சஷ்டி விரதம் இருப்பது எப்படி? அதன் பலன்கள் என்ன?

murugan-1

தீபாவளியை அடுத்த பிரதமை நாளில் சஷ்டி விரதம் தொடங்கப்படுகிறது.  சஷ்டி விரதத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால் அவர்களுக்கு நிச்சயமாக குழந்தை வரம் கிடைக்கும். கணவனும், மனைவியும் சேர்ந்து இந்த விரதத்தை மேற்கொண்டால் இன்னும் சிறப்பு.

murugan

“சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்று ஒரு பழமொழி உண்டு.   இதற்கான அர்த்தம் என்னவென்றால், சஷ்டியில் விரதம் இருந்தால் அகப்பையில் (கர்ப்பப்பையில்) கரு உருவாகும் என்பதே அர்த்தமாகும். ஆனால் இந்த பழமொழி காலப்போக்கில் “சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்” என்று மாறிவிட்டது. அதாவது சட்டியில் சாப்பாடு இருந்தால்தான் அதை கரண்டியால் எடுக்க முடியும் என்று மாற்றி விட்டனர். அகப்பை என்பது கரண்டி போல் உருவ அமைப்பை கொண்ட ஒரு பொருளை குறிக்கும்.

குழந்தை வரத்திற்காக மட்டும்தான் இந்த விரதத்தை கடைபிடிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. நம் வீட்டில் நிம்மதி, செல்வம், ஒற்றுமை மற்றும் சகல சௌபாக்கியங்களும் பெருக இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.

சஷ்டி விரதம் என்பது பொதுவாக 6 நாட்கள் கடைபிடிக்கப்படும்.  ஏழாவது நாள் அழகர் முருகனின் திருக்கல்யாணம் நடைபெறும்.  இந்த ஆறு நாட்களும் விரதம் இருக்க முடியாதவர்கள், சூரசம்ஹாரம் நடைபெறும் கடைசி நாளில் மட்டுமாவது, ஒருவேளை உணவு உட்கொண்டு விரதம் இருக்கலாம்.   திருமணம் ஆகாதவர்கள்  திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டால் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.

Lord-Murugan-1

- Advertisement -

 

முன்பெல்லாம் சஷ்டி விரதம் மிகவும் கடுமையான முறையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. எச்சில் கூட முழுகாமல் காற்றை மட்டுமே சுவாசித்து சிலபேர் இந்த சஷ்டி விரதத்தை மேற்கொள்வார்கள். சிலர் தண்ணீரை மட்டும் குடித்து விட்டு விரதம் இருப்பார்கள். இன்னும் சில பேர் முதல் நாளில் ஒரு மிளகு, இரண்டாவது நாளில் இரண்டு மிளகு, மூன்றாவது நாளில் மூன்று மிளகு இப்படி ஆறு நாட்கள் வரை உட்கொண்டு விரதத்தை மேற்கொள்வார்கள். விரதம் இருப்பதன் மூலம் வயிறு காலியாக இருக்கும். இதன் காரணமாக எந்தவிதமான நச்சு சுரப்பிகளும் சுரக்காமல் இருக்கவும், வயிற்றை தூய்மைப்படுத்தவும் இந்த முறை கடைபிடிக்கப்பட்டது.

சஷ்டி விரதம் இருப்பது எப்படி:

நாம் விரதம் இருக்கக் கூடிய இந்த ஆறு நாட்களிலும் காலை எழுந்தவுடன் சுத்தமாக குளித்து முடித்து முருகப்பெருமானுக்கு பூஜை செய்யவேண்டும். பூஜைக்கு ஏதாவது ஒரு நைவேத்தியத்தை படைக்க வேண்டும். சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கற்கண்டு, பழ வகைகள் எதுவாக இருந்தாலும் சரி படைக்கலாம். இவை எதுவுமே இல்லை என்றாலும் சரி. சர்க்கரை மட்டும் வைத்துக் கூட பூஜை செய்யலாம். விரத நாட்களில் தினம் ஒரு முறையாவது சஷ்டி கவசம் பாடுவது மிகவும் சிறப்பு.

Lord Murugan

 

விரதத்தை மேற்கொள்ளும் முறை என்பது அவரவர் உடல் நிலையை பொறுத்து தான் பின்பற்ற வேண்டும். இந்த 6 நாட்களிலும் வெறும் பால், பழம் இவற்றை மட்டும் உட்கொண்டு விரதம் இருப்பவர்களும் உள்ளார்கள். அல்லது மதியம் ஒரு வேளை மட்டும் தயிரும், சாதமும் சாப்பிட்டு விட்டு விரதம் இருப்பவர்களும் உள்ளார்கள். இப்படி உங்களால் முடிந்தவரை விரதத்தை பின்பற்றிக் கொள்ளலாம்.  இவை எதையுமே பின்பற்ற முடியாதவர்கள் அசைவ சாப்பாட்டை மட்டுமாவது தவிர்க்கலாம். இந்த விரதத்தை சிலர் ஆறு நாட்களும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று கூட கடைபிடிக்கிறார்கள்.

அறிவியல் காரணம்:
இந்த ஆறு நாட்களும் அதிகப்படியான உணவினை உட்கொள்ளாமல் விரதம் இருக்க ஓர் அறிவியல் ரீதியான காரணமும் உண்டு. நாம் விரதம் இருக்கும் பொழுது, நமது வயிறு வெற்றிடமாக்க படுகிறது. நாம் வயிற்றுக்கு ஓய்வு கொடுக்கிறோம். இப்படி இருக்கும்போது வயிற்றை சுத்தப்படுத்துவதற்கான வாய்ப்பு நம் உடலுக்கு கிடைக்கிறது. இதனால் நாம் ஆரோக்கியமாக வாழலாம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாகும்.

Murugan

இரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், இவர்கள் எல்லாம் கட்டாயம் விரதம் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. நாம் எண்ணிய எண்ணங்கள் எல்லாம் நிறைவேற, எடுத்த காரியத்தில் வெற்றி பெற, அந்த முருகப் பெருமானை நினைத்து விரதமிருந்து பிரார்த்தனை செய்வதோடு, அதற்கான முயற்சியில்  தன்னம்பிக்கையோடு தொடர்ந்து ஈடுபட வேண்டும். வாழ்வில் வெற்றி பெறுவோம்.