்தவுடன் அப்படியே ஒரு முறை இரண்டு முறை கழுவி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். நாலைந்து முறை நன்கு தண்ணீரில் கழுவி அதன் பின் மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரில் சிறிதளவு கல் உப்பு மற்றும் கொஞ்சம் மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளுங்கள். அதில் இது போன்ற திராட்சை வகைகள் அல்லது உங்களுக்கு சந்தேகம் தரும் வகையிலான பூச்சி மருந்துகள் தெளிக்கப்பட்ட பழங்கள் எதுவாக இருந்தாலும் 10 நிமிடம் ஊற வைத்து அதன் பின் வடிகட்டி நன்கு தண்ணீரில் கழுவி பின் தோலை உரித்து சாப்பிடலாம். இதனால் பூச்சிக்கொல்லி மருந்துகள் மூலம் வரக்கூடிய ஆபத்துக்கள் நமக்கு தடுக்கப்படுகின்றன.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் முழு தானிய வகைகள் ஆக இருக்கும் பட்டாணி, பச்சைப் பட்டாணி, மொச்சை, கொண்டைக் கடலை போன்ற பொருட்களை ஆறு மாதத்திற்கு மேல் எந்த வகையான பூச்சி, புழுக்களும் அண்டாமல் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள சுலபமான டிப்ஸ் ஒன்று உள்ளது. நீங்கள் அதை அடைத்து வைக்கும் டப்பாவில் ஒரு துண்டு சுக்கு மற்றும் ஒரு பிரிஞ்சி இலையை நன்கு கிழித்து துண்டு துண்டாக போட்டுக் கொள்ளுங்கள். எவ்வளவு நாட்கள் ஆனாலும் பூச்சிகள் வராமல் அப்படியே பிரஷ்ஷாக இருக்கும்.

idli-rava

ரவை, கோதுமை ரவை போன்ற பொருட்களை வாங்கும் பொழுது நீங்கள் அப்படியே வைத்திருந்தால் கொஞ்ச நாட்களில் அதில் வண்டுகள் மற்றும் புழுக்கள் வர ஆரம்பித்து விடும். எனவே வாங்கி வந்ததும் அதனை மிதமான சூட்டில் லேசாக வறுத்து அதன் பின் ஒரு காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து அதில் நான்கைந்து பிரிஞ்சி இலைகளைப் போட்டு வைத்தால் போதும். எவ்வளவு நாட்கள் ஆனாலும் அதில் வண்டுகள், புழுக்கள் வராமல் அப்படியே பிரஷ்ஷாக இருக்கும். இதே முறையில் சர்க்கரையையும் நாம் செய்து வைத்தால் போதும் எறும்புகள் தொந்தரவு இல்லாமல் இருக்கும்.

- Advertisement -