ருசியான தேங்காய் துவையல் இப்படி கூட செய்யலாமே! அரை மூடி தேங்காய் இருந்தால் போதும் அரை நொடியில் துவையல் வைத்து விடலாம்.

coconut-thengai-thuvaiyal2
- Advertisement -

தேங்காய் துவையல் வித்தியாசமான முறைகளில் பலரும் செய்வது உண்டு. அதில் இந்த முறையில் நீங்கள் ஒரு முறை செய்து பார்த்தால் இதனுடைய ருசிக்கு நீங்கள் அடிமையாகி போவீர்கள். அந்த அளவிற்கு சுவையாக இருக்கக்கூடிய இந்த தேங்காய் துவையல் எல்லா வகையான கலவை சாதம், கார குழம்பு வகைகள் மற்றும் சூடான வெள்ளை சாதத்துடன் தொட்டுக் கொள்ள சூப்பராக இருக்கும். ருசியான தேங்காய் துவையல் எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தேங்காய் துவையல் செய்ய தேவையான பொருட்கள்:
தேங்காய் – அரை மூடி, புளி – சிறு நெல்லிக்காய் அளவு, பொட்டுக்கடலை – ஒரு டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், வறுத்த வேர்க்கடலை – ஒரு டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, வரமிளகாய் – 2, கருவேப்பிலை – ஒரு இணுக்கு, பூண்டு பல் – 4, இஞ்சி – ஒரு சிறு துண்டு, வெல்லம் – ஒரு சிறு துண்டு, உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

தேங்காய் துவையல் செய்முறை விளக்கம்:
தேங்காய் துவையல் செய்வதற்கு முதலில் அரை மூடி அளவிற்கு தேங்காயை பூ போல துருவி எடுத்துக் கொள்ளுங்கள். வேர்க்கடலை மற்றும் கடலை பருப்பை எண்ணெயில் லேசாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு அடுப்பில் ஒரு சிறு வாணலி ஒன்றை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டுக் கொள்ளுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு கடலை பருப்பு சேர்த்து லேசாக பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும். பின்பு அதே எண்ணெயில் தோல் உரித்து சுத்தம் செய்து வைத்துள்ள வேர்க்கடலையை சேர்த்து நன்கு வறுத்து அதை மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். வறுத்து வைத்துள்ள கடலை பருப்பையும் மிக்ஸியில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பின்னர் துருவி வைத்துள்ள தேங்காய், காரத்திற்கு இரண்டு பச்சை, ஒரு வரமிளகாய் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு சிறு துண்டு இஞ்சி ஒரு இன்ச் அளவிற்கு தோல் நீக்கிவிட்டு சேருங்கள். பூண்டு பல் நான்கு சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி சேருங்கள். இதனுடன் பொட்டுக்கடலை ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்துக் கொள்வது அவசியம். இந்த துவையலுக்கு ஒரு துண்டு வெல்லத்தை சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும்.

- Advertisement -

பின்னர் தேவையான அளவிற்கு உப்பு மற்றும் ஒரு சிறு நெல்லிக்காய் அளவிற்கு புளியை விதைகள், நார் நீக்கி உருட்டி எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள். புளி துவையலுக்கு ரொம்ப முக்கியமான ஒரு பொருளாகும். புளிப்பு சுவை தான் துவையலை ருசியாக மாற்றுகிறது எனவே இதனை தவிர்க்க வேண்டாம். இப்போது மிக்ஸியை இயக்கி ரொம்பவும் நைசாக இல்லாமல் கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். 80% சதவீதம் அரைப்பட்டால் போதும்.

பின்பு இதற்கு ஒரு சிறிய தாளிப்பு கொடுக்க வேண்டும். தாளிப்பு கரண்டி ஒன்றை அடுப்பில் வைத்து காய விட்டு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். பின் அரை ஸ்பூன் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். ஒரு இணுக்கு கறிவேப்பிலை, சிறிதளவு பெருங்காயத்தூள், ஒரு வர மிளகாய் கிள்ளி போட்டு தாளித்து துவையலுடன் சேர்த்தால் அவ்வளவு ருசியாக இருக்கும். நீங்களும் ஒருமுறை இதே மாதிரி ட்ரை பண்ணி அசத்துங்க.

- Advertisement -