இன்று (15/6/2022) ரிஷபத்தில் இருந்து மிதுனத்திற்கு இடம்பெயரும் சூரிய பகவான்! இதனால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ராசிகள் யாரெல்லாம்?

surya-peyarchi
- Advertisement -

கிரகங்களின் தலைவனாக இருக்கக்கூடிய சூரியன் இன்று ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு இடம் பெயர்வதால் 12 ராசிக்காரர்களில் எந்தெந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்? சூரிய பெயர்ச்சியில் சூரியன் சுப மற்றும் அசுப பலன்கள் இரண்டையும் மாறி மாறி வழங்குபவர் ஆவார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்கள் சிரமங்களை அனுபவிக்க வேண்டி இருக்கும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

மிதுனம்:
மிதுனத்தில் பிரவேசிக்க இருக்கும் சூரிய பகவான் உங்களுக்கு சில ஏமாற்றங்களை கொடுப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. நீங்கள் ஒன்று நினைக்க, அது ஒன்று நடக்கும். தேவையற்ற எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொண்டால் மனதில் விரக்தி உண்டாகாமல் இருக்கும். மிதுன ராசியில் உள்ளவர்கள் முன்கோபத்தை குறைத்துக் கொள்ளாவிட்டால் தேவையற்ற இழப்புகளை சந்திக்க நேரும் எனவே எச்சரிக்கை தேவை. வெளியிடங்களில் வேலைக்கு செல்பவர்கள் உங்களுக்கு மேல் பணிபுரிபவர்களிடம் தேவையற்ற பிரச்சினைகளை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. கேட்டவருக்கு உடனே சென்று உதவிடும் மனப்பான்மை உங்களிடம் இருந்தாலும் கால, நேரம் சரியாக இல்லை என்பதால் தேவையற்ற நபர்களுக்கு பணம் கடனாக கொடுப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் பண விஷயத்தில் கூடுதல் அக்கறை தேவை.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சூரியன் பெயர்ச்சி எச்சரிக்கையாக இருக்க வேண்டி அறிவுறுத்துகிறது. சூரியன் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே உங்களுக்கு தேவையற்ற குடைச்சல் கொடுத்துக் கொண்டிருப்பார். எந்த ஒரு விஷயத்திலும் தன்னம்பிக்கையோடு செயல்பட வேண்டும். நம்மால் முடியுமா? என்று யோசித்தால், தோல்வியை தழுவ நேரிடும். முன்கோபம், வார்த்தையில் கடுமை காட்டினால் தேவையற்ற பிரச்சனைகள் உங்களைத் தேடி வரும். குடும்ப பிரச்சனைகளை எப்பொழுதும் மனதில் போட்டு குழப்பிக் கொண்டிருக்காமல் நிதானமாக தீர்வு காண்பது நல்லது. தொலைதூரப் பயணங்களின் பொழுது பணம், பொருள் போன்றவற்றை எச்சரிக்கையுடன் கையாளுவது நல்லது.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி உங்களுக்கு சாதகமற்ற அமைப்பு என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பறிபோகும் அபாயம் ஏற்படக்கூடும் என்பதால் தேவையற்ற பிரச்சினைகளில் இருந்து விலகி நிற்பது நல்லது. மற்றவர்களுக்கு உதவ போய் நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம். பண பரிமாற்ற விஷயத்தில் விழிப்புணர்வுடன் செயலாற்றுங்கள். சிலருக்கு ஏமாற்றம், விரக்தி போன்றவை ஏற்படும் என்பதால் எவரையும் எளிதாக நம்பிவிட வேண்டாம். சகோதர, சகோதரிகளுக்கு இடையே மனக்கசப்புகள் ஏற்படும் என்பதால் விட்டுக் கொடுத்து பேசுவது நல்லது. நீங்கள் வேலை செய்யும் இடங்களில் உங்களுக்கு அதிருப்தி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த சூரியன் பெயர்ச்சி சாதகமற்ற அமைப்பை கொண்டுள்ளதால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தலை தூக்க ஆரம்பிக்கும். அதிக பணத்தை கையாளும் பொழுது எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது நல்லது. பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் கூடுதல் அக்கறை செலுத்துங்கள். கணவன் மனைவியிடையே பேச்சில் இனிமை இல்லை என்றால் உறவில் விரிசல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு, எனவே கவனம் தேவை. உங்கள் ராசிக்கு வம்பு, வழக்குகள் தானாகவே வரும் என்பதால் கூடுமானவரை வாக்குவாதங்கள், முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. வருமானம் வரக்கூடிய விஷயங்களில் எதிர்பாரா மாற்றம் உருவாகுவதற்கு வாய்ப்புகள் உண்டு, இது தேவை இல்லாத மன உளைச்சலை ஏற்படுத்தும் எனவே திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

- Advertisement -