ஒவ்வொரு வீட்டிலும் பண்டிகை என்றால் ஒவ்வொரு விதமான கொண்டாட்டங்கள் இருக்கும். அதிலும் தீபாவளி பண்டிகையை மக்கள் அனைவரும் அதிக அளவவில் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த பண்டிகையில் மற்றவர்களை மகிழ்ச்சி செய்வது என்பது ஒரு குறிப்பிட்ட விஷயமாக பார்க்கப்படுகிறது. அவ்வாறு வீட்டில் உள்ளவர்களை மகிழ்ச்சி படுத்துவதற்காக பலகாரங்கள், இனிப்புகள் செய்வது என்பதை இன்று வரையிலும் நமது பாரம்பரியமாக பின்பற்றி வருகிறோம். அவ்வாறு வேலை குறைவாகவும், மிகவும் எளிமையாக, குழந்தைகளுக்கு பிடிக்கும் சுவையில் இருக்கும் இந்த முந்திரி ஸ்வீட்டை சட்டென 15 நிமிடத்தில் செய்துவிடலாம். வாருங்கள் இதனை எப்படி சுலபமாக வீட்டிலேயே செய்யலாம் என்பதை ஒருசில குறிப்புகளை பின்பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்:
முந்திரி – 200 கிராம், சர்க்கரை – ஒரு கப், நெய் – 3 ஸ்பூன்.
செய்முறை:
முதலில் 200 கிராம் முந்திரியை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு ரவை சல்லடையை பயன்படுத்தி நன்றாக சலித்துக் கொள்ள வேண்டும். இதில் சில முந்திரி துகள்கள் இருந்தது என்றால் அவற்றை மீண்டும் மிக்ஸியில் சேர்த்து நன்றாகப் பொடித்துக் கொண்டு, அவற்றை மீண்டும் சலிக்க வேண்டும். மீதமிருக்கும் முந்திரி துண்டுகளை அப்படியே ஓரமாக வைத்து விட வேண்டும்.

அதன் பின் அடுப்பை பற்ற வைத்து அதன்மீது ஒரு அகலமான பேனை வைக்க வேண்டும். பின்னர் ஒரு கப் சர்க்கரையை அதில் சேர்த்து அதனுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். அடுப்பை சிம்மில் வைத்துக் கொண்டு சிறிது நேரம் கை விடாமல் கலந்து கொண்டே இருக்க வேண்டும். பின்னர் இரண்டு விரல்களை பயன்படுத்தி சர்க்கரை பாகை தொட்டுப் பார்த்தோம் என்றால் ஒரு கம்பிப் பதம் வந்திருக்க வேண்டும். அப்போது அடுப்பை அனைத்துவிட வேண்டும்.
பின்னர் பவுடர் பதத்திற்கு அரைத்து வைத்துள்ள முந்திரியை சர்க்கரைப் பாகில் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். அடுப்பை அனைத்துவிட்டு கலக்கும் பொழுது கட்டி படாமல் இருக்கும். இவை நன்றாக கரைந்தவுடன் மீண்டும் அடுப்பை பற்றவைத்து கலந்து கொண்டே இருக்க வேண்டும். ஓரங்களில் ஒட்டியிருக்கும் முந்திரியையும் நன்றாக கிளறி விட்டு கொண்டே இருக்க வேண்டும். பின்னர் சிறிது நேரம் கழித்து இடையிடையே ஒவ்வொரு ஸ்பூன் நெய் சேர்த்துக் கொண்டு நன்றாக கலந்துவிட வேண்டும்.

பிறகு இவை கெட்டியாகி சற்று நுரைத்து வரும் பொழுது அடுப்பை அனைத்து விட்டு, ஒரு பட்டர் பேப்பரில் இதனை சேர்த்துக்கொண்டு, பட்டர் பேப்பரை வைத்து நன்றாக பிசைய வேண்டும். அதன் பின் சற்று சூடு ஆறியதும் மற்றுமொரு பட்டர் பேப்பருக்கு மாற்றி கைகளை வைத்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

அப்பொழுதுதான் விரிசல் விழாமல் இருக்கும். பின்னர் லேசான சூட்டில் இருக்கும் பொழுதே பட்டர் பேப்பரை மேல் வைத்து பூரி உருட்டு கட்டையை வைத்து நன்றாக உருட்டி கொள்ள வேண்டும். பின்னர் நமக்குத் தேவையான வடிவத்தில் இவற்றை கத்தியை வைத்து வெட்டி எடுக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான முந்திரி ஸ்வீட் தயாராகிவிட்டது.