குழந்தைகளுக்கு பிடித்தமான மிகவும் ஆரோக்கியமான உணவு வகைகளை சமைத்து கொடுப்பதென்பது தாய்மார்களுக்கு மிகவும் சவாலான விஷயமாக இருக்கிறது. அப்படி யோசித்து செய்து கொடுத்தாலும் ஒரு சில உணவுகளை குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவது கிடையாது. ஆனால் கோதுமை மாவுடன் இந்த மசாலா சேர்த்து செய்த இந்த உணவினை ஒரு முறை செய்து கொடுத்துப் பாருங்கள். வீட்டில் உள்ள அனைவரும் தட்டாமல் சாப்பிடுவார்கள். மீண்டும் இதனை எப்பொழுது செய்வீர்கள் என்று உங்களை தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பார்கள். இதனை எவ்வாறு சமைக்க வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – ஒன்றரை கப், சேனைக்கிழங்கு – 150 கிராம், பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன், ஓமம் – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், உப்பு – ஒன்றரை ஸ்பூன், எண்ணெய் – 50 கிராம், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், கரம் மசாலா – அரை ஸ்பூன், மிளகாய்தூள் – ஒரு ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன்.
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் கோதுமை மாவுடன் அரை ஸ்பூன் ஓமம், அரை ஸ்பூன் சீரகம், 1 ஸ்பூன் எண்ணெய், ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். சிறிது நேரம் நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். பிறகு இதனை ஒரு 15 நிமிடம் அப்படியே ஊற வைக்க வேண்டும்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு, சீரகம் சேர்த்து தாளித்து வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கொள்ளவேண்டும். இவை நன்றாக வதங்கியதும் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் 150 கிராம் சேனைகிழங்கை துருவிக் கொண்டு இதனுடன் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் இவற்றுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இந்த மசாலாவை ஒரு கின்னத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும். பிறகு ஊற வைத்துள்ள கோதுமை மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து உள்ளங்கையில் வைத்து அழுத்திக்கொண்டு, நடுவில் ஒரு ஸ்பூன் மசாலாவை வைத்து மறுபடியும் உருண்டையாகப் பிடித்து உள்ளங்கையில் வைத்து அழுத்தி கொஞ்சம் தட்டையாக செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அனைத்து உருண்டைகளிலும் மசாலா வைத்து செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பேனை அடுப்பின் மீது வைத்து, ஐந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, செய்து வைத்துள்ள ஒவ்வொரு கோதுமை மாவு ஸ்டஃப்பிங்கையும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவேண்டும். இரண்டு புறங்களும் நன்றாக பொரிந்தவுடன் அதனை தட்டுக்கு மாற்றி வைக்க வேண்டும். இவற்றை சுட சுட அப்படியே சாப்பிடலாம். அல்லது இதனுடன் தொட்டுக்கொள்ள ஸ்கெட்சப் அல்லது சட்னி சேர்த்தும் சாப்பிடலாம்.