ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறை தேய்பிறை என்று இரண்டு முறை பிரதோஷம் வரும். இந்த பிரதோஷ நாளில் விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அதிலும் பிரதோஷம் வரக்கூடிய கிழமையை பொறுத்து நம்முடைய வேண்டுதலை நாம் முன் வைக்கும் பொழுது அந்த வேண்டுதலை விரைவிலேயே சிவபெருமான் நிறைவேற்றுவார் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த முறை வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து பிரதோஷம் வருகிறது. இந்த நாளில் சுக்கிர யோகத்தை பெறுவதற்கு செய்ய வேண்டிய ஒரு வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
சுக்கிர பிரதோஷ வழிபாடு
செல்வ வளத்தை தரக்கூடிய மகாலெட்சுமியாக இருந்தாலும் குபேர பகவானாக இருந்தாலும் இவர்கள் இருவருமே தங்களுடைய செல்வத்தை பெறுவதற்கு சிவபெருமான்தான் அருள் புரிந்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. அப்படிப்பட்ட சிவபெருமானை நாம் வழிபாடு செய்யும்பொழுது நமக்கும் மகாலட்சுமியை போலவும் குபேரரை போலவும் செல்வங்களை பெறுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும் என்றே கூறலாம். மிகவும் மனத்தூய்மையுடன் சிவபெருமானை முழுமனதோடு நம்பி நாம் வழிபாடு செய்ய வேண்டும் என்பது மட்டும் இருந்தால் போதும். வேறு எதுவுமே தேவையில்லை. முழுக்க முழுக்க சிவபெருமானை நினைத்து நாம் வழிபாடு செய்து விட்டாலே நம்முடைய வழிபாட்டிற்குரிய பலன் நமக்கு கிடைத்து விடும்.
அந்த வகையில் வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய தேய்பிறை பிரதோஷ நாள் அன்று நாம் சிவபெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்யும்பொழுது சுக்கிர பகவானால் ஏற்பட்ட தோஷங்கள் அனைத்தும் நீங்கி சுக்கிர யோகம் கிடைக்கும். சுக்கிர யோகம் கிடைத்துவிட்டாலே செல்வ செழிப்புடன் நம்மால் வாழ முடியும். இதற்கு பிரதோஷ நாளன்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய சுவாமி படங்களுக்கு புது மலர்களை சாற்றி தீபம் ஏற்றி வைத்து முதலில் விநாயகப் பெருமானிடம் இன்றைய நாளில் நான் இருக்கக்கூடிய விரதம் முழுமை அடைய வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.
பிறகு சிவபெருமானுக்குரிய “ஓம் சிவ சிவ ஓம்” என்னும் மந்திரத்தை 108 முறை கூறி விரதம் இருக்க ஆரம்பிக்க வேண்டும். அன்றைய நாள் முழுவதும் திரவ உணவுகளை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். மாலை நான்கு முப்பது மணியிலிருந்து ஆறு மணிக்குள் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று அங்கு நடக்கக்கூடிய வழிபாட்டில் கலந்து கொள்ள வேண்டும். அவ்வாறு நாம் செல்லும் பொழுது அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி தருவதோடு சிவபெருமானுக்கு செவ்வரளி மலர்களையும் நந்தியம்பெருமானுக்கு அருகம்புல்லையும் வாங்கிக்கொண்டு செல்ல வேண்டும்.
முதலில் நந்தியம் பெருமானுக்கு அருகம்புல்லை வைத்து அவருக்கு முன்பாக இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து முழு மனதோடு நந்தியம் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். அதோடு சேர்த்து நம்முடைய வேண்டுதலையும் நந்தியம்பெருமானிடம் முன்வைக்க வேண்டும். பிறகு நேராக சிவபெருமானை தரிசனம் செய்து வழிபாடு மட்டும் செய்தால் போதும். சிவபெருமானிடம் எந்த வேண்டுதலையும் முன்வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு வழிபாடு செய்து முடித்த விட்டு வீடு திரும்பும் பொழுது நந்தியம் பெருமானுக்கு வைத்த அருகம்புல்லில் இருந்து சிறிதளவு மட்டும் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வரவேண்டும்.
வீட்டிற்கு வந்து வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து “ஓம் சிவ சிவ ஓம்” என்னும் மந்திரத்தை திரும்பவும் 108 முறை கூறி வழிப்பாட்டை செய்து முடித்துவிட்டு அந்த அருகம்புல்லை பணம் வைக்கக்கூடிய இடத்தில் வைத்துவிட்டு எளிமையான உணவை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே: பாவங்களை தீர்க்கும் கைலாச பிரதோஷம்
எளிமையான இந்த சுக்கிர பிரதோஷ வழிபாட்டை முழுமனதோடு சிவபெருமானையும் நந்தியம் பெருமானையும் நினைத்து செய்பவர்களுக்கு சுக்கிர யோகம் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.