செப்டம்பர் மாத ராசி பலன் – 2020

september-rasi-palan

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வாய்ப்புகள் வந்து குவிய போகின்ற மாதமாகத் தான் அமையப்போகின்றது. வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதும், நிராகரிப்பதும் உங்கள் கையில் தான் உள்ளது. வரக்கூடிய வாய்ப்புகளை நொண்டி சாக்கு சொல்லி தட்டிக் கழிக்க வேண்டாம். உங்களுடைய நேரம் நன்றாகவே உள்ளது. வாய்ப்புகளை ஏற்றுக்கொண்டு, கடுமையாக உழைத்து, வெற்றி பெறும் முயற்சியை நோக்கி சென்று கொண்டே இருக்க வேண்டும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நிச்சயம் புதிய வேலை இந்த மாத இறுதிக்குள் கிடைத்துவிடும். அலுவலகப் பணியில் நல்ல முன்னேற்றம் உண்டு. சொந்தத் தொழிலில் எதிர்பார்த்ததை விட லாபம், அதிகரிக்கும். உங்களால் முடிந்தவரை வறுமையில் உள்ளவர்களுக்கு உதவி செய்து வாருங்கள். முன்னேற்றத்தில் இருக்கக்கூடிய சின்னச்சின்ன தடைகளும் விலகும்.

ரிஷபம்
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இதுநாள் வரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் இந்த மாதம் விலக போகின்றது. புதிய முயற்சியில் வெற்றி காணலாம். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. அலுவலகப் பணியில் இதுநாள்வரை பிரச்சனை செய்து கொண்டிருந்த, எதிரிகள் கூட, உங்களின் நண்பராக மாறி விடுவார்கள். குடும்பத்தில் மட்டும் அவ்வப்போது சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. சண்டை என்று வந்தால் விட்டுக்கொடுத்து சென்று விடுங்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை மாஸ்க் அணியாமல் வெளியே செல்ல வேண்டாம். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

மிதுனம்
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு அஷ்டமச் சனியால் இருந்துவந்த மனக் குழப்பத்திற்கு, இந்த மாதம் விடிவுகாலம் பிறக்கும். முடிந்தவரை உங்களது வேலையை காப்பாற்றிக் கொள்ளத் தான் பார்க்க வேண்டும். இந்த வேலையை விட்டால், வேறு வேலை கிடைத்து விடும் என்ற அலட்சியம் மனப்போக்கோடு, நடந்து கொள்ளக்கூடாது. மேலதிகாரிகளிடம் பணிவாக நடந்து கொள்வது, உங்களுடைய வருமானத்திற்கு நல்லது. சொத்துக்கள் வாங்குவதாக இருந்தால், இந்த மாதம் தாராளமாக வாங்கலாம். பிரச்சனைகள் அவ்வப்போது வந்து போவதாக இருந்தாலும், உங்களின் மன தைரியம் உங்களுக்கு கைகொடுக்கும். நீண்ட தூர பயணத்தை மட்டும் தவிர்த்துக் கொண்டால் நல்லது. தினந்தோறும் ஓம் நமசிவாய மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருங்கள். பிரதோஷ வழிபாட்டை தவறவிடாதீர்கள்.

கடகம்
Kadagam Rasi
நினைத்ததை, நினைத்த மாத்திரத்திலேயே நடத்தி முடிக்க கூடிய யோகம் உங்களுக்கு இந்த மாதம் உள்ளது. தடைப்பட்டிருந்த திருமண முயற்சிகளை இந்த மாதம் தொடங்கலாம். பேச்சாற்றல், செயலாற்றல், உற்சாகம், தன்னம்பிக்கை, மனோதைரியம் எல்லாமே அதிகரிக்கும். வேளாண் துறையில் உள்ளவர்களுக்கு பெரிய முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. விலை உயர்ந்த பொருட்கள், சொத்துக்கள் இவைகளை வாங்கும் யோகமும் இருக்கின்றது. உங்களின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். இதுநாள் வரை இருந்து வந்த மனக்குழப்பம் நீங்கி சந்தோஷமான மகிழ்ச்சியான வாழ்க்கையை இந்த மாதம் வாழலாம். வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி வழிபாட்டை தவறவிடாதீர்கள்.

சிம்மம்
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு வாய்ப்புகள் தானாகவே உங்களைத் தேடி வரப்போகின்றது. பல வகையான தடைகள் வருவது போல இருந்தாலும், கஷ்டப்பட்டு, சிரமப்பட்டு, உழைத்து, அந்த தடைகளை தாண்டினால் தான் உங்களுக்கு வெற்றி காத்துக் கொண்டிருக்கின்றது என்பதை மறந்து விடாதீர்கள். விடாமுயற்சியோடு செயல்படுங்கள். உங்களுக்கே நிச்சயம் வெற்றி உண்டு. மன உறுதியை மட்டும் இழக்காமல், இந்த மாதம் முழுவதும் உழைத்தால், மாத இறுதியில் உங்களுக்கான பலன் உங்கள் கையில். தினந்தோறும் சூரிய நமஸ்காரம் செய்து விட்டு உங்களது பணியைத் தொடங்கலாம்.

கன்னி
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்கள் இந்த மாதம் பொறுமையோடு செயல்பட வேண்டியது மிகவும் அவசியம். உடல் ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். நீண்ட தூர பயணம் செய்யக்கூடாது. வாகனங்களில் செல்லும் போது ஹெல்மெட் அணிந்து கொண்டு செல்ல வேண்டும். சொந்தத் தொழில் சுமாராகத்தான் செல்லும். எதிர்பார்த்ததை விட, குறைவான லாபமே கிடைக்கும். அலுவலகப் பணியில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள். குடும்ப உறுப்பினர்களிடையே, வாக்குவாதம் வேண்டாம். விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். இந்த மாதம் பொறுமையோடு நடந்து கொண்டால், நல்ல பலன் பெறலாம். தினம் தோறும் முருகன் வழிபாடு முன்னேற்றத்தை தரும்.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வருமானம் அதிகரிக்க போகின்றது. முடிந்தவரை பணத்தை சேமிக்க கற்று கொள்ளுங்கள். அனாவசிய செலவை குறைத்துக் கொள்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும், உங்களைத் தேடி பதவி உயர்வும், சம்பள உயர்வும், கட்டாயம் வரும். சொந்தத் தொழில் சுமாராகத்தான் செல்லும். திடீர் அதிர்ஷ்டம் உங்கள் கதவை தட்ட போகின்றது. குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். தினந்தோறும் பசுமாட்டுக்கு அகத்திக்கீரை வாழைப்பழம் கொடுப்பது நன்மை தரும்.

விருச்சிகம்
Virichigam Rasi
பலவகையான போராட்டங்களை சந்தித்த பின்பு தான், உங்களுக்கு இந்த மாதம் வெற்றி கிடைக்கும். சோர்ந்து போய் உட்கார்ந்து விட வேண்டாம். சுறுசுறுப்பாக செயல்படுங்கள். தன்னம்பிக்கையோடு செயலாற்றுங்கள். பொருளாதாரத்திற்கு எந்த பிரச்சனையும் இருக்காது. யாரிடமும் வம்பு சண்டைக்கு செல்ல வேண்டாம். சண்டை உங்களை தேடி வந்தாலும், வாயை மூடிக்கொண்டு இருப்பது தான் உங்களுக்கு நல்லது. வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். தேவையில்லாமல் அடுத்தவர்கள் பிரச்சனையில் தலையிட வேண்டாம். நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் தப்பித்துக் கொள்ளலாம். மற்றபடி சொந்தத் தொழில், அலுவலகப் பணி, பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் நீங்கள் எதிர்பார்த்தபடி நடக்கும். தினந்தோறும் முருகன் வழிபாடு மன அமைதியை தேடித்தரும்.

தனுசு
Dhanusu Rasi
உங்களுக்கு இருக்கக்கூடிய புத்திக்கூர்மையை நீங்களே புரிந்து கொள்ளப் போகிறீர்கள். உங்களது திறமை அந்த அளவிற்கு வெளிப்படப் போகிறது என்று கூட சொல்லலாம். சுறுசுறுப்பாக உங்களது வேலையை முடித்து, எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்கி விடுவீர்கள். உங்களை சுற்றி உள்ளவர்கள், உங்களை பாராட்டிக் கொண்டே தான் இருக்கப் போகிறார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த சொத்து பிரச்சனை தீரும். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். அலுவலகத்தில் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைக்க போகிறார்கள். நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்ளுங்கள். சொந்த தொழிலில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்தவேண்டும். பங்கு தாரர்களையோ அல்லது வேறு யாரையும் நம்பி கடனாக காசை கொடுக்கவும் வேண்டாம். வாங்கவும் வேண்டாம். பண விஷயத்தில் மட்டும் கொஞ்சம் உஷாராக நடந்து கொள்ளுங்கள். வாரம்தோறும் வியாழக்கிழமை அன்று குபேர பகவானை மனதில் நினைத்துக் கொண்டு, வீட்டிலேயே தீபம் ஏற்றுங்கள். பிரச்சினையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு அவ்வப்போது, சின்ன சின்ன பிரச்சனை ஏற்படும். அந்த பிரச்சனையால் தேவையற்ற மன சஞ்சலம் உண்டாகும். கட்டாயம் உங்களது வேலையை சுறுசுறுப்பாக செய்ய முடியாது. முடிந்த வரை எந்த ஒரு புதிய விஷயத்தையும், இந்த மாதம் தொடங்காதீர்கள். இருப்பதை வைத்துக் கொண்டு திருப்தியாக, உங்களுக்கு முடிந்த வேலையை செய்து நாட்களைக் கடத்துவது தான் நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஏதாவது முக்கியமான விஷயங்களுக்கு முடிவு எடுப்பதாக இருந்தால், ஒன்றுக்கு பலமுறை யோசித்து முடிவு எடுக்க வேண்டும். பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு நடக்க வேண்டும். ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருங்கள். பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்கள் இந்த மாதம் அதிக கவனத்தோடு செயல்பட வேண்டியது அவசியம். ஏனென்றால், நீங்கள் அடுத்தவர்களை நம்பி ஏமாறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. உங்களை ஏமாற்றுவதற்கென்றே சிலர் வருவார்கள். உங்களை நம்ப வைக்கும் படி பேசி, உங்கள் காலை வாரிவிட்டு விடுவார்கள். முடிந்தவரை யாரை நம்பியும் எந்த விஷயத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். எல்லோரிடமிருந்தும் ஒரு அடி தள்ளி நில்லுங்கள். உங்களது பொருட்களையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். அலுவலகம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை யாரிடமும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

மீனம்
Meenam Rasi
மீன ராசிக்காரர்களுக்கு இது வெற்றி தரும் மாதமாக இருந்தாலும், சொந்த தொழிலிலும், அலுவலக பணியிலும், கொஞ்சம் கவனமாக செயல்பட வேண்டியது அவசியமான ஒன்று. எந்த ஒரு விவகாரத்திலும், அலட்சியப்போக்கு இருக்கக்கூடாது. பண விவகாரங்களில் ரொம்ப ரொம்ப உஷாரா நடந்து கொள்ள வேண்டும். யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் போது கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தினம் தோறும் விநாயகர் வழிபாடு முன்னேற்றத்தைத் தரும்.