வெண் பொங்கலுக்கு மட்டுமில்ல சிறுபருப்பு சாம்பார் சாதத்துக்கு கூட சூப்பரா இருக்கும் இப்படி செஞ்சா! ஆரோக்கியமான சுவை மிகுந்த சிறுபருப்பு சாம்பார் எளிதாக எப்படி தயாரிப்பது?

siru-paruppu-sambar1
- Advertisement -

எல்லோருக்குமே சிறுபருப்பு சாம்பார் வைத்தால் அது பொங்கல் மற்றும் இட்லி, தோசைக்கு மட்டுமே என்கிற நினைப்பு இருக்கும். சிறுபருப்பு சாம்பார் பொங்கல், இட்லி, தோசை, சப்பாத்தி, ஆப்பம் போன்றவற்றுக்கு மட்டுமல்லாமல் சூடான சாதத்துடன் சாப்பிட ரொம்பவே ஆரோக்கியமான சுலபமான முறையில் எப்படி சிறுபருப்பு சாம்பார் செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் பார்க்க இருக்கிறோம்.

சிறுபருப்பு சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:
சிறு பருப்பு – 100 கிராம், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 2, பச்சை மிளகாய் – 2, சாம்பார் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், சமையல் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், உளுந்து – கால் டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு இணுக்கு, கொத்தமல்லி தழை – சிறிதளவு.

- Advertisement -

சிறுபருப்பு சாம்பார் செய்முறை விளக்கம்:
100 கிராம் சிறு பருப்பை நன்கு கழுவி முதலில் சுத்தம் செய்து அரை மணி நேரம் நல்ல தண்ணீர் ஊற்றி ஊற வைத்து விடுங்கள். அரை மணி நேரத்திற்கு பிறகு அடுப்பில் தேவையான அளவிற்கு தண்ணீர் விட்டு சிறு பருப்பு சேர்த்து குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள்.

கடுகு பொரிந்து வந்ததும் உளுத்தம்பருப்பு, சீரகம் ஆகியவற்றை தாளித்துக் கொள்ளுங்கள். இவை லேசாக வறுபட்டதும், ஒரு இணுக்கு கறிவேப்பிலை சேர்த்து இரண்டு பச்சை மிளகாயை இரண்டாக கீறி சேர்த்துக் கொள்ளுங்கள். பச்சை மிளகாய் மற்றும் சாம்பார் தூள் சேர்த்து செய்யப்படும் பொழுது சாதத்துடனும் சிறுபருப்பு சாம்பார் செமையாக இருக்கும். இவற்றை வதக்கியதும் பொடிப் பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு கண்ணாடி பதம் வரை வதக்குங்கள்.

- Advertisement -

பொன்னிறமாக வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி துண்டுகளை சேர்த்து மசிய வதக்க வேண்டும். இப்போது தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். தக்காளி, வெங்காயம் நன்கு மசிய வதங்கி வரும் பொழுது மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்னர் தேவையான அளவிற்கு சாம்பார் தூள் சேர்த்து கொள்ளுங்கள். சாம்பார் தூள் இல்லாதவர்கள் குழம்பு மிளகாய்த்தூள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மசாலா வாசம் போக நன்கு வதக்கியதும் நீங்கள் குழைய வேக வைத்துள்ள சிறுபருப்பை தண்ணீருடன் அப்படியே சேர்த்து தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். குழம்பு கொதித்து கெட்டியாக வரும் பொழுது நறுக்கிய மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். சுடச்சுட சாதத்துடன் இந்த சிறுபருப்பு சாம்பார் ஊற்றி சாப்பிட்டு பாருங்கள், அவ்வளவு அருமையாக இருக்கும். இதே சாம்பாரை நீங்கள் டிபன் வகைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். சாம்பார் தூள், மிளகாய்த்தூள் எதுவும் சேர்க்காமல் இதே போல செய்து இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட்டால் அது வேறு மாதிரியான சூப்பரான ருசியாக இருக்கும், ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -