பட்டாணி என்றாலே அனைவருக்கும் மிகவும் விருப்பமான ஒரு காய்கறி வகை ஆகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இந்த பட்டாணி குருமா அசைவ சுவையில் இப்படி ஒருமுறை செய்து கொடுத்து பாருங்கள், அடிக்கடி கேட்டு அடம் பிடிக்க ஆரம்பித்து விடுவார்கள். எல்லோருக்குமே மிகவும் பிடித்த இந்த பட்டாணியை சுவையாக மற்றும் எளிதாக குருமா செய்வது எப்படி? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

பட்டாணி குருமா செய்ய தேவையான பொருட்கள்:
பட்டாணி – ஒரு கப், மிளகு – ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், சோம்பு – ஒரு டீஸ்பூன், நறுக்கிய தேங்காய் – அரை கப், பெரிய வெங்காயம் – மூன்று, பெரிய தக்காளி – 2, பட்டை, கிராம்பு, அன்னாசிப் பூ, பிரிஞ்சி இலை, ஏலக்காய் – தலா ஒன்று, இஞ்சி, பூண்டு பேஸ்ட் – அரை டீஸ்பூன், குழம்பு மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – தேவைக்கு ஏற்ப.
பட்டாணி குருமா செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு கப் பட்டாணியை உரித்து வைத்துக் கொள்ளுங்கள். பிரஷ்ஷான தோலுள்ள பட்டாணியை எடுத்துக் கொள்வது நல்லது அல்லது காய்ந்த பட்டாணியாக இருந்தால் முன் இரவே ஊற வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் சீரகம், சோம்பு, மிளகு ஆகியவற்றை போட்டு லேசாக வறுத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி அதனுடன் தேங்காய் மற்றும் வெங்காயத்தை போட்டு வறுக்க வேண்டும். பெரிய வெங்காயம் ஒன்றை நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இதைவிட 10 சின்ன வெங்காயத்தை தோலுரித்து சேர்த்தால் இன்னும் சூப்பராக இருக்கும். இவை எல்லாம் நன்கு எண்ணெயில் வறுபட்டதும் அடுப்பை அணைத்து ஆற விட்டு ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இவற்றை சேர்த்து நைஸாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் ஒரு குக்கரை எடுத்து அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள் எண்ணெய் நன்கு காய்ந்ததும் மசாலாப் பொருட்களான பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, அண்ணாச்சி பூ ஆகியவற்றை தாளித்து கொள்ள வேண்டும். பின்னர் பொடி பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும் அரை டீஸ்பூன் அளவிற்கு இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள். பின்னர் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் நீங்கள் எடுத்து வைத்துள்ள பட்டாணியை சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம், தக்காளி, பட்டாணி எல்லாம் வதங்கி வர ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு குழம்பு மிளகாய் தூள் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு கலந்து பச்சை வாசம் போக, நன்கு யாவும் மசிய வதங்க வேண்டும். அதுவரை பொறுமையாக வதக்குங்கள். பின்னர் நீங்கள் அரைத்த கலவையை சேர்த்து ஒருமுறை நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். இப்போது தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி விடுங்கள். மூன்று, நான்கு விசில் உங்கள் குக்கருக்கு ஏற்ப விட்டு எடுத்தால் போதும், மணமணக்கும் பட்டாணி குருமா மட்டன் சுவையில் தயாராகி இருக்கும். இதே முறையில் நீங்களும் செய்து பாருங்கள், உங்களுக்கும் பிடிக்கும்.