மணக்க மணக்க பச்சை சுண்டைக்காய் துவையல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இப்படி அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க!

sundakkai-thuvaiyal_tamil
- Advertisement -

உடம்பில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க கூடிய சில உணவு வகைகளில் சுண்டைக்காயும் ஒன்று. இந்த பச்சை சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலம் ஆரோக்கியம் பலம் பெறும். சுண்டைக்காய் சீசன்களில் அதிகம் வாங்கி இந்த துவையலை செஞ்சி சாப்பிட்டு பார்க்கலாம். இட்லி, தோசை, சப்பாத்தி மட்டுமல்லாமல் சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட அட்டகாசமாக இருக்கக்கூடிய இந்த சுண்டைக்காய் துவையல் எப்படி எளிதாக செய்வது? அப்படின்னு தெரிஞ்சுக்குவோம் வாங்க.

தேவையான பொருட்கள்

பச்சை சுண்டைக்காய் – ஒரு கப், கருவேப்பிலை – இரண்டு கொத்து, மல்லித்தழை – ஒரு கைப்பிடி, வரமிளகாய் – ஆறு, புளி – நெல்லிக்காய் அளவு, இஞ்சி – இரண்டு இன்ச், சமையல் எண்ணெய் – இரண்டு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. தாளிக்க: நல்லெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுந்து – அரை ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை

முதலில் ஒரு பெரிய நெல்லிக்காய் அளவிற்கு புளியை விதைகள் இல்லாமல் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் ரெண்டு இன்ச் இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் சேர்த்து நன்கு சுருள வதக்க வேண்டும். அப்போது தான் இஞ்சியின் காரம் அதிகமாக இருக்காது.

இஞ்சி சுருள வதங்கியதும் வரமிளகாய்களை காம்பு நீக்கி இரண்டாக உடைத்து சேர்த்து லேசாக வறுத்து இவற்றை தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதே எண்ணெயில் பச்சை சுண்டைகாய்களை சேர்த்து நன்கு வதக்குங்கள். வதக்கும் பொழுது நிறம் மாற ஆரம்பிக்கும். பச்சை நிறமாக இருந்து, வெள்ளையாக மாற ஆரம்பிக்கும். அதுவரை நன்கு வதக்குங்கள். அப்போது தான் சுண்டைக்காயின் கசப்பு தெரியாது.

- Advertisement -

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வதக்கிய சுண்டைக்காய் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் வதக்கி வைத்துள்ள இஞ்சி மற்றும் வரமிளகாயையும் சேருங்கள். நறுக்கிய கொத்தமல்லி தழை, உருவிய கருவேப்பிலை, தண்ணீரில் ஊறிய புளி, தேவையான அளவிற்கு உப்பு ஆகியவற்றை சேர்த்து நைசாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதற்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
மாம்பழத்தில் கேசரி செய்து சாப்பிட்டு இருக்கீங்களா? இல்லனா உடனே செய்ஞ்சு சாப்பிடுங்க டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும். மிஸ் பண்ணாம இந்த சீசன் முடியறதுக்குள்ள ட்ரை பண்ணுங்க.

வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். எண்ணெயிலேயே நன்கு பச்சை வாசம் போக வதங்கி எண்ணெய் தெளிந்ததும் அடுப்பை அனைத்து பரிமாற வேண்டியதுதான், ரொம்பவே சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த இந்த சுண்டைக்காய் துவையல் ரெசிபி இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க உங்களுக்கும் பிடிக்கும்.

- Advertisement -