அசல் கிராமத்து சுவையில் சூப்பரான சேப்பங்கிழங்கு மோர் குழம்பு செய்வது எப்படி? இப்படி ஒரு மோர் குழம்பை வாழ்நாளில் யாருமே ருசிச்சு இருக்க மாட்டீங்க.

kuzhambu1
- Advertisement -

நம்முடைய பாட்டிகள் வைப்பது போலவே பாரம்பரிய முறையில் சூப்பரான சேப்பங்கிழங்கு மோர் குழம்பு முறையாக வைப்பது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த மோர்க் குழம்பில் சேப்பங்கிழங்கு அல்லாது பூசணிக்காய், வெண்டைக்காய், பருப்பு உருண்டை, வடை, சௌசௌ இதில் ஏதாவது ஒன்றை போட்டு கூட வைக்கலாம். அது அவரவர் சௌகரியம். சரி நேரத்தைக் கடத்தாமல் ரெசிபியை பார்க்கலாம்.

முதலில் 1/4 கிலோ அளவு சேப்பங்கிழங்கை மண் போக கழுவி, தண்ணீரில் போட்டு உப்பு போட்டு வேக வைத்து, தோலுரித்து 1/2 இன்ச் தடிமனில் வட்ட வட்டமாக வெட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன்பின்பு 1 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் பச்சரிசி, இந்த இரண்டு பொருட்களையும், 2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு விழுது போல அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இது மோர் குழம்பு திக் ஆவதற்காக சேர்க்கக்கூடிய கலவை.

அடுத்தபடியாக ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் – 2 கைப்பிடி, தோல் சீவிய இஞ்சித்துண்டு – 1 இன்ச், பச்சைமிளகாய் – 4, இந்த பொருட்களை போட்டு முதலில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம். இந்த கலவையோடு இறுதியாக மிளகு – 1 ஸ்பூன், சீரகம் – 1 ஒரு ஸ்பூன், சேர்த்து மீண்டும் ஒருமுறை மிக்ஸியை ஓட விடுங்கள். மிளகு ஜீரகம் கொரகொரப்பாக தான் அரைபட வேண்டும். மைய அடைந்துவிட்டால் மோர்க்குழம்பில் சரியான ருசி கிடைக்காது.

- Advertisement -

இப்போது ஒரு பாத்திரத்தில் 1/2 லிட்டர் அளவு மோரை தயாராக எடுத்துக் கொள்ளுங்கள். இந்த மோருடன் நாம் அரைத்து வைத்திருக்கும் கடலைப்பருப்பு அரிசி விழுதையும் ஊற்றி விடுங்கள். தேங்காய் மசாலா விழுதையும் மோருடன் ஊற்றி விடுங்கள். இதோடு மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, போட்டு இந்த மோரை நன்றாக கலந்து, கூட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து மோர் குழம்பை தாளித்து விடலாம்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றி கடுகு – 1 ஸ்பூன், இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய் – 4, வெந்தயம் – 1/4 கால் ஸ்பூன், பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன், கறிவேப்பிலை – 1 கொத்து, இந்த பொருட்களை தாளித்து விட்டு கரைத்து வைத்திருக்கும் மசாலா மோர் கரைசலை கடாயில் ஊற்றி, வட்ட வட்டமாக வெட்டி வைத்திருக்கும் சேப்பங்கிழங்கு களையும் போட்டு, மிதமான தீயில் இந்த மோர் குழம்பை லேசாக கொதிக்க விட்டு, மேலே கொத்தமல்லித் தழையை தூவி அடுப்பை அணைத்துவிட்டு நன்றாக ஆற விட வேண்டும். உடனடியாக தட்டு போட்டு மூடக்கூடாது. மோர் குழம்பை தளதளவென கொதிக்க வைத்து விடக்கூடாது.

பின்பு சுடச்சுட சாதத்தில் ஆறின இந்த மோர் குழம்பை ஊற்றி ஒரு அப்பளத்தை தொட்டு சாப்பிட்டு பாருங்கள். அருமையான ருசியில் இருக்கும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடித்திருந்தால் மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -