மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்யக்கூடிய ஒவ்வொரு நபர்களின் வேண்டுதலும் பணம் தொடர்பான பிரச்சனைகள் தீர வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வதற்கு குறிப்பிட்ட சில நாட்கள் சிறப்பு வாய்ந்ததாக திகழ்ந்தாலும் ஆவணி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை அஷ்டமியில் இருந்து தேய்பிறை அஷ்டமி வரை வரக்கூடிய 16 நாட்களும் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டிய நாட்கள் ஆக கருதப்படுகிறது. இந்த 16 நாட்களும் செய்ய இயலாதவர்கள் கடைசி நாளான தேய்பிறை அஷ்டமி அன்று மகாலட்சுமி பூஜையை செய்து வழிபாடு செய்யும்பொழுது சகல செல்வங்களையும் பெற முடியும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
செல்வங்களை தரும் மகாலட்சுமி பூஜை
மகாலட்சுமி தாயாரை அஷ்டமி தினத்தில் வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. ஏன் என்றால் அஷ்டமி திதி வரக்கூடிய நாளில் கால பைரவரை வேண்டி தங்களுடைய அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தக்க வைத்துக் கொள்கிறார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. அதனால் தான் அஷ்டமி தினத்தில் கால பைரவரை வழிபாடு செய்யும்பொழுது அஷ்டலட்சுமிகளின் அருளையும் பெற முடியும். அதிலும் குறிப்பாக வளர்பிறை அஷ்டமி என்பது அஷ்டலட்சுமிகளின் அருளை பெறுவதற்கு உகந்ததாகவே கருதப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் வரக்கூடிய ஆவணி வளர்பிறை அஷ்டமியில் இந்த விரதத்தை ஆரம்பித்து தொடர்ச்சியாக 16 நாட்கள் மகாலட்சுமி தாயாரை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்யும் பொழுது அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய வறுமை முற்றிலும் நீங்கும். இந்த 16 நாட்களும் வழிபாடு செய்ய இயலாதவர்கள் கடைசி நாளான தேய்பிறை அஷ்டமி அன்று மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும்.
அந்த தேய்பிறை அஷ்டமி இன்று வருகிறது. இன்று மாலை 5:30 மணியிலிருந்து 11:30 மணிக்குள் இந்த மகாலட்சுமி பூஜையை நாம் மேற்கொள்ள வேண்டும். விரதம் இருக்க இயன்றவர்கள் இன்று முழுவதும் விரதம் இருந்து மாலை மகாலட்சுமி பூஜையை செய்த பிறகு விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். விரதம் இருக்க இயலாதவர்கள் வழிபாட்டை மட்டும் செய்யலாம். வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய சுவாமி படங்களுக்கு புது மலர்களை சாற்றிக் கொள்ளுங்கள். வீட்டில் மகாலட்சுமி அம்சமாக இருக்கக்கூடிய கோமதி சக்கரம், சங்கு, மகாலட்சுமியின் சிலை போன்ற எதுவாக இருந்தாலும் அதற்கு பூஜை செய்யும் பொழுது பாலபிஷேகம் செய்ய வேண்டும். சுத்தமான பசும்பாலை பயன்படுத்தி அபிஷேகம் செய்து கொள்ளுங்கள். பாக்கெட் பாலை பயன்படுத்த வேண்டாம். அப்படி மகாலட்சுமியின் சொரூபமாக எதுவும் இல்லை படம் மட்டும்தான் இருக்கிறது என்பவர்கள் வழிபாட்டை மட்டும் மேற்கொள்ளலாம்.
இந்த வழிபாட்டிற்கு 9 அரச இலைகள் வேண்டும். அந்த அரச இலைகளை பன்னீரால் கழுவி மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக வைத்து அந்த 9 அரச இலைக்கும் சந்தனம் குங்குமம் வைத்து அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி தாமரை தண்டு திரி போட்டு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். பிறகு வீடு முழுவதும் சாம்பிராணி தூபத்தை காட்ட வேண்டும். மகாலட்சுமி தாயாருக்கு அர்ச்சனை செய்வதற்காக வாசனை மிகுந்த மலர்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த மலர்களை வைத்து பின்வரும் மகாலட்சுமி தாயாரின் இந்த ஒரு மந்திரத்தை வாய் திறந்து ராகத்தோடு பாட்டுப்போல பாடி அர்ச்சனை செய்ய வேண்டும். நெய்வேத்தியமாக மகாலட்சுமி தாயாருக்கு சர்க்கரைப் பொங்கலை வைக்கலாம், கல்கண்டு ஏலக்காய் கலந்த பாலை வைக்கலாம். அர்ச்சனை செய்து முடித்த பிறகு உங்களுடைய வாழ்நாள் முழுவதும் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம்.
மந்திரம்
” ஓம் ஸ்ரீம் க்ரீம் மஹாலக்ஷ்மி நமஹ “
இதையும் படிக்கலாமே: பணம் தொடர்பான வேண்டுதலை நிறைவேற்றும் குலதெய்வ வழிபாடு
மகாலட்சுமி தாயாரின் பரிபூரணமான அருளை பெறுவதற்கு மிகவும் எளிமையான இந்த பூஜையை செய்து சகல செல்வங்களையும் பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.