மகா சிவராத்திரி என்பது ஆன்மீக ரீதியாக எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு அறிவியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே திகழ்கிறது. அன்றைய நாளில் பூமி தன்னைத்தானே சுற்றும் பொழுது செங்கோட்டில் தான் சுற்றும் என்றும் அந்த நேரத்தில் நாம் செங்குத்தாக நிமிர்த்து உட்காருவதன் மூலம் பிரபஞ்சத்தின் ஆற்றல் நமக்கு அதிகமாக கிடைக்கும் என்றும் அறிவியல் ரீதியாக கூறப்படுகிறது. அதனால் தான் அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் மாசி மாதத்தில் வரக்கூடிய மகா சிவராத்திரி அன்று கண் விழித்து சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். அவ்வளவு சிறப்பு வாய்ந்த அறிவியல் ரீதியான அதே சமயம் ஆன்மீக ரீதியான மகா சிவராத்திரி அன்று நடக்கக்கூடிய ஒவ்வொரு கால பூஜைகளும் என்னென்ன பொருட்களை வாங்கித் தர வேண்டும் அப்படி தருவதன் மூலம் என்ன பலன் கிடைக்கும் என்றுதான் இந்த ஆன்மிகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நான்கு கால பூஜை பலன்கள்
ஒவ்வொரு சிவாலயத்திலும் மகா சிவராத்திரி நாளன்று நான்கு கால பூஜை நடைபெறும். ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு விதமான நேரத்தை பின்பற்றுவார்கள் ஆனால் கண்டிப்பான முறையில் நான்கு கால பூஜை என்பதை செய்வார்கள். அப்படி செய்யக்கூடிய ஒவ்வொரு கால பூஜைக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் இருக்கிறது என்றும் அந்த நேரத்தில் சிவபெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்றும் தெரிந்து கொள்வோம்
முதல் கால பூஜை நேரத்தில் பிரம்மா சிவபெருமானை வழிபாடு செய்தார் என்று கூறப்படுகிறது. அந்த பூஜைக்கு நாம் நல்லெண்ணெய், சந்தனாதி தைலம், அபிஷேகத்திற்காக பால், தயிர், நெய் போன்றவற்றை வாங்கித் தர வேண்டும். மேலும் வில்வ இலைகளையும் வாங்கி தர வேண்டும். இதோடு முதல் கால பூஜைக்கு வெண்பொங்கலை நெய்வேத்தியமாக தருவதன் மூலமும் வெண்பொங்கல் செய்வதற்கு தேவையான பொருட்களை வாங்கி தருவதன் மூலமும் நம் வாழ்வில் இருக்கக்கூடிய தோஷங்களும் தடைகளும் நீங்கும் என்று கூறப்படுகிறது.
இரண்டாம் கால பூஜை என்பது விஷ்ணு பகவான் சிவபெருமானை வழிபட்ட காலம் ஆகும். இந்த நேரத்தில் நடக்கக்கூடிய அபிஷேகத்திற்கு இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பால் போன்ற பொருட்களை வாங்கித் தர வேண்டும். மேலும் வாசனை மிகுந்த மலர்களையும் வாங்கித் தர வேண்டும். நெய்வேத்தியமாக சர்க்கரை பொங்கல் அல்லது பால் பாயாசம் போன்ற இனிப்பு பொருட்களை தயார் செய்து தரலாம் அல்லது தயார் செய்வதற்கு தேவையான பொருட்களை வாங்கி தரலாம். இப்படி செய்வதன் மூலம் லட்சுமி கடாட்சம் கிடைப்பதோடு சகல சௌபாக்கியமும் பெறுவோம்.
மூன்றாம் கால பூஜை என்பது அம்பிகை சிவபெருமானை வழிபட்ட காலம் ஆகும். இந்த நேரத்தில் நடக்கக்கூடிய அபிஷேகத்திற்கு தேன் வாங்கித் தர வேண்டும். மேலும் தாழம்பூ, வில்வ இலை போன்றவற்றையும் வாங்கித் தருவது சிறந்த பலனை தரும். இந்த பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு சிறந்த கல்வி அறிவும், ஆரோக்கியமும், செல்வாக்கும் உயரும் என்று கூறப்படுகிறது.
நான்காம் கால பூஜை சமயத்தில் தேவர்களும் ரிஷிகளும் முனிவர்களும் சிவபெருமானை வழிபாடு செய்வார்களாம். அந்த நேரத்தில் நடக்கக்கூடிய அபிஷேகத்திற்கு பால், பழம் கரும்புச்சாறு போன்றவற்றை வாங்கித் தர வேண்டும். மேலும் நெய்வேத்தியமாக சுத்த அன்னத்தை அதாவது வடித்த சாதத்தை படைப்பார்களாம். அந்த சாதத்திற்கு தேவையான அரிசி மற்றும் நெய்யை வாங்கித் தருவது நல்ல பலனை தரும் இப்படி நாம் அந்த நேரத்தில் செய்யக்கூடிய பூஜையில் கலந்து கொள்வதன் மூலம் சகல செல்வங்களும் பெறுவதோடு அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும் மேலும் நாம் வைக்கக்கூடிய வேண்டுதலும் நிறைவேறும்.
இதையும் படிக்கலாமே:மகா சிவராத்திரியில் கோவிலுக்கு வாங்கி தர வேண்டிய பொருட்கள்
சிவராத்திரி முழுவதும் கண்விழிக்க இயலாது என்று நினைப்பவர்கள் கூட இந்த பூஜை நேரத்தில் அந்த பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கித் தந்து அதனால் ஏற்படக்கூடிய பலனை முழுமையாக தரலாம் என்று தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்