குழந்தைகளுக்கு காரமான தின்பண்டங்களை விட இனிப்பான தின்பண்டங்களை சாப்பிடுவதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். அப்படி யோசிக்கும் பொழுது நாம் செய்யக்கூடிய ஒரு சிற்றுண்டி தான் பால் கொழுக்கட்டை. இந்த பால் கொழுக்கட்டையை நாம் வித்தியாசமாக, அதுவும் சத்துமிக்க ஒரு காயை வைத்து செய்தால் அது இன்னும் நல்லதல்லவா? இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் சுரைக்காயை வைத்து பால் கொழுக்கட்டை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
சுரைக்காய் அதிக நீர்ச்சத்து நிறைந்த காய் என்பதால் அதை நம் உணவில் நாம் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். சுரைக்காயை சாப்பிடுவதன் மூலம் உடல் எடை குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஆனால் இந்த சுரைக்காயை கூட்டு, பொரியல் என்று செய்தால் யாரும் அவ்வளவாக விரும்பி சாப்பிடுவதில்லை. அதற்காக தான் சுரைக்காயை வைத்து பால் கொழுக்கட்டை செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
செய்முறை
சிறிய அளவிலான சுரைக்காயை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் தோலை நீக்கிவிட்டு கேரட் துருவுவது போல் துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு பவுலை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் 200 கிராம் அளவிற்கு அரிசி மாவை சேர்க்க வேண்டும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 100 மிலி தண்ணீரை ஊற்றி சூடு பண்ண வேண்டும்.
நாம் எடுத்து வைத்திருக்கும் மாவில் ஒரு சிட்டிகை அளவு உப்பை சேர்த்து விட்டு, நாம் சூடு பண்ணி வைத்திருக்கும் தண்ணீரை சிறுக சிறுக அதில் ஊற்றி பிணைய வேண்டும். அரிசி மாவு சப்பாத்தி மாவு பதத்திற்கு வரும் அளவிற்கு பிணைய வேண்டும். பிறகு அவற்றை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். அதில் 200 மில்லி லிட்டர் தண்ணீரை ஊற்ற வேண்டும். ஊற்றிய தண்ணீர் சிறிது சூடானதும் நாம் துருவி வைத்திருக்கும் சுரைக்காயை அதில் சேர்க்க வேண்டும். சுரக்காய் மூன்று நிமிடம் நன்றாக வேக வேண்டும். பிறகு நாம் உருட்டி வைத்திருக்கும் பால் கொழுக்கட்டை அதில் சேர்க்க வேண்டும். இரண்டு ஸ்பூன் அளவிற்கு அரிசி மாவை நன்றாக தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்து அதையும் ஊற்ற வேண்டும். இப்பொழுது இதை எட்டு நிமிடம் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும்.
அவ்வாறு கொதிக்கும் பொழுது நாம் கரண்டியை வைத்து கிண்டி கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால் இது அடிபிடித்து விடும். எட்டு நிமிடம் கழித்து அதில் 200 கிராம் பொடித்த வெல்லத்தை அதில் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். வெல்லம் நன்றாக கரைந்த பிறகு இதை அடுப்பில் இருந்து இறக்கி விடலாம். இப்பொழுது இதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு ஏலக்காய் தூளை சேர்க்க வேண்டும். விருப்பப்பட்டால் துருவிய தேங்காயையும் இதில் சேர்த்து இருக்கலாம்.
சுவையிலும் சத்திலும் எந்த குறைவும் இல்லாமல் அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு அற்புதமான சுரைக்காய் பால் கொழுக்கட்டை தயாராகிவிட்டது இந்த இனிப்பை அனைவருக்கும் செய்து கொடுத்து பாராட்டை பெறுங்கள்.