இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் எல்லாவற்றுக்கும் பொருத்தமாக இருக்கும் ‘சிறுபருப்பு சாம்பார்’ இப்படி ஒருமுறை செய்து பார்க்கலாமே!

siru-paruppu-sambar1
- Advertisement -

இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் என்று எல்லா வகையான உணவுகளுக்கும் சிறந்த காம்பினேஷனாக இருக்கும் இந்த சிறுபருப்பு சாம்பார் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மைகளை செய்யக் கூடியது ஆகும். பருப்பு வகைகளில் சிறுபருப்பு அதிக சத்துக்களைக் கொண்டுள்ளது. இதன் ருசியும் அபரிமிதமாக இருக்கும். சிறுபருப்பு வைத்து பாயாசம் செய்வது வழக்கம். ஆனால் அடிக்கடி சிறு பருப்பு வைத்து இப்படியொரு சாம்பார் செய்து பாருங்கள், உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். சிறுபருப்பு சாம்பார் செய்வது எப்படி? என்பதை அறிய தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

siru-paruppu

சிறுபருப்பு சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:
சிறு பருப்பு – 150 கிராம், பூண்டு பல் – 4, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 2, பச்சை மிளகாய் – 3, வர மிளகாய் – 3, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், உளுந்து – கால் டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, மல்லித்தழை – சிறிதளவு, அரைத்த தேங்காய்பேஸ்ட் – அரை கப், உப்பு – தேவையான அளவிற்கு.

- Advertisement -

சிறுபருப்பு சாம்பார் செய்முறை விளக்கம்:
முதலில் சிறு பருப்பை நன்கு களைந்து தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்து கொள்ளுங்கள். பின்னர் தேவையான காய்கறிகளை வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். பின் ஊறிய பருப்பில் பூண்டு பற்களை தோலுரித்து சேர்த்து அடுப்பில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதற்குள் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சூடு ஏற்றிக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.

எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுந்து, சீரகம் ஆகியவற்றை சேர்த்து லேசாக வதக்கவும். பின்னர் கறிவேப்பிலை, வர மிளகாய், பச்சை மிளகாய் ஆகியவற்றை கிள்ளிப் போட்டு லேசாக வதக்குங்கள். பின்னர் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதக்கி வரும் சமயத்தில் லேசாக உப்பு போட்டு பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.

- Advertisement -

தக்காளி, வெங்காயம் நன்கு மைய வதங்கியதும் பெருங்காயத் தூள், மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். வெறும் மிளகாய் தூள் அல்லது குழம்பு மிளகாய் தூள் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அரை டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். மசாலா வாசம் போக சாம்பார் நன்கு கொதித்ததும் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். சாம்பார் மீண்டும் கொதித்ததும் அதில் வேக வைத்துள்ள சிறு பருப்பை மசித்து சேர்த்துக் கொள்ளவும். இதில் தேங்காய் சேர்க்க விருப்பம் இல்லை என்றால் அதனை தவிர்த்து விடுங்கள்.

siru-paruppu-sambar

இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற டிஃபன் வகைகளுக்கு கெட்டியாகவும், சாதத்துடன் சாப்பிட கொஞ்சம் குழம்பு போல தண்ணீராகவும் தேவைக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கொதிக்க விடுங்கள். சாம்பார் கொதித்து தேவையான பதத்துக்கு வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு கொஞ்சம் மல்லி தழையை நறுக்கி சேர்த்து இறக்க வேண்டியது தான். வித்தியாசமான சுவையுடன் கூடிய இந்த ஆரோக்கியம் மிகுந்த சிறுபருப்பு சாம்பார் சுட சுட சாப்பிடும் பொழுது அவ்வளவு ருசியாக இருக்கும். நீங்களும் ஒருமுறை இதே போல முயற்சி செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -